அனந்த பத்மநாப சுவாமி கோவில் – அறியாத தகவல்கள்!

Padmanabhaswamy Temple
Padmanabhaswamy Temple
Published on

திருவனந்தபுரம் பகுதியில் 1750ம் ஆண்டுவாக்கில் கோலோச்சிய ராஜா மார்த்தாண்ட வர்மன், தன் குடும்பத்தார், தளபதி முதலான சேனைப் பரிவாரங்களுடன் அனந்த பத்மநாப சுவாமி சந்நதிக்கு வந்து, அவரை வணங்கி, பிறகு தன் ஆட்சிக்குட்பட்ட முழு ராஜ்யம் மற்றும் தன் செல்வங்கள் அனைத்தையும் சுவாமிக்கே பட்டயம் எழுதி சமர்ப்பித்தான். அதோடு தன் உடைவாளையும் அவரது பாதத்தில் அர்ப்பணித்து, அவர் ஆசியுடன் எடுத்துக் கொண்டான். அன்று முதல் மார்த்தாண்டவர்மனும், அவன் சந்ததியாரும் தங்களை பத்மநாபதாசர் என்றே அழைத்துக் கொண்டார்கள்.

தினமும் காலையில் வந்து சுவாமியை தரிசிப்பது என்று அன்று ஆரம்பித்த வழக்கம், இன்றளவும் எந்தக் குறையுமின்றி பின்பற்றப்பட்டு வருகிறது என்பது வியப்பான தகவல். மார்த்தாண்டவர்மனின், இன்றைய வாரிசு தமக்கென்று அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வழியில் வந்து அனந்த பத்மநாப சுவாமியை தரிசனம் செய்கிறார். அந்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் பெருமாளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இன்று, பிறர் இந்த வம்சத்தினரை ராஜா என்றழைத்தாலும், இவர்கள் தங்களை பத்மநாபதாசராகவே அழைக்கப்பட விரும்புகிறார்கள்.

இக்கோயிலை நிர்மாணிக்கும் பொறுப்பை ஒரு சிற்ப வல்லுநரிடம் ஒப்படைத்தார் மகாராஜா. கோயில் மிகச் சிறப்பாக உருவாக வேண்டும் என்ற பேராவலில், மகாராஜா இந்தச் சிற்பிக்கு, குறிப்பிட்ட நாளுக்குள், தான் எதிர்பார்ப்பதுபோல, கோயில் அமையுமானால் தன் ராஜ்யத்தில் பாதியை அவருக்கு சன்மானமாக அளிப்பதாகச் சொன்னார். கோயில் பிரமாதமாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தோடு, முற்றிலும் பக்தி பூர்வமாக, கற்களைப் பதமாகச் செதுக்கி தன் பணியில் ஆத்மார்த்தமாக, தன் சீடர்கள் பலருடன் ஈடுபட்டார் சிற்பி. குறிப்பிட்ட நாளில், கோயில் பரிபூரணமாக முடிந்திருந்தது.

இதையும் படியுங்கள்:
அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தின் சிறப்புகள்!
Padmanabhaswamy Temple

கோயிலைப் பார்வையிட வந்தார் மன்னர். உடன் வந்த மந்திரியார், 'மகாராஜா, நீங்கள் எதிர்பார்த்தபடி கோயில் சிறப்பாக வடிவமைந்து விட்டது. நீங்கள் வாக்களித்தபடியே பாதி ராஜ்யத்தை சிற்பிக்கு வழங்கிவிட வேண்டியிருக்கும் என்றே நினைக்கிறேன்,' என்று தன் கவலையைத் தெரிவித்தார். மெல்லப் புன்னகைத்தார் மன்னர். 'இந்தக் கோயிலுக்கு மட்டும்தான் நான் ராஜ்யத்தையும், என் சொத்துகளையும், ஏன், என் குடும்பத்தையும், அதன் பிற்கால வாரிசுகளையும் சமர்ப்பிக்கப் போகிறேன். அதாவது இனி எந்நாளும் இக்கோயில் எங்கள் குடும்பத்தாராலேயே நிர்வகிக்கப்பட வேண்டும், பராமரிக்கப்பட வேண்டும், அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். ஆகவே இந்த ராஜ்ய சொத்தில் பாதி இன்னொருவருக்குப் போய்விட்டால், எங்கள் ராஜகுடும்ப கோயில் சேவையிலும் பங்களிக்க வேண்டியிருக்கும். அதற்கு நான் உடன்பட மாட்டேன். பாதி ராஜ்யத்தை இழக்க வேண்டாதபடி ஏதாவது தந்திரம் செய்ய வேண்டும்,' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.

கோயில் முழுவதுமாகச் சுற்றி வந்தார். மனதிலும், முகத்திலும் திருப்தி ரேகை உற்சாகமாகப் படர்ந்தது. பிறகு அமைச்சரை அழைத்தார். 'வெளிப் பிராகாரத்தில் சிற்பி உருவாக்கியிருக்கும் பாவை விளக்குகளின் கைகளில் உள்ள விளக்குகளை, நீளமான கயிற்றால் அடுத்தடுத்து கோத்துப் பாருங்கள். அதில் ஏதேனும் ஏற்றத்தாழ்வு இருந்தால், இந்தப் பாவை விளக்குகள் எல்லாம் ஒரே சீரான வரிசையில், உயரத்தில் இல்லை என்பது புலப்படும். அப்படி சீராக இல்லாத பட்சத்தில் இதனைச் சிற்பக் குறையாகவே கருதலாம். அதனாலேயே கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் போகலாம்,' என்று அறிவித்தார். அதன்படி அளந்து பார்த்தபோது, லேசான ஏற்றத் தாழ்வு இருந்தது; சிற்பிக்கும் பாதி ராஜ்யம் மறுக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
உடும்பின் வால் போன்று காட்சி தரும் திருமாகறலீஸ்வரர்!
Padmanabhaswamy Temple

ஆனாலும், சிற்பியின் கலைத்திறனை அங்கீகரிக்கும் வகையில், அவர் பத்மநாப சிற்பி என்று அழைக்கப்படுவார் என்றும், அந்தக் கோயிலின் எந்த அபிவிருத்திப் பணிக்கும் அவரையோ அல்லது அவரது சந்ததியாரையோ மட்டுமே சேவையாற்ற அழைப்பது என்றும் விதி செய்தார், மன்னர். இதற்கு சாட்சியாக, இப்போதும் பலிபீடத்துக்கும் துவஜஸ்தம்பத்துக்கும் நடுவே தரையில், மல்லாந்து படுத்த நிலையில், பத்மநாப சிற்பி தன் கையில் மட்டப் பலகையைப் பற்றிக் கொண்டும், உடன் மனைவியுடனும் சிற்பங்களாகக் காட்சியளிக்கிறார்.

இவ்வாறு ஒரு வருடத்தின் நாட்களைக் குறிக்கும் வகையில் மொத்தம் 365 கலைநயமிக்க தூண்கள் அமைந்திருக்கின்றன. இந்தத் தூண்களில்தான் பாவை விளக்குகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. துல்லியமாகக் கணக்குப் பார்ப்பவர்கள் ஒரு வருடத்துக்கு 365 1/4 நாட்களாயிற்றே என்று கேட்பார்களானால், அதற்கும் பதில் இருக்கிறது. இந்த 1/4 தூண், மூலவர் கருவறைக்குள் அவரை நாம் தரிசிக்கப் போவதற்கு முன்னால் காணப்படுகிறது. கால்தூண் என்றால் உயரத்தில் அல்ல; பருமனில்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com