

இறை அருள் பெற்றவர்கள் இருவகை. ஒன்று கடும் தவத்தால் இறைவனை கண்டு அருள் பெற்றவர்கள். அடுத்தவகை இறைவனை மனதினுள் முழுவதுமாக நம்பிக்கையுடன் ஏற்று அருள் பெற்றவர்கள். நான் இரண்டாம் வகைதான்.
ஆம், பகவான் சத்தியசாய் பாபா அவர்களை வெகு தொலைவில் நின்று மூன்று முறைதான் தரிசித்து இருக்கிறேன். ஆனாலும் அவர் துளி அருட்பார்வை என் மீது விழுந்திருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்...
காரணம் 2000 ம் ஆண்டில் நான் பணி புரிந்த கம்பெனி இழுத்து மூடப்படுகிறது. நூற்றுக்கணக்கானோர் வேலை இழக்கிறோம். அப்போது என் உறவினர் ஒருவர் என் மீது இரக்கம் காட்டி துபாய்க்கு விசா எடுத்துக்கொடுக்க நானும் செல்கிறேன். அப்போது நான் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறேன். யாராவது எதையாவது கேட்டாலும் உடனே புரிந்து கொள்ள முடியாத மனநிலை. மூன்றுமாத விசா.
ஒரு மாதம் துபாயில் ஒரு உறவினர் வீட்டில் தங்கி கழித்து விட்டேன். பல கம்பெனிகளுக்கு விண்ணப்பம் செய்தும் வேலை கிடைக்கவில்லை. காரணம் நான் கணக்கு பிரிவில் பணி புரிந்தவன். கம்யூட்டர் அறிவு சுத்தமாக இல்லை. அதுவே பெரும் தலைவலியாகியது. பின் இன்னொரு உறவினர் என்னை அபுதாபிக்கு அழைத்து சென்றார். அங்கு வாரம் வாரம் வியாழக்கிழமை அன்று சிறப்பாக பாபா பஜனை நடக்கும். பலர் கலந்து கொள்வார்கள்.
அப்போது பாபாவின் எழுபத்து ஐந்தாவது ஜன்ம தின ஆண்டு. அதனால் எழுபத்து ஐந்து லட்சம் நாமாக்கள் எழுதிய புத்தகம் அவரிடம் அளிக்க பாபா பக்தர்கள் தீர்மானம் செய்து அதற்கான ஒரு நோட் புத்தகத்தை பிரிண்ட் செய்து பல இடங்களுக்கும் அனுப்பி இருந்தார்கள். அப்படித்தான் நானும் இன்னும் பலரும் விரும்பி அந்த நோட் புத்தகத்தை வாங்கி சென்றோம். ஒருவாரம் முழுதும் பாபா நாமத்தை எழுதினேன். பிறகு அடுத்த வியாழன் அன்று அதை பாபாவின் பொற்பாதங்களில் சமர்ப்பித்தேன். அதன் படி ஐந்து வாரங்கள் தொடர்ந்து எழுதி பாபாவின் பாதங்களில் சமர்ப்பனம் செய்தேன். அப்போது கிட்டத்தட்ட இரண்டு முழுமாதங்கள் பூர்த்தியாகிவிட்டன. விசா முடிய இருபத்து ஐந்து நாட்களே இருந்தன.
நான் மிகவும் மனதினுள் அழுது புலம்பி பாபாவை ஆத்மார்த்தமாக வேண்டி கடைசியாக அவர் பாத கமலங்களில் சமர்ப்பணம் செய்த புத்தகத்தில் என் வேண்டுகோளை ஒரு வெள்ளை தாளில் எழுதி அதை அவர் முன் சமர்ப்பணம் செய்தேன்.
"பாபா விசா முடிய இருக்கிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். வயதோ நாற்பத்தெட்டு. எனக்கோ கம்யூட்டர் அறிவு வேறு இல்லை. மனைவியின் வருமானத்தில் குடும்பம் ஓடுகிறது. இனியும் ஒரு முறை துபாய் வரும் வாய்ப்பு கிடைக்காது. இந்தியாவிலும் வேலை கிடைப்பது கடினம். அருள் கூர்ந்து நீதான் எனக்கு வேலை வாங்கி தர வேண்டும்"
என்று அழுத கண்களுடன் எழுதி இருந்தேன். மறுநாள் பாபு என்ற நபர் ஒரு விஷயம் கூறினார். சார் ஐந்து வாரம் பாபா பஜன் சென்றும் இன்னுமா வேலை கிடைக்கவில்லை. நாளை வெள்ளிக்கிழமை பாபாவின் சுப்ரபாத நிகழ்வு இருக்கிறது. அதில் கலந்து கொண்டவர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும் என்று அழைத்து சென்றார்.
விடியற்காலை புறப்பட்டு பாபா சுப்ரபாதம் கலந்துகொண்டேன். என்ன ஆச்சர்யம் நான் துபாய் வந்த புதிதில் முயற்சித்த கம்பெனியின் மேனேஐர் ஞாயிறு அன்று இன்டர்வ்யூ வருமாறு பணித்தார். நானும் துபாய் சென்றேன். பாபாவின் பேரருளால் அடியேனுக்கு அந்த கம்பெனியில் வேலை கிடைத்தது.
அடுத்து வந்தது சோதனை. 2002 ஆம் ஆண்டு கேன்சரால் பாதிக்கப்பட்டேன். அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். கிட்டத்தட்ட ஐந்துமாதங்கள் விடுப்பு எடுத்து விட்டேன். ஆறு மாதத்துக்குள் துபாய் சென்று விடவேண்டும். இல்லை என்றால்; அடுத்த ஆறு மாதம் அந்த நாட்டிற்குள் செல்ல முடியாது. வேலையும் போய்விடும். சென்னை அப்போலோவில் முக்கிய முழுஉடல் ஸ்கேன். அவர்கள் அறுவை சிகிச்சைக்கு பிறகு கேன்சர் செல்கள் முழுவதுமாக அழிந்து விட்டதாக கூறினால்தான் நான் நிம்மதியாக வேலைக்கு செல்ல முடியும். அன்று அந்த ஸ்கேன் எடுக்க சென்றேன். அய்யகோ பெரும் துன்பம். ஸ்கேன் ரிப்பேராம். ஐர்மனியில் இருந்து பொறியாளர்கள் வரவேண்டும் என்று சொன்னார்கள். நான் அழுதே விட்டேன்.
உடன் அவர்கள் ஏற்பாடு செய்து எனக்கும் என்னை போன்ற வேறு சிலருக்கும் மாற்று ஏற்பாடாக புகழ்பெற்ற கிரிஸ்டியன் மருத்துவமனைக்கு ஸ்கேன் செய்வதற்காக அனுப்பி வைத்தார்கள். ஒவ்வொரு இடத்திலும் நான் மதிக்கும் ஏசுநாதரை கண்டேன். அன்னை மரியாவை கண்டேன். ஸ்கேன் அறை. எனக்கு ஸ்கேன் செய்யப்படுகிறது. "பாபா நீ அருள மாட்டாயா" என்று அழுகிறேன். எடுப்பவர் கொஞ்சம் திரும்பி படுங்கள் என்கிறார். நானும் திரும்புகிறேன். அதிசயம்.
நம்ப முடியாத ஆச்சர்யம். ஆம் அந்த அறையில் நான் ஏசுவையோ மரியாவையோ காணவில்லை. மாறாக கைகளால் ஆசி கூறும் பெரும் பாபா போட்டோவை கண்டு மெய் சிலிர்த்தேன். இது சத்தியமான உண்மை.
பாபா மகான். அற்புதம் ஆற்றக்கூடியவர். சீரடி சாய்பாபாவின் மறு அவதாரதம். நம்பியவர்களை பாபா ஒரு போதும் கைவிடுவதே இல்லை. இன்றும் அது நடக்கத்தான் செய்கிறது. இது சத்தியமான உண்மை.
பாபாவின் அருள் என்றும் நாடும்
முருகன்