இந்தக் கோவில் திருவண்ணாமலை மாவட்டம் தென்னாங்கூர் என்ற ஊரில் உள்ள அழகான கோவில் ஆகும். இந்தக் கோவில் வட இந்திய பாணியில் கட்டப்பட்டுள்ளது. பூரி ஜெகநாதர் கோவில் அமைப்புடன் கட்டியிருப்பது இதன் சிறப்பு அம்சமாகும்.
மூலவர் பாண்டுரங்கன். தாயார் ரகுமாயி. தல விருட்சம் தமால மரம் ஆகும். கோவிலில் பின்புறம் அழகான பிருந்தாவனம் உள்ளது. இந்தக் கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா, ராஜேஸ்வரி, மகாலட்சுமி, சரஸ்வதி, சக்கரத்தாழ்வார் தட்சிணாமூர்த்தி, வன துர்க்கை, விநாயகர், முருகன், ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளன.
இங்கு கோகுலாஷ்டமி, தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆதிசங்கரர் தனது சிஷ்யன் ஞானானந்தகிரியின் கனவில் தோன்றி பாண்டுரங்கனுக்கு கோவில் அமைக்கும்படி வேண்டிக்கொண்டார். அதன்படி பாண்டுரங்கனுக்கு அமைந்த கோவிலாகும்.
கண்ணனின் லீலைகள் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணனின் ராசலீலை ஓவியங்களும் வண்ணத்தில் அழகுற இடம் பெற்றுள்ளது. கிருஷ்ணருக்கு முன்பு பக்தர்கள் அமர்ந்து தரிசனம் செய்யலாம்.
பாண்டுரங்கன் தனது இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு செங்கல் மீது நின்றபடி காட்சி தருகிறார்.அவருக்கு வலது புறம் பாண்டுரங்கன் ரகுமாயி உற்சவர் சிலையும் இடது புறம் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் சிலையும் இடம்பெற்று உள்ளது. இங்குள்ள பாண்டுரங்கன் ஒவ்வொரு நாளும் விதவிதமான அலங்காரத்தில் காட்சி தருகிறார். விட்டலன் எறிந்த செங்கல் மீது பாண்டுரங்கன் நின்று கொண்டு காட்சி தருவது சிறப்பானதாகும்.
இதே கோலத்தில் தான் பண்டரிபுரம் தென்னாங்கூர் பாண்டுரங்கன் காட்சியளிக்கிறார். இந்த கோவில் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கலை நுட்பம் கொண்ட அருமையான கோவில், அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டிய அற்புதமான கோவிலாகும்.