நாவுக்கரசர் கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறிய இடம் எங்குள்ளது தெரியுமா?

மாயையான இவ்வுலக வாழ்வில் எத்தகைய துன்பம் வரினும் அதிலிருந்து மீண்டு வர உதவுவது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரமே என்பதை உணர்த்தும் பதிகம்.
திருநாவுக்கரசர்
திருநாவுக்கரசர்
Published on
deepam strip

மருணீக்கியார் என்ற இயற்பெயருடைய திருநாவுக்கரசர் (அப்பர்), இளமைப் பருவத்தில் சமண சமயத்தைத் தழுவி தருமசேனர் என்று அழைக்கப்பட்டார். இவரின் சகோதரி திலகவதியார் சிறந்த சிவ பக்தர். தன் தம்பி சைவ சமயத்தைவிட்டு சமணத்தைச் சார்ந்ததை எண்ணி வருந்தி, ஈசனிடம் முறையிடுகிறார்.

ஒரு முறை நாவுக்கரசர் கடுமையான வயிற்று வலியால் துடிக்கும்போது, திலகவதியார் அவரை சிவனைப் பிரார்த்திக்கச் சொல்கிறார். தமக்கையின் ஆலோசனையை ஏற்று சிவனை வழிபட்டு, தன் நோய் குணமானதும் சைவ சமயத்தவராகி திருநாவுக்கரசர் என்று போற்றப்படுகிறார்.

சமண சமய நூல்களைக் கற்றுத் தேர்ந்து, அம்மதத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த தருமசேனர், சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் எனக் கொண்டாடப்படுவதை அறிந்த சமணர்கள், அவருக்குப் பலவித இன்னல்களை விளைவிக்கின்றனர்.

மகேந்திரவர்ம பல்லவ மன்னனிடம் முறையிட்டு, நாவுக்கரசரைத் தண்டிக்கச் சொல்லி வலியுறுத்தினார்கள். சமணர்களின் தூண்டுதலால் மனம் தடுமாறி, மன்னனும் நாவுக்கரசரைக் கொல்வதற்காக சுண்ணாம்புக் காளவாயில் போட்டான். எத்துயர் வரினும் சிந்தையில் சிவனே நிறைந்திருப்பார் என நாவுக்கரசர் சுண்ணாம்புக் காளவாயிலிருந்து பிழைத்து வந்தார்.

கோபமடைந்த சமணர்கள் விஷம் கலந்த உணவை அவருக்குக் கொடுத்தனர். அதுவும் அவரை ஒன்றும் செய்யவில்லை. எப்படியாவது அவரைக் கொல்ல வேண்டும் என்ற ஆவேசத்தில் பட்டத்து யானையை அவர்மீது ஏவினார்கள். அதுவும் அவரைக் கண்டதும் வீழ்ந்து வணங்கியது. பட்டத்து யானையே நாவுக்கரசரை வணங்கிய செய்தி ஊருக்குள் தெரிந்தால் மன்னனுக்கு இழுக்கு என்று கூறி மன்னனின் கோபத்தைத் தூண்டினார்கள் சமணர்கள்.

சிந்தை செயலிழந்த மன்னனும், சற்றும் யோசிக்காமல் நாவுக்கரசரைக் கல்லோடு கட்டி கடலில் வீசச் செய்தான். எதற்கும் கலங்காத நாவுக்கரசர், எந்தச் சூழ்நிலையிலும் சிவபெருமானைப் பாடுவேன் எனக் கூறி, “சொற்றுணை வேதியன்,” எனத்தொடங்கும் பதிகத்தைப் பாடினார். அவரோடு பிணைத்திருந்த கல்லே தெப்பமாகி, அவரைப் பத்திரமாகக் கரை சேர்த்தது.

“சொற்றுணை வேதியன் சோதி வானவன்

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணையாவது நமச்சி வாயவே.”

மாயையான இவ்வுலக வாழ்வில் எத்தகைய துன்பம் வரினும் அதிலிருந்து மீண்டு வர உதவுவது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரமே என்பதை உணர்ந்து, இப்பதிகத்தைப் பாடி உயிர் தப்பினார் நாவுக்கரசர்.

பத்து பத்திகளைக் கொண்ட இப்பதிகத்தின் கடைசி வரியில்,

“நாப்பினைத் தழுவிய நமச்சி வாயப்பத்து

ஏத்தவல் லார்தமக்கு இடுக்கண் இல்லையே” என்று முடிக்கிறார்.

பெரியபுராணம் “நமச்சிவாயப் பதிகம்” என்றே இப்பதிகத்தைக் குறிக்கிறது. பன்னிரு திருமுறைகளில் நான்காம் திருமுறையில் இப்பதிகம் இடம்பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
சிவபெருமான் அப்பருக்கு திருக்கைலாயக் காட்சி கொடுத்த கதை தெரியுமா?
திருநாவுக்கரசர்

நாவுக்கரசர் கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறிய இடம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர் மாவட்டம்) அருகே “கரையேற விட்டகுப்பம்” என்று இன்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்திற்கு வண்டிப்பாளையம் என்ற பெயரும் உள்ளது.

இங்கு கரையேறிய அப்பர் பெருமான் திருப்பாதிரிப்புலியூரில் அருள்புரியும் பாடலீஸ்வரரை வழிபட்டார். இந்நிகழ்வை இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் விழாவாக இங்கு கொண்டாடுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com