
தஞ்சாவூர் நகரில் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே, மேலராஜ வீதியில் சங்கரநாராயண திருக்கோவில் அமைந்துள்ளது. மகேஸ்வர வடிவங்களில் சங்கரநாராயணர் வடிவமும் ஒன்று. வலப்புறம் சிவமாகவும், இடப்புறம் திருமாலாகவும் தோன்றும் அருள் வடிவம் இது. இக்கோவிலின் திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பார்வதி-லட்சுமி தேவியுடன் சங்கரநாராயணர், அனுமன், விஸ்வநாதர், விசாலாட்சி ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன.
தல சிறப்புகள்:
சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் சங்கரநாராயணர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். ஒரே கல்லில் வலப்பக்கம் ஜடை, கங்கை, சந்திரன், நெற்றிக்கண், திருநீறு, மகரகுண்டலம், ருத்ராட்ச மாலை, புலித்தோல் அணிந்து காட்சி தரும் சிவபெருமான் வடிவமும், இடது பக்கம் கிரீடம், திருநாமம், திருவாபரணங்கள் சங்க ஹஸ்தம் ஆகியவற்றுடன் கூடிய திருமாலாகவும் காட்சி தருகிறார். இரு புறமும் பார்வதி மற்றும் லட்சுமி தேவி காட்சி தருகின்றனர்.
சங்கரநாராயணர் சந்நிதி சுவரில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோரின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
விசாலாட்சி சன்னதியில் வயதான ஒரு மூதாட்டி அமர்ந்து சிவலிங்கத்தை அர்ச்சிப்பது போன்ற சிலை காணப்படுகிறது. இது அவ்வையார் என்றும், காரைக்கால் அம்மையார் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
2 1/2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சி விழாவின் பொழுது சனி பகவான் சர்வ அலங்காரங்களுடன் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருவது இக்கோவிலின் தனி சிறப்பாகும்.
ஜுரகேஸ்வரர் லிங்க வடிவில் இங்கு காட்சி தருகிறார். குப்த கங்கை தீர்த்த கிணற்றுக்கு அருகில் 'கோணலிங்கம்' எனப்படும் இரண்டு லிங்கங்கள் காட்சி தருகின்றன. இந்த லிங்கங்களில் ஒன்று வரவையும், மற்றொன்று செலவையும் குறிப்பதாகவும், இவரை வழிபட செலவு வரவுக்குள் அடங்கியிருக்கும் என்பதும் நம்பிக்கை. இவற்றுக்கு பௌர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
விழாக்கள்:
பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சங்காபிஷேகம், திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம், சனிப்பெயர்ச்சி என நிறைய திருவிழாக்களை கொண்டாடுகின்றனர்.
கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் எட்டரை மணி வரையிலும் திறந்திருக்கும்.
வித்தியாசமான நேர்த்திக்கடன்:
காய்ச்சல் கண்டவர்கள், இங்குள்ள ஜுரதேவரை பிரார்த்தித்து விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கின்றனர். ஜுரம் நீங்கியதும் மிளகு ரசம் வைத்து, ரசம் சாதத்தை ஜுரதேவருக்கு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.
தல வரலாறு:
தஞ்சையை ஆண்ட பீம சோழன் மற்றும் அவரின் மனைவி பத்ராட்சி இருவரும் இறைப்பணிவில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். புத்திர பாக்கியம் வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.
ஈசன் கனவில் தோன்றி தஞ்சையில் உள்ள பிரகதீஸ்வரருக்கும், கொங்கணேஸ்வரருக்கும் இடையில் சங்கரநாராயணர் என்ற பெயரில் கோவில் கட்ட பணித்ததாகவும், அந்த இடத்தில் லிங்க ரூபமாக தான் இருப்பதாகவும் கூறினார். அதனால் சோழ மன்னன் சங்கரநாராயணனுக்கு கோவில் கட்டி வழிபட இறைவன் அருளால் ஆண் மகவு பிறந்தது என்றும் தலவரலாறு கூறுகிறது.