

இன்றைய குடும்பங்களில் பெரும்பாலான பிரச்னைகளுக்கு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவன்மார்களே காரணமாக இருக்கின்றனர். அவர்களைத் திருத்துவது நாய் வாலை நிமிர்த்துவது போலாகி விடுகிறது. கணவன்மார்களை திருத்துவதற்காக மனைவிகள் படாத பாடுபட்டு கடைசியில் "இவர்களையெல்லாம் கடவுள்தான் திருத்த வேண்டும்" என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.
உண்மையிலேயே அந்தக் கூற்று சரிதான். மது அருந்தும் கணவரை திருத்த வேண்டும் என நினைக்கும் பெண்கள் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள சுருளி மலை முருகன் கோவிலுக்கு (Suruli Malai Murugan Temple) சென்று வரலாம். ஏனெனில் இதற்கென ஒரு வரலாறே உள்ளது.
சிவபெருமானுக்கு நந்தியும், பிருங்கியும் வாயில் காவலராக இருந்தனர். ஒரு சமயம் தவ நிலையில் சிவபெருமான் இருந்தபோது தேவர்கள் அவசரமாக அவரை எழுப்ப விரும்பி அதற்கு மன்மதனை நியமித்தனர். மன்மதனும் ஒரு வாசல் வழியாக உள்ளே நுழைய முற்பட நந்தியப் பெருமான் தன் கடமை தவறாமல் அவரை உள்ளே நுழையாதவாறு தடுத்துவிட்டார்.
இதனால் மற்றொரு வாயிலுக்கு வந்த மன்மதன் மது போதையில் வாயில் காவலராக இருந்த பிருங்கிக்குத் தெரியாமல் சிவலோகத்துக்குள் நுழைந்ததோடு, மலர் அம்பை எய்து சிவபெருமானின் தவத்தை கலைத்து எழுப்பினான். இதனால் கோபமடைந்த சிவபெருமான் மன்மதனை அழித்து விட்டார்.
போதையில் கடமை தவறிய பிருங்கியை சிவபெருமான் பஞ்சமா பாதகங்களில் ஒன்றைச் செய்ததாக கூறியதோடு, சாபம் கொடுத்து வாயில் காவலர் பணியில் இருந்து நீக்கி விட்டார்.
இதனால் பிருங்கி மிகவும் வருத்தப்பட்டார். சாபம் தீர சுருளி மலைக்கு வந்து முருகப்பெருமானை நோக்கி செய்த தவறை பொறுத்தருளுமாறு வேண்டி தவம் இருந்தார்.
முருகப்பெருமானும் பிருங்கிக்கு சாப விமோசனம் அளித்தார். ஆகவே இத்தலத்துக்கு வந்து குடிகார கணவன்மார்கள் திருந்த வேண்டும் என பெண்கள் பிரார்த்தித்தால் வேண்டியபடியே திருந்தி விடுவார்கள் என்பது நம்பிக்கை.
2000 ஆண்டுகள் பழமையான சுருளி மலை முருகன் கோவில் (சுருளி வேலப்பர் கோவில்) தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் சுருளி அருவிக்கு அருகில் அமைந்துள்ளது.
மூலவரான சுருளி வேலப்பர் ஆண்டி கோலத்தில் அருள் பாலிக்கும் இத்தலம் காலை 8 மணி முதல் 4 மணி வரை திறந்திருக்கும்.