ஓவியம்: சேகர்
ஓவியம்: சேகர்

ஆன்மிகக் கதை - பூமியில் விழுந்த யயாதி!

-பொன்னம்மாள்

குஷனின் மகன் யயாதி சொர்க்கம் சென்றார். இந்திரன் அவரை வரவேற்று, "மஹாராஜா! தாங்கள் பலவிதமான புண்ணியங்கள் செய்திருக்கிறீர்கள். தங்களை யாருடன் ஒப்பிடலாம்?” என கேட்டான்.

"எனக்கு நிகர் ஈரேழு உலகிலும் கிடையாது" என்று கர்வத்தோடு கூறினார் யயாதி. "அகந்தையால் உனது புண்ணியப் பலன் கரைந்தது. இப்போது பூமியில் விழப்போகிறாய்" என்றான் தேவேந்திரன்.

''சரி, சாதுக்கள் இருக்குமிடத்தில் என்னை விழச் செய்" என வேண்டினார் யயாதி. ஆனால், யயாதியின் பெண் வயிற்றுப் பேரர்களான அஷ்டகர், பிரதர்தனர், வஸுமான், சிபி ஆகிய நால்வர் இருக்குமிடத்தில் விழுந்தார் யயாதி.

அதைக் கண்ட அஷ்டகர், "தாத்தா! நீங்கள் இப்படி பூமியில் விழக் காரணமென்ன?" எனக் கேட்டார்.

"செருக்கு. எப்பேர்ப்பட்ட நிலை வந்தாலும் அடக்கமாயிருக்க வேண்டும் என்பதற்கு நான் பாடம். அசுர ராஜகுமாரி சர்மிஷ்டையின் மூன்றாவது மகனான பூரு என் முதுமையைப் பெற்றுக்கொண்டு இளமையைக் கொடுத்தான். சுக்ரரின் மகளான தேவயானியின் இரு பிள்ளைகளும், சர்மிஷ்டையின் மூத்த இரு புதல்வர்களும் அவர்களது இளமையைத் தர மறுத்து விட்டார்களே!” என்று பழைய ஞாபகங்களைச் சொல்லிப் புலம்பினார் யயாதி.

"பாட்டனாரே! நடுயௌவன வயதிலுள்ள உங்களுக்கே மோகம் குறையாதபோது வாலிபர்களான அவர்கள் மறுத்ததில் வியப்பென்ன? அதற்காக அவர்களைச் சபிக்கலாமா? அது பாபமல்லவா?" என்றார் பிரதர்தனர்.

"தாத்தா! 'கோபம், பாபம் சண்டாளம்' என்கிறது உபநிஷத். தேவயானி அத்தைக்குத் தெரியாமல் சர்மிஷ்டை அத்தையை நீங்கள் மணந்தது துரோகமல்லவா?" என்று கேட்டார் வஸுமான்.

அதற்கு, "வஸு! ஒரு க்ஷத்ரிய கன்னிகை அடிமையாயிருப்பது எனக்குப் பொறுக்கவில்லை. காந்தர்வ விவாகம் செய்துகொண்டேன். இல்லையேல் தேவயானி, சர்மிஷ்டையை முதுமையடையும் வரை பழி தீர்த்திருப்பாள்" என்றார் யயாதி.

''பாட்டனாரே! இளமையைப் பெற்று பல்லாண்டு காலம் விசுவாசி என்ற அப்சரஸோடு கூடியிருந்தீர்களே! உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்று அஷ்டகர் கேட்க, யயாதி மௌனமாய் தலைகுனிந்தார்.

"அதுகூடப் பரவாயில்லை. மன்மதன் ரதியின் புதல்வியான அஷ்ரு விந்துமதியைக் திருமணம் செய்துகொண்டு உல்லாசமாய் இருந்தீரே! அது இன்னும் மோசம்" என்று கடிந்தார் பிரதர்தனர்.

''சிபி! நீ ஏன் பேசாமலிருக்கிறாய்?" என்று வஸுமான் கேட்க, "போதும். பாட்டனாரின் பொறுமையை சோதித்தது ! சோதனையில் அவர் வென்று விட்டார்" என்றார் புறாவுக்குத் தன் தொடைச் சதையை அரிந்து கொடுத்த சிபி.

"தாத்தா! எங்களை மன்னியுங்கள். இந்திரன் கட்டளை.அதனால் இவ்விதம் பேசினோம். பூமியில் எவ்வளவு பட்சி, மிருகங்கள் உள்ளனவோ அவ்வளவு காலம் எனக்கு சொர்க்க வாசம் உள்ளது. அதனை ஏற்று என்னைக் கெளரவிக்க வேண்டும்" என்றார் அஷ்டகர்.

இதையும் படியுங்கள்:
ட்ரெண்ட் ஆகிவரும் பெண்களுக்கான கண்கவர் ஹெட்பேண்ட்கள்!
ஓவியம்: சேகர்

"பாட்டனாரே! தேனாறு, பாலாறு ஓடும் எண்ணிறந்த உலகம் தங்களுக்குண்டு. என்னை மன்னித்தது உண்மையானால் ஒவ்வொரு உலகிலும் ஏழுநூறு நாட்கள் வசிக்க வேண்டும்" என்று பணிவுடன் வேண்டினார் பிரதர்தனர்.

''சூரியக் கதிர்கள் எவ்வளவு தூரம் செல்கிறதோ அவ்வளவு புண்ய லோகம் எனக்குண்டு என்று பிரம்மா வரமளித்திருக்கிறார். தாத்தா அங்கேதான் தங்குவார்" என்றார் வஸுமான்.

"தாங்கள் வராமல் நான் சொர்க்கமே செல்ல மாட்டேன். உங்களை நான் தூஷித்ததில்லை" என்று சிபி கூற, "என் கண்ணே!" என்று அவரை அணைத்துக்கொண்டார் யயாதி. ஆகாயத்திலிருந்து ஐந்து விமானங்கள் வந்தன. முதல் விமானத்தில் சிபியை ஏறச் செய்தான் இந்திரன். பொறுமையாய் இருந்த யயாதி கடைசி விமானத்தில் ஏறிக்கொண்டார்.

logo
Kalki Online
kalkionline.com