ஸ்ரீ அரங்கன் தம் நேசமிகு ஸ்ரீரங்கத்துக்கு 48 வருடங்கள் வனவாசம் முடிந்து திரும்பி வந்த நாள் இன்றுதான். வைகாசி 17ம் நாளை பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கவாசிகள் மட்டுமல்ல, இந்த வையகத்தில் உள்ளோர் அனைவருமே உள்ளத்தில் உவகையோடு எண்ணி பார்க்கும் நாள் ஆகும்.
அரங்கா, அழகிய மணவாளா 1323ம் ஆண்டு, உனக்கு மிகவும் உகந்த பங்குனி உத்ஸவத்தின் எட்டாம் திருநாள் திருவிழா எப்போதும் போல, ‘ரங்கா ரங்கா’ கோஷத்தோடு உமது அரங்கத்தில் நடந்து கொண்டிருந்தபோது, இடியாய் பக்தர்களின் காதுகளில் ஒரு செய்தி எட்டியதே. எங்கேயோ இருந்த முகலாயப் படை இதோ அரங்கனின் சொத்தையும், நகைகளையும், அவனின் அடியவர்களின் பெரும் சொத்தான உத்ஸவ பெருமாளான உன்னை, அழகிய மணவாளனை களவாடிச் செல்ல காவிரி கரையோரம் படை எடுத்து வரும் செய்தி பக்தர்களின் காதோரம் வந்து சேர, துடிதுடித்து போனார்களே.
அரங்கா, உனது அடியவர்களின் உணவும் நீயே, உள்ளமும் நீயே, உணர்வும் நீயே, உண்மையான சொத்தும் நீ தானே… ரங்கனை விட்டால் வேறு எதுவும் தெரியாத , அறியாத அரங்கவாசி அல்லவா அவர்கள்? உன்னை நேசிப்பதும் உனக்காக பாசுரங்களை வாசிப்பதும் மட்டுமே அவர்கள் அறிந்த விஷயங்கள்.
‘நம்மைக் காக்கும் ரங்கனை, அவனின் உத்ஸவரான அழகிய மணவாளனை எங்கள் உயிரைக் கொடுத்தேனும் காத்திடுவோம்’ என்று சங்கல்பித்து கொண்டனரன்றோ அன்றோ சத்ய சங்கல்பனின் பக்தர்கள்? அன்று 12,000 வைணவ அடியார்கள், ரங்கனுக்காக உயிர் தியாகம் செய்ய, பிள்ளை லோகாச்சாரியர் தம் சீடர்களுடன் உத்ஸவரை எடுத்துக் கொண்டு, ஸ்ரீ ரங்கத்திலிருந்து இரவோடு இரவாக விண்ணில் இருக்கும் நிலவின் துணையோடும், நிலத்தில் தம்மோடு இருக்கும் அந்த இறைவனின் துணையோடும் தெய்வம் துணைக்காட்டிய திக்கில் அரங்கனின் உத்ஸவ விக்ரஹத்தை காப்பாற்ற 48 ஆண்டுகள், காடுகளிலும், மேடுகளிலும், பள்ளங்களிலும் இருந்த வரலாற்றை ஆன்மிக உலகம் இன்றும் நன்றிப் பெருக்கோடு நினைவு கூர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
1323ம் ஆண்டு ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு1325ம் ஆண்டு வரை ஜ்யோதிஸ்குடியில் அருள்பாலித்து,1326ம் ஆண்டு வரை கோழிக்கோடில் இருந்து,1327 வரை திருக்கணாம்பியிலிருந்து,1327, 1328 புங்கனூர் வழியாக மேல்கோட்டை (கர்னாடகம்) சென்று 1343ம் ஆண்டு வரை திருநாராயணபுரத்தில், 15 ஆண்டுகள் வாசம் செய்த திருவரங்கா, பின் 1344 முதல் 1370 வரை சந்திரகிரி காடுகளிலும் திருமலையிலும் 26 ஆண்டுகள் அருள்பாலித்து, பின் 1371ம் ஆண்டு செஞ்சி, அழகிய மணவாளம் கிராமத்திற்கு வந்து திரும்பவும் வைகாசி மாதம் 17ம் நாள் உன் அரங்கமாம் திருவரங்கத்திற்கே வந்து சேர்ந்த திருவரங்கா, ‘நம் பெருமாளே’ உம் சரணமே கதி.
நித்யம் ஸ்ரீ ரங்கத்திலேயே இருந்தபடி எங்களுக்கு அருள்செய்ய வேண்டும் என்று உனக்குதான் எவ்வளவு ஆசை? அதனாலன்றோ உன்னை காப்பாற்றிக் கொள்ள, இன்றளவும் எங்களை காத்தருள 48 ஆண்டுகள் பல இடங்களில் மறைந்திருந்து , உன்னை நீ காத்துக் கொண்டு எங்களையும் இன்றுவரை நீ காத்துக் கொண்டிருக்கிறாய். அரங்கா உன் அன்புக்கு நாங்கள் என்றுமே அடிமை!