பசப்பாவுக்கு கற்களே காணிக்கை!

காடு பசப்பா சிவன் ஆலயம் ...
காடு பசப்பா சிவன் ஆலயம் ...

ர்நாடக மாநிலம், மண்டியா தாலுகாவில் கோடிகல்லின காடு பசப்பா என்ற பெயரில் சிவன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் 500 ஆண்டுகள் பழைமையானது. 500 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் இருந்த மக்கள் விவசாயத்தைப் பிரதான தொழிலாக செய்துவந்தனர். மேலும், கால்நடைகளையும் வளர்த்து வந்தனர்.

விவசாயம் செழிக்கவும் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடவும் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பவும் வேண்டி காட்டுப்பகுதியில் லிங்கம் வடிவில் இருந்த கல்லை பசப்பாவாக (சிவனாக) நினைத்து பூஜித்து வேண்டினர். அவர்கள் வேண்டியபடி மழை பொழிந்து ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரி, குளம், குட்டைகள் நிரம்பின.

ஆனால், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய பசப்பாவுக்கு காணிக்கை செலுத்த விவசாயிகளிடம் ஒன்றுமில்லை. வறுமையால் வாடிய அவர்கள் தங்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களில் இருந்து மூன்று கற்களை எடுத்து வந்து, பசப்பாவுக்கு காணிக்கையாகக் கொடுத்தனர். விவசாயிகள் கொடுத்த அந்தக் காணிக்கையை சிவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாராம். அது முதல்  காடு பசப்பா கோயில் என்றும் கோடி கல்லு பகுதியில் அமைந்திருப்பதால் இந்த ஆலயம் கோடிகல்லின காடு பசப்பா கோயில் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

இங்கு வீற்றிருக்கும் சிவன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்றும் பக்தர்கள் வேண்டிய காரியங்களை அவர் நடத்தி வைப்பார் என்றும் கூறப்படுகிறது. பல சிறப்புகள் மிக்க இந்தக் கோயிலில், சிவனுக்கு திருவுருவமும் இல்லை; கோயிலுக்கு என்று பூசாரிகளும்
பூஜை முறைகளும் எதுவும் இல்லை!

பக்தர்கள் நேரில் சென்று அங்கு கல்வடிவில் வீற்றிருக்கும் சிவபெருமானிடம் வேண்டிவிட்டு செல்கிறார்கள். தாங்கள் நினைத்தபடி பூஜை செய்கிறார்கள் வேண்டுதல் வைக்க வரும் பக்தர்கள் அனைவரும் காணிக்கையாக சிவனுக்கு கற்களைத்தான் கொடுத்து வருகிறார்கள். அதுவும் அவர்களுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள கற்களைத்தான் காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

இத்தனை பெரிய கல்லைத்தான் காணிக்கையாக கொடுக்க வேண்டும் என்று எந்த உத்தரவும் கிடையாது. பக்தர்கள் தங்களுடைய நிலங்களில் இருந்து மூன்று அல்லது ஐந்து கற்களை எடுத்து வந்து காணிக்கையாகக் கொடுக்கலாம். அந்தக் கற்களை தாங்களாகவே சுமந்து வந்துதான் செலுத்த வேண்டும். அது மிகச் சிறிய கற்களாக இருந்தாலும் சரி, பெரிய கற்களாக இருந்தாலும் சரி, எந்தக் கல்லாக இருந்தாலும் அதை சிவன் காணிக்கையாக ஏற்றுக்கொள்வார்.

ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அன்று சிறப்பு பூஜை நடக்கும் அன்று கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டு தங்களால் முடிந்த சிறிய அல்லது பெரிய அளவிலான கற்களைக் கொண்டுவந்து சிவனுக்கு காணிக்கையாகச் செலுத்துவார்கள்.

இதையும் படியுங்கள்:
‘அரங்கா, உன் அன்புக்கு நாங்கள் என்றுமே அடிமை!’
காடு பசப்பா சிவன் ஆலயம் ...

சிவனின் திருவுருவமாகக் கருதப்படும் லிங்க வடிவத்தை ஒத்த அந்தக் கல் வெட்டவெளியில்தான் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலுக்கு என்று கோபுரங்களோ, சன்னிதிகளோ கிடையாது. மேலும், இங்கு கோயில் கட்டினால் அது சிவனுக்கு எதிரானது என்று மக்கள் நம்புகிறார்கள்.

கோயிலைச் சுற்றி கற்குவியல்கள் மட்டுமே கிடக்கின்றன. ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த சிவபெருமானை வழிபட்டு வந்தால் திருமணத் தடை, குடும்பப் பிரச்னை, சொத்துப் பிரச்னை நீங்கி, வேண்டிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

மண்டியா தாலுகா, கிரகண்டூர் பேவினஹள்ளி சாலையில் கோடிகல்லின காடு பசப்பா கோயில் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com