ஃபால்சா (Falsa) என்பது லேசான புளிப்பும் கசப்பும் இணைந்த சுவையில், கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய ஒரு சிறிய பழம். இதை இந்திய சர்பத் பெரி என்றும் அழைப்பதுண்டு. இது நம் உடலுக்குத் தேவையான பல ஊட்டச் சத்துக்களைத் தரக்கூடிய பழம். இதை உண்பதால் நம் உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்தப் பழத்தில் அன்தோசியானின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் நிறைந்துள்ளது. இது நம் உடலில் உண்டாகும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி ஃபிரிரேடிகேல்களின் அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. இதனால் கேன்சர் மற்றும் இதய நோய்கள் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயம் தடுக்கப்படுகிறது.
இதிலுள்ள ஆன்டி இன்பிளமேட்டரி குணமானது ஆஸ்துமா மற்றும் ஆர்த்ரைடிஸ் போன்ற நோய்கள் வரக்கூடிய அறிகுறிகளை நீக்கி ஆரோக்கியத்தைக் காக்க உதவுகிறது. இப்பழத்தைக் குறைந்த அளவில் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் வீக்கங்கள் மறைந்து முழு உடலும் நல்ல ஆரோக்கியம் பெறும்.
ஃபால்சாவில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. அது செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுவதோடு, மலச்சிக்கலையும் நீங்கச் செய்யும். ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஜீரணக் கோளாறு எதுவும் ஏற்படாமல் இரைப்பை, குடல் ஆகியவற்றின் செயல்பாடுகளை சிறக்கச் செய்கிறது.
ஃபால்சா உடலுக்கு குளிர்ச்சியூட்டும் குணம் கொண்ட பழமாகையால் இது கோடைக் காலத்தில் உட்கொள்ள ஏற்றது. இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும், ஹீட் ஸ்ட்ரோக் மற்றும் டீஹைட்ரேஷன் போன்ற ஆபத்துகள் வருவதைத் தடுக்கவும் உதவும்.
ஃபால்சா குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட பழம். இதனால் இது நீரிழிவு நோய் உள்ளவர்களும் உண்ண ஏற்ற பழமாகிறது. இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் இது உதவும். இப்பழத்திலுள்ள பொட்டாசியம் சத்து இதய இரத்த நாளங்களின் ஆரோக்கியம் காக்க உதவுகிறது. மேலும், இரத்த அழுத்தத்தின் அளவை சமநிலையில் வைத்துப் பராமரித்து உயர் இரத்த அழுத்தம் வரும் அபாயத்தைத் தடுக்கவும் செய்கிறது.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் A, C ஆகியவை ஃபிரிரேடிகல்ஸ் மூலம் உண்டாகும் செல் சிதைவுகளைத் தடுத்து சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. சருமத்துக்கு பளபளப்பான தோற்றம் தந்து, சரும சுருக்கம் மற்றும் ஃபைன் லைன்ஸ் உருவாகி வயதான தோற்றம் உண்டாவதைத் தடுக்கவும் செய்கின்றன. இப்பழம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், எடை மேலாண்மைக்கும் உதவுகிறது. இது சுவாச மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சளி, காய்ச்சல், தொண்டைப் புண், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தவும் உதவும். நாமும் இப்பழத்தை கோடைக்காலத்தில் உட்கொண்டு ஆரோக்கிய மேன்மை அடைவோம்.