
சைவ சமயத்தைப் போற்றி வளர்த்த நாயன்மார்களுள் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் பாடல்களின் தொகுப்பே தேவாரம் மற்றும் திருவாசகம் என்று கொண்டாடப்படுகிறது. இந்தப் பாடல்கள் தோன்றியதில் அதாவது பாடப்பட்டதற்கு பின்னால் நிறைய சுவாரஸ்யமான கதைகள் அடங்கியுள்ளன. அப்படி ஒரு கதையை இங்கு பார்க்கலாம்.
“பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா” என்ற பாடலை நாம் அனைவருமே கேட்டிருப்போம். இந்தப் பாடல் பிறந்ததற்குப் பின்னால் மிக மிக சுவாரஸ்யமான ஒரு கதை உள்ளது.
சமயக்குரவர்கள் நால்வருள் சுந்தரரின் வாழ்வியலோடு இயைந்த இந்தக் கதையைத் தடுத்தாட்கொண்ட புராணம் என்று பெரிய புராணம் குறிப்பிடுகிறது.
திருக்கயிலாயத்தில் ஆலால சுந்தரர் என்ற பெயரில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமானுக்குத் தொண்டாற்றி வந்தார். அதேபோல் அன்னை பார்வதிக்கு அநிந்திதை, கமலினி என்ற பணிப்பெண்டிர் தொண்டாற்றி வந்தனர்.
ஒருநாள் இந்த இரு பணிப்பெண்டிரும் தோட்டத்தில் மலர்களைக் கொய்யும்போது அங்கே வந்த சுந்தரர், தன்னை மறந்து அநிந்திதை, கமலினி மேல் தன் மனத்தைச் செலுத்தினார்.
முற்றும் உணர்ந்த சிவபெருமான் இதை உணராமல் இருப்பாரா? இதை அறிந்த சிவபெருமான் சுந்தரரிடம்,
“உன் கடமையை மறந்து பெண்ணின் மேல் இச்சை கொண்டதால் மண்ணுலகில் மனிதனாகப் பிறந்து அவர்களுடன் இன்புறுவாயாக,” என்று கட்டளையிட்டார். ஆலால சுந்தரர் இதைக் கேட்டுப் பதறினார்.
“தெரியாமல் தவறு செய்துவிட்டேன். நான் பூலோக வாழ்வில் மயங்கி இல்லற வாழ்வில் ஈடுபடும்போது நீரே என்னைத் தடுத்து ஆட்கொள்ள வேண்டும்,” என்று வேண்டி நிற்க, சிவபெருமானும் அதற்கு ஒப்புதல் அளித்தார்.