

“செங்கோடா, எங்கேடா போன? சீக்கிரமா வா. இன்னைக்கு மட்டும் நான் டைமுக்கு போகல…” என்று முரளி கோபமாகச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, செங்கோடன் மாமரத் தோட்டத்திலிருந்து கிளிமூக்கு மாங்காய் ஒரு டஜன் எடுத்துக்கொண்டு, தோட்டத்தை விட்டு வெளியே ஓடி வந்தான்.
“அண்ணே, இன்னைக்கு ஊரே ஆத்தங்கரையிலதான் இருக்கும். திருட்டு மாங்கா ருசியே அலாதிணே…” என்று செங்கோடன் வழிய, பின்பு ஒரு வழியாக இருவரும் கிளையாற்றை வந்தடைந்தனர்.
பேருதான் கிளையாறு. இன்று அதை நேற்றைய கிளையின் நிழல் என்று சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். மணல் சுரண்டப்பட்டு, மேடும் பள்ளமுமாக, ஆளுயரக் கருவேல மரங்களும், முட்புதர்களும் சூழ்ந்து அலங்கோலமாகக் காணப்பட்டது. கீழ்மின்னல் ஆற்றுக்கும் இதே நிலைதான். ஆனால், இன்று ஷட்வர்ஷஜப் பெருமாள் ஆற்றில் இறங்கும் நாள். பதிவு செய்யப்பட்ட ஐந்நூறு வருட வரலாற்றில், இதுவரை மூவெள்ள நாளன்று அவர் ஆற்றில் இறங்காமல் இருந்ததே இல்லை.