சுடர்க்கொடி, ஏன் சூடிக் கொடுத்தாள்?

Vishnu and Andal flower garland story
Vishnu and AndalImg Credit: Pinterest
Published on

மலர்க் கரங்கள் மலர்ச் சரத்தைத் தொடுத்துக் கொண்டிருந்தன. தளிர் விரல்களின் மென்மை பட்டு, பனிப் பூக்கள் பரவசம் எய்தின. ஒரே செடியில் ஒன்றாக மலர்ந்தும், தனித்தனியே பிரிக்கப்பட்டதால் வேதனை அடைந்த பூக்கள் இப்போது ஒன்றாய்த் தொகுக்கப்படுவதில் குதூகலம் கொண்டன. அந்த உதிரிப் பூக்களுக்கு, மாலையாக உருவாகும்  சந்தோஷம்! இறைவனின் தோளைத் தழுவப் போகும் ஆனந்தம்!

அந்த மென்மையான விரல்களுக்கு உரியவள் ஆண்டாள் என்ற கோதை… பூங்கோதை…. மலரினும் மென்மையான இளந்தளிர்…. அப்பா பெரியாழ்வார், அதிகாலைப் பொழுதிலேயே நந்தவனத்திலிருந்து பறித்தெடுத்து, கொடுத்துவிட்டுப் போன மலர்களை, பூக்கூடையிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து, வண்ணம் பிரித்து அழகான மாலையாக உருவாக்கிக் கொண்டிருந்தாள் ஆண்டாள். தந்தையாரின் இறைச் சேவைக்கு அவளால் ஆன உதவி! 

ஸ்ரீவில்லிப்புத்தூர் திருக்கோயிலில் திருச்சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் எம்பெருமான் வடபத்ரசாயியின் திருமேனியை ஆண்டாள் தொகுத்துக் கொடுத்த மலர் மாலைதான் தினமும் அலங்கரித்தது. 

அவளுடைய உதவியால் மலர்களைத் தொகுக்கும் பணி மட்டுமல்லாமல், தானும் தாமோதரனை வாசனையுடன் தழுவும் ஆனந்தம் கொண்டது நார். ஆமாம், அந்தப் பூக்களோடு சேர்ந்த நாரும், நாறும்தானே! அதுமட்டுமா, மலர்களை இணைத்திருப்பது தான்தான் என்றாலும், அந்த கர்வம் விலக்கி, மலர்களுடன் மட்டும் முடிச்சு உறவு கொண்டு, அவற்றினூடே அடக்கமாக மறைந்திருந்தது அந்த நார்.

இரண்டு பக்கமும் தன் உயரத்துக்கு நீண்டுவிட்ட அந்த மாலையை மெல்லத் தூக்கினாள் ஆண்டாள். அதைப் பெருமிதத்துடன் பார்த்தாள். இதென்ன, ஒவ்வொரு மலரிலுமிருந்து மாயவன் தோன்றி, சிரித்து மயக்குகிறானே!

அட, மலர்களில் மட்டுமா, காணும் இடங்களில் எல்லாம் அந்த நந்தலாலாதான்…. வீட்டில் உள்ள எல்லா பொருட்களும் அவனாகவே மாறிவிட்ட மாயம்… என்ன விந்தை இது! கல்லுரலும், கடப்பாரையுமா கண்ணனாகும்! 

அந்தந்தப் பொருட்களின் அதே வடிவில், அதே வண்ணத்தில் ஆநிரை அனந்தன்! வீட்டுச் சுவர், தூண்கள், அலமாரி, பிறை மாடம், பாத்திரங்கள், பண்டங்கள் என்று எல்லா அஃறிணைப் பொருட்களும் அரங்கனாகவே மாறிவிட்ட பேரதிசயம்!

ஆண்டாள் முகம் வெட்கத்தால் சிவந்து மலர்ந்தது. குப்பென்று மனசுக்குள் புகுந்த நாணம் அவளுடைய நடையைத் தளரச் செய்தது. ஆமாம், எங்கெங்கு நோக்கினும் ரங்கன். அத்தனை ரங்கன்களும் அவளையே, அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், புன்னகைக்கிறார்கள், இரு கரம் நீட்டி அவளை அழைக்கிறார்கள்…. அத்தனை ரங்கன்களுக்கும் நடுவே தனியளாக ஆண்டாள்!

பூஜையறையை நோக்கிப் போகும் வழியில் சுவர் ஓரமாக ஒரு கண்ணாடி. அதைக் கடந்த அவள், சட்டென்று நின்றாள். தன்னோடு கடந்து வந்தது, கண்ணாடியில் பிம்பமாகத் தோன்றியது யார்?

தயங்கினாள். பின்னடி எடுத்து வைத்தாள். கண்ணாடி முன் நின்றாள். அப்படியே அதிசயித்து நெகிழ்ந்தாள். 

தன் முன்னால் நிற்பவரை பிரதிபலிப்பதுதானே கண்ணாடியின் இயல்பு? ஆனால் இதென்ன, முன்னே நிற்கும் தன்னை பிரதிபலிக்காமல் கண்ணனை அல்லவா காட்டுகிறது கண்ணாடி! உள்ளம் குறுகுறுக்க கண்ணாடியையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். 

கண்ணாடியில் தோன்றிய பிம்பக் கண்ணனைக் கண்டு பொங்கிச் சிரித்தாள். அட, கண்ணனும் அதேபோல சிரிக்கிறானே! தான் காண்பது உண்மைதானா என்ற சந்தேகத்தில் தன் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டாள் ஆண்டாள். அடடே, பிம்பக் கண்ணனும் தன் கையைக் கிள்ளிப் பார்த்துக் கொள்கிறானே! செயல்கள் எல்லாம் ஒரே மாதிரிதான் பிம்பிக்கின்றன, ஆனால் உருவங்கள் வேறு! இது என்ன அதிசயம்! 

இதையும் படியுங்கள்:
வாராகியின் பரிபூரண அருள் ஆஷாட நவராத்திரி! (ஜூலை 6 முதல் ஜூலை 15 வரை)
Vishnu and Andal flower garland story

கண்ணாடிக்குள் கண்ணன்தான் இருக்கிறானா என்பதை அவள் ‘உறுதி‘ செய்து கொள்ள விரும்பினாள். தான் ஏந்தி வந்த பூமாலைத் தட்டை பக்கத்தில் வைத்தாள். கண்ணனும் அப்படியே பக்கத்தில் வைத்தான். தட்டிலிருந்து மாலையை எடுத்து உயரே தூக்கிப் பிடித்தாள். அவனும்!

சட்டென்று ஆண்டாளுக்கு ஒரு யோசனை. இந்த மாலையை கண்ணாடி மேல் சாத்தினால் அதை கண்ணன் ஏற்றுக் கொள்வானா?

உடனே அந்த மாலையை கண்ணாடி மேல் சாற்றினாள். ஆனால் அது சரிந்து கீழே விழப் பார்த்தது. லாகவமாக அதைப் பற்றிக் கொண்டாள் ஆண்டாள். ஆமாம், அது ஜடமான கண்ணாடிதான். ஆனால் பிரதிபலிப்புதான் கண்ணன்! ஆக, கண்ணாடி ஏற்றுக் கொள்ளாத மாலையை கண்ணன் ஏற்றுக் கொள்ள என்ன செய்யலாம்?

எல்லாப் பொருட்களிலும் நிறைந்திருக்கும் கண்ணனின் கழுத்தில் மாலை நிற்க வேண்டுமானால், அந்த பிம்பத்தை உருவாக்கிய தான் அதை அணிந்து கொள்வதுதான்தான் சரி! உடனே அந்த மாலையைத் தான் அணிந்து கொண்டாள். அட, பிம்பக் கண்ணன் கழுத்திலும் அதே மாலை! எத்தனை ஒய்யாரமாக, கர்வமாக சூடியிருக்கிறது! தன் இருபக்கமும், தான் அணிந்திருக்கும் மாலை சம உயரத்தில் இருக்கிறதா என்று ஆண்டாள் பார்க்க, அதையே கண்ணனும் செய்தான். 

சரிதான், பிம்பம் கண்ணனேதான்! அப்படியே நெகிழ்ந்து போனாள் ஆண்டாள். 

இவ்வாறு தினந்தோறும் மாலையைத் தான் சூடிக்கொண்டு இந்த நெகிழ்ச்சியில் ஆண்டாள் ஆழ்ந்து போக, ஒருநாள் பெரியாழ்வார் அதைக் கண்டு பிடித்து, அவள் அபசாரம் செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். ஆனால் ஸ்ரீவில்லிப்புத்தூர் நாயகனோ, ஆண்டாள் சூடித் தந்த மாலையே தனக்கு உகந்தது என்று அவருக்கு உணர்த்தியதோடு, ஸ்ரீரங்கனை அவள் மணந்து கொள்ளவும் விதி செய்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com