பிரயாகை என்றால் இரு புண்ணிய நதிகளின் சங்கமம் என்று பொருள். பத்ரிநாத், கேதார்நாத் பயணத்தின்போது எதிர்ப்படும், நந்தப் பிரயாகை, ருத்ரப் பிரயாகை, கர்ணப் பிரயாகை, விஷ்ணுப் பிரயாகை மற்றும் தேவப் பிரயாகை என பஞ்ச பிரயாகைகளை தரிசிக்கலாம். மஹர சங்கராந்தி, ராம நவமி ஆகிய விசேஷ நாட்களின்போது பஞ்ச பிரயாகைகளில் நீராடுவது மிகவும் சிறப்பானது. பாண்டவர்கள் உலக வாழ்வை நீத்து ஸ்வர்கம் செல்லும் வழியை, ‘ஸ்வர்காரோஹனா’ என்கிறார்கள். அந்தப் பாதையில் இந்த ஐந்து பிரயாகைகளும் அமைந்திருக்கின்றன எனப் புராணங்கள் சொல்கின்றன.
‘பஞ்ச் பிரயாகை’ என அழைக்கப்படும் ஐந்து பிரயாகைகளில் விஷ்ணுப் பிரயாகைதான் முதலில் உருவானது. நிதி பள்ளத்தாக்கிலிருந்து உற்பத்தியாகும் தௌலிகங்கா நதியுடன் அலக்நந்தா சங்கமிக்கும் இடமே விஷ்ணுப் பிரயாகை. அலக்நந்தா நதியின் இந்தப் பகுதி, ‘விஷ்ணு கங்கை’ என அழைக்கப்படுகிறது. இங்கு நாரத மகரிஷி விஷ்ணுவைக் குறித்து தவம் செய்ததாகத் தலபுராணம் சொல்கிறது. இந்தோர் மகாராணி அகல்யாபாய் என்பவர் 1889ல் விஷ்ணுப் பிரயாகை சங்கமம் அருகில் எண்கோண வடிவில் சிவனுக்கு ஓர் ஆலயத்தை எழுப்பி இருக்கிறார். தற்போது மகாவிஷ்ணுவின் திருவுருவும் இங்கே ஆராதிக்கப்படுகிறது. ஸ்ரீராமர் தவம் இருந்த இடம், ‘ராமர் கட்டீ’ எனப்படுகிறது.
இரண்டாவது பிரயாகை நந்தப் பிரயாகை ஆகும். நந்தாதேவி சிகரத்திலிருந்து வரும் நந்தாகினி ஆற்றுடன் அலக்நந்தா ஒன்று கலக்கும் இடம் நந்தப் பிரயாகை. இந்தப் பிரயாகையின் பெயர் ஏற்பட்டதற்கு இரண்டு விதமான காரணங்களைச் சொல்கிறார்கள். நந்தன் என்னும் மன்னன் இங்கே மாபெரும் வேள்வி ஒன்றைச் செய்து இறையருள் பெற்றதால் நந்தப் பிரயாகை என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். ஸ்ரீகிருஷ்ணரின் வளர்ப்புத் தந்தையாகிய நந்தகோபரின் நினைவாக இந்தப் பெயர் ஏற்பட்டதாகவும் இன்னொரு கருத்து நிலவுகிறது. கோபாலனுக்கு இங்கே ஓர் ஆலயமும் இருக்கிறது. கன்வ முனிவர் இங்கே தவம் செய்தார் எனவும், துஷ்யந்தனுக்கும் தமயந்திக்கும் இங்கேதான் திருமணம் நடைபெற்றது எனவும் சொல்கிறார்கள்.
அலக்நந்தாவும், பிண்டார் ஆறும் சங்கமம் ஆவது கர்ணப் பிரயாகையில். இந்த இடத்தில்தான் கர்ணன் சூரிய பகவானை வழிபட்டுக் கவச, குண்டலங்களைப் பெற்றதாக ஐதீகம். கர்ணன் அமர்ந்து தவம் செய்ததாக ஒரு பாறையை உள்ளூர்வாசிகள் காண்பிக்கின்றனர். இங்கே கர்ணனுக்குக் கோயில் ஒன்றும் உண்டு. சிவனுக்கும் விநாயகருக்கும் ஆலயங்கள் இருக்கின்றன. காளிதாசரின். ‘மேகதூதம்’ காவியத்தில் கர்ணப் பிரயாகை பற்றிக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஸ்வாமி விவேகானந்தர் இங்கே 18 நாட்கள் தவம் செய்திருக்கிறார்.
கேதார்நாத்தில் இருந்து வரும் மந்தாகினி ஆறும், அலக்நந்தா ஆறும் சங்கமிக்கும் இடம்தான் ருத்ரப் பிரயாகை. சரிவு மிகுந்த படிகளில் கீழிறங்கிச் சென்றால் இரண்டு ஆறுகளும் சங்கமிக்கும் ருத்ரப் பிரயாகையை அடையலாம். புராதனமான ருத்ரநாத் மற்றும் சாமுண்டி தேவி ஆகியோர் அருளும் ஆலயம் படிக்கட்டுகளின் உச்சியில் அமைந்திருக்கிறது.
சிவபெருமானின் திருநாமங்களுள் ஒன்றான ருத்ரன் என்பதை ஒட்டி இந்த சங்கமம் ருத்ரப் பிரயாகை என அழைக்கப்படுகிறது. இங்கே சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார் என்றும் தனக்கு விருப்பமான இசைக் கருவியான ருத்ர வீணையை இங்கே வாசித்தார் எனவும் சொல்கிறார்கள். ருத்ரப் பிரயாகையில் ருத்ரனுக்கு (சிவனுக்கு) ஓர் ஆலயம் இருக்கிறது. இது ஸ்வயம்பு லிங்க மூர்த்தியாகும். சிவனை நோக்கித் தவம் இருந்து, இசையின் நுணுக்கங்களை நாரதர் பெற்ற தலம் இது. நாரதர் தவம் இருந்ததாகச் சொல்லப்படும் பாறை, ‘நாரதஷிலா’ எனப்படுகிறது.
இதுதான் பத்ரிநாத்தில் இருந்து ரிஷிகேஷ் செல்லும் வழியில் இருக்கும் ஐந்து பிரயாகைகளில் கடைசிப் பிரயாகை ஆகும். தேவப் பிரயாகை என்றால் தெய்வீக நதிகளின் சங்கமம் என்று பொருள்! அலஹாபாத்தின் திரிவேணி சங்கமத்துக்கு இணையாக வழிபடப்படும் புண்ணிய சங்கமம்தான் இது. திபெத் எல்லையருகில், ஸடோபந்த் பனிப் பாறையில் உருவாகும் அலக்நந்தா ஆறும், கங்கோத்ரி அடிவாரத்தில், கௌமுக் பனிப் பாறையில் உருவாகும் பாகீரதி நதியும் இங்கு ஒன்று சேர்கின்றன.
பண்டைக் காலத்தில் சுதர்சன க்ஷேத்ரம் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறது. ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்து வரும் பாகீரதி நதியும், அமைதியாக நகர்ந்து வரும் அலக்நந்தா நதியும் சங்கமிக்கும் இந்த சங்கமம் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்துகிறது. சங்கமத்துக்குப் பிறகு அது புனித நதி கங்கை எனப் பெயர் மாறுகிறது. இது ஆதி கங்கை எனவும் போற்றப்படுகிறது.
சுமார் முன்னூறு படிகள் இறங்கிச் சென்றால் சங்கமத்தை அடையலாம். அங்கிருந்து வந்த வழியில் சிறிது பாதை விலகி 200 படிகள் மேலேறினால் ஸ்ரீ ரகுநாதர் ஆலயத்தை அடையலாம். இது மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்த இடம், ‘திருக்கண்டம்’ என்றும் அழைக்கப்படுகிறது. ‘கண்டமென்னும் கடிநகர்’ என்று பெரியாழ்வார் பாடிப் பரவசப்பட்ட இடம் இது.