சேக்கிழார் வழிபட்ட ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயில்!

Sree Nageswarar temple worshiped by Sekizhar!
ஸ்ரீ நாகேஸ்வரர்
Published on

சென்னையில் உள்ள நவக்கிரகத் தலங்களில் ராகு பரிகாரத்தலமாக விளங்குகிறது, ‘வடநாகேஸ் வரம்’ என்று அழைக்கப்படும் குன்றத்தூர் ஸ்ரீ காமாட்சியம்மன் உடனுறை ஸ்ரீ நாகேஸ்வரர் கோயில். இக்கோயில் மூலவர் ஸ்ரீ நாகேஸ்வரர், ராகு கிரகத்தின் அம்சமாகக் காட்சியளிப்பதால் ராகு தொடர்பான அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரத்தலமாக இது விளங்குகிறது.

சோழ அரசன் அனபாயன் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, அவரது அரசவையில் சிவபக்தரான ஒரு அமைச்சரின் மகன் அருண்மொழி ராமதேவர். இவரே சேக்கிழார் என்று அழைக்கப்பட்டார். சிறு வயதிலேயே மிகுந்த புலமையுடன் விளங்கிய சேக்கிழாரை, மன்னன் தனது அமைச்சரவையில் பணியமர்த்தினான். சேக்கிழாரின் பணியைக் கண்டு மகிழ்ந்த மன்னன் அவரை, ‘உத்தமசோழ பல்லவர்’ என்று சிறப்புப் பெயரிட்டு அழைத்தான். தந்தையை போலவே சிறந்த சிவபக்தரான சேக்கிழார், சிவனருள் பெற்ற அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை ‘பெரிய புராணம்’ என்ற பெயரில் தொகுத்து வெளியிட்டார்.

ஒரு சமயம் கும்பகோணம் சென்ற சேக்கிழார், திருநாகேஸ்வரம் நாகேஸ்வர பெருமானை வழிபட்டார். அதன் பிறகு, ஸ்ரீ நாகேஸ்வர சுவாமியை தினமும் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் அவருள் எழுந்தது. ஆனால், நெடுந்தொலைவுள்ள நாகேஸ்வரத் துக்கு அடிக்கடி செல்ல முடியாது என்பதால், ஸ்ரீ நாகேஸ்வரருக்கு தங்கள் ஊரிலேயே ஒரு கோயில் கட்டவேண்டும் என்று விரும்பினார். அதன்படி, ஸ்ரீ நாகேஸ்வரரின் அமைப்பில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து அவருக்கு, ‘ஸ்ரீ நாகேஸ்வரர்’ என்று பெயரிட்டு, தினமும் வழிபட்டு வந்தார். குன்றத்தூரில் அமைந்த இந்த ஆலயமே இன்று, ‘வடநாகேஸ்வரம்’ என்று அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
வைடூரியத்தின் அற்புத சக்திகள்!
Sree Nageswarar temple worshiped by Sekizhar!

மூலவர் ஸ்ரீ நாகேஸ்வர ஸ்வாமிக்கு தினமும் காலை 6.30 மணி, 10 மணி மற்றும் மாலை 5 மணி பூஜைகளின்போது பாலபிஷேகம் செய்யப்படுகிறது. நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டால் தோஷம் விலகுமென்பதும் ஐதீகம். ராகு காலத்தில் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்தும், உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் நைவேத்தியம் செய்தும் வழிபாடு செய்ய, நாகதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கோயிலில் சேக்கிழார் பிரதிஷ்டை செய்த மூலவர் ஸ்ரீ நாகேஸ்வர லிங்கம் சேதமுற்றது. இதனால் அந்த லிங்கத்தை, ஆலயத்தில் உள்ள சூரிய தீர்த்தத்தில் வைத்துவிட்டு, புதிதாக ஒரு லிங்கத்தை கருவறையில் பிரதிஷ்டை செய்தனர். அன்றைய தினம் இரவு, கோயில் அர்ச்சகர் கனவில் தோன்றிய சிவபெருமான், பழைய லிங்கத்தையே கருவறையில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினார்.

அதனால் மீண்டும் சூரிய தீர்த்தத்தில் வைக்கப்பட்ட லிங்கம் வெளியே எடுக்கப்பட்டு, கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை, ஈசன் சன்னிதி யின் பின்புறம் வழிபாட்டுக்காக வைத்துள்ளனர். இந்த லிங்கத்துக்கு, ‘அருணாசலேஸ்வரர்’ என்று பெயர். பக்தர்கள் அனைவரும் இந்த லிங்கத்தையும் மூலவராக பாவித்தே வழிபடுகின்றனர். இக்கோயிலில் அருள் பாலிக்கும் காமாட்சி அம்மன் தெற்கு நோக்கிய கோலத்தில் தனிச்சன்னிதியில் சிம்ம வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.

ஆலயத்தில் சித்திரை மாதம் பத்து நாட்கள் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவின் மூன்றாம் நாள் உத்ஸவத்தின் போது அதிகார நந்தியின் மீது அமர்ந்து வலம் வரும் சிவபெருமானும், ஐந்தாம் நாள் பிள்ளையார் ரிஷபம் வாகனத்தில் அமர்ந்து வருதலும், சிவன் மற்றும் பார்வதி, காமாட்சியம்மன், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் வலம் வரும் பஞ்சமூர்த்தி உத்ஸவம் ஏழாம் நாளிலும் நடைபெறும். திருவிழாவின் எட்டாம் நாளில் சிவன், அடியாருக்குக் காட்சி தரும் வைபவம் நடந்தேறுகிறது.

அப்போது சுவாமிக்கு முன்புறம் செல்லும் ஒரு சப்பரத்தில், அவரைப் பார்த்தபடி சமயக்குரவர்கள் நால்வர் மற்றும் சேக்கிழார் ஆகியோர் உலா வருவார்கள். சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் திருக்கல்யாண வைபோகம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. பிரம்மோத்ஸவ விழாவின் ஒரு நாள், இத்தல இறைவன் நாக வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஆலய பிராகாரத்தில் சேக்கிழாருக்கு தனிச்சன்னிதி உள்ளது. இவர் மூலவர் சிவபெருமானை தரிசித்தபடி மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். பூசம் நட்சத்திரம் அன்று இவருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும். வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தை ஒட்டி பத்து நாட்கள் குரு பூஜை விமரிசையாக நடைபெறுகிறது. அன்று காலையில் சேக்கிழார் உத்ஸவ மூர்த்தி, இங்கிருந்து தேரடி வீதிக்குச் செல்வார்.

அவரை பொதுமக்கள் சிவபெருமான் சார்பில் வரவேற்று, கோயிலுக்குள் அழைத்துச் செல்வார்கள். அதன் பிறகு சேக்கிழார் கருவறைக்குள் சென்று மூலவரை தரிசிக்கும் நிகழ்வு நடைபெறும். அன்றிரவு சேக்கிழார் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா காண்பார். மறுநாள் காலையில் கோயிலுக்குத் திரும்புவார். அப்போது இரவு முழுவதும் கோயில் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

இதையும் படியுங்கள்:
மயிலையே கயிலை கையிலையே மயிலை! மயிலாப்பூரில் அமைந்துள்ள சப்த சிவ ஸ்தலங்கள்... தரிசிப்போமா?
Sree Nageswarar temple worshiped by Sekizhar!

இக்கோயில் விநாயகர், ‘அனுக்ஞை விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். ஐந்து நிலை ராஜகோபுரத் துடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது கோயில். பிராகாரத்தில் பரவை நாச்சியாருடன் சுந்தரர் வீற்றிருக்கிறார். மேலும், நாகத்தின் வடிவில் சத்தியநாராயணர், நாகேந்திரர் மற்றும் நாகநாதேஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். இந்த மூன்று நாகங்களுக்கு மத்தியிலும் லிங்க வடிவம் உள்ளது. இவை தவிர, காசி விஸ்வநாதர், லட்சுமி, சரஸ்வதி, வள்ளி - தெய்வானை யுடன் முருகப்பெருமான், கற்பக விநாயகர், சனீஸ்வரர் சன்னிதிகளும் உள்ளன.

தல விருட்சம் செண்பக மரம். தல தீர்த்தம் சூரிய புஷ்கரணி. நாக தோஷத்தால் திருமணத் தடை, குழந்தைப்பேறின்மை போன்றவற்றால் அவதியுறுவோர் இக்கோயிலுக்குச் சென்று பலன் பெறலாமே!

அமைவிடம் : சென்னை, தாம்பரத்தில் இருந்து 12 கி.மீ., பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றத்தூர்.

தரிசன நேரம் : காலை 6.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 9 மணி வரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com