கட்டடக்கலையின் அற்புதம் சுவர்ணகிரி பாலாஜி கோயில்!

சுவர்ணகிரி கோயில்...
சுவர்ணகிரி கோயில்...

தெலங்கானா மாநிலம் புவனகிரி மாவட்டத்தில் உள்ள அழகிய மானேபள்ளி மலைகளின் மேல் கலியுக தெய்வம் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயம் 22 ஏக்கர் நிலப்பரப்பில் மிக பிரம்மாண்டமாகக் கட்டப் பட்டுள்ளது. இது தெலங்கானாவின் மிகப் பெரிய கோயிலாகும். இக்கோயில் பிரபல தொழில் அதிபர்களான மானேபள்ளி குடும்பத்தாரால் கட்டப்பட்டு கடந்த மார்ச் 6 ந் தேதி பூஜ்ய ஸ்ரீ சின்ன ஜீயர் அவர்களால் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களுக்காக திறக்கப்பட்டது.

புவனகிரியில் உள்ள மானேபள்ளி மலைகளின் மேல் அமைந்துள்ள சுவர்ணகிரி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி தேவஸ்தானம் என்று அழைக்கப்படும் யாதாத்ரி திருமலை கோயில், ஹைதராபாத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
முணுமுணுக்கிறது பூமி! - சில சுவாரஸ்யமான உண்மைகள்!
சுவர்ணகிரி கோயில்...

சுவர்ணகிரி கோயில் திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. உலகப் புகழ்பெற்ற ஸ்தபதி ஸ்ரீ டி.என்.வி பிரசாத் ஸ்தபதி என்பவரின் தலைமையில் நாட்டின் சிறந்த சிற்பிகளின் ஆலோசனைகளை ஏற்று வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோயிலுக்கு செல்லும் 108 படிகளில் ஏறும்போது, பல்லவ, விஜயநகர, சோழ மற்றும் சாளுக்கிய கட்டிடக்கலை பாணிகளின் கலவையாக கட்டப்பட்ட ஆலயத்தின் அழகான அமைப்பு நம்மை வியக்க வைக்கிறது. படிகள் சிறியதாக இருப்பதால் சிரமமின்றி எங்களால் ஏற முடிந்தது.. கோயிலின் நுழை வாயிலில் உள்ள பெருமாளின் பெரிய பாத வடிவில் உள்ள கல் சிலைகள் அனைவரையும் ஈர்க்கின்றன.

இக்கோயிலின் நான்கு பக்கங்களிலும் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. கோயிலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பிரதான ராஜகோபுரம் 108 அடி உயரம் கொண்டது. கருவறையில் 12 அடி உயர வெங்கடேஸ்வர சுவாமியின் சிலை கருப்பு கிரானைட்டாலானது. அலங்காரப் பிரியரான பாலாஜி தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.

சுவர்ணகிரி கோயில்
சுவர்ணகிரி கோயில்

அருகிலேயே ஆண்டாள், பத்மாவதி தாயார், மதன கோபால கிருஷ்ண சுவாமி, கருடாழ்வார், ராமானுஜர் சன்னிதிகள் உள்ளன. மேலும் சிவன், விஷ்ணு மற்றும் விநாயகர் உட்பட பல தெய்வங்களின் தனி சன்னிதிகள் உள்ளன. 120 அடி உயர அனுமன் மண்டபத்தில் 40 அடி உயர ஒற்றைக்கல் அனுமன் சிலை மற்றும் ஒன்றரை டன் எடையுள்ள பெரிய வெங்கல மணி இக்கோயிலின் சிறப்பு அம்சமாகும், இந்த மணி இந்தியாவின் இரண்டாவது பெரியது. பக்தர்கள் இந்த மணியை அடித்து தங்கள் கோரிக்கைகளை பெருமாளிடம் வைக்கின்றனர்

இந்த கோயிலில் இருக்கும் வேத புஷ்கரணி நடுவில் உள்ள ஜல நாராயண சுவாமி சன்னிதி, மாலையில் விளக்குகளால் ஒளிர்ந்து பூலோக வைகுண்டமாக காட்சி தருகிறது.

சுவர்ணகிரி ஆலயம் மிக அழகிய புனிதத் தலம். இக்கோயில் திறக்கப்பட்ட நாளிலிருந்தே பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது. திருப்பதியைப் போலவே இங்கும் அதே முறையில் பூஜை வழிபாடுகள் நடை பெறுகின்றன. புகழ்பெற்ற யாத்ரீக தலமான இந்த கோயில் தெலுங்கானாவுக்கு வருகை தரும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com