பழனியில் நாம் வழிபடும் பாலதண்டாயுதபாணி முருகன் சிலை, பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் சிலை... இவை இரண்டுமே போகர் செய்த நவபாஷாண சிலைகள் என்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்த இரண்டுக்கும் முன்பே, போகர் உருவாக்கிய மூன்றாவது நவபாஷாண சிலை ஒன்று சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த அதிசயமான சிலை, பழனி முருகனை விடவும் சக்தி வாய்ந்தது என்றும், அதனுள் பல ரகசியங்கள் புதைந்துள்ளன என்றும் சொல்லப்படுகிறது. வாருங்கள், சிவகங்கையில் உள்ள சுகந்தவனேஸ்வரர் கோவிலில் (Sugandha Vaneswarar temple) வீற்றிருக்கும் அந்த மர்மமான நவபாஷாண பைரவர் பற்றி விரிவாகக் காண்போம்.
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில், கண்டரமாணிக்கம் என்னும் ஊரில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருப்பது தான் பெரிச்சி சுகந்தவனேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இக்கோவில் கி.பி 6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
சுமார் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்தக் கோவிலாகும். இக்கோவில் இருக்கும் இடம் கதம்ப வனமாகவும், சுகந்த வனமாகவும் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே தான் இக்கோவிலில் உள்ள சிவபெருமானை சுகந்தவனேஸ்வரர் என்றும் தாயாரை சமீபவள்ளி என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள். எனினும், இக்கோவில் நவபாஷாண பைரவருக்கும், சனீஸ்வரருக்கும் பெயர் பெற்றதாகும்.
இந்த கோவிலில் இருக்கும் பைரவர் சிலை நவபாஷாணத்தால் ஆனது. பழனியில் உள்ள முருகர் சிலையை போகர் செய்வதற்கு முன்பு இந்த பைரவர் சிலையைதான் செய்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கான சரியான சான்றுகள் கிடைக்கவில்லை. இந்த நவபாஷாண சிலையில் விஷம் சரியாக முறிக்கப்படாதக் காரணத்தினால், பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படும் நீரும், சாற்றும் வடைமாலையிலும் கூட விஷம் ஏறுகிறது. அதனால்தான் தீர்த்தமும், வடை மாலையும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பதில்லை.
பைரவருக்கு அணிவிக்கப்படும் மலர்மாலை, படைக்கப்படும் வடைமாலை என்று அனைத்து நெய்வைத்தியங்களையும் சன்னதியின் மேலேயுள்ள கூரையில் போட்டுவிடுவார்கள். இதுவரை ஒரு வடையைக்கூட எந்த பறவையும் சாப்பிட்டதில்லை. அதுமட்டுமில்லாமல் பைரவருக்கு அபிஷேகம் செய்யப்படும் நீரையும் பக்தர்கள் தொடக்கூடாது என்பதற்காக கோவிலுக்கு வெளியே விழுமாறு அமைத்திருக்கிறார்கள்.
இந்த கோவிலில் நவபாஷாண பைரவர் சனீஸ்வர பகவானுக்கு குருவாக இருக்கிறார். அதனால், பைரவரை வழிப்பட்டால் சனி தோஷம் நீங்கும் என்று நம்பப்படுகிறது. சனி பகவானுக்கு வன்னி மரத்தடியில் தனி சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சனீஸ்வரர் பைரவரை பார்த்தவாறு இருப்பது மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோவிலில் வழிபட்டால் அனைத்து விதமான நோய்களும் தீரும் என்றும் உடல் மற்றும் மனரீதியான வலிமையை பெறமுடியும் என்றும் சொல்லப்படுகிறது.