

சிவாலயங்களில் இருக்கும் நடராஜர் சந்நிதியில் வ்யாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் அருள்வதைத் தரிசிக்கலாம். இவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?
மத்தியந்தனர் என்னும் முனிவர் சிறந்த பக்தர். இவர் குழந்தைப் பேறு இல்லாமல் பலகாலம் தவமிருந்து, இறைவனை வேண்டி, பின் அழகான ஆண் மகவு கிடைக்கப் பெற்றார். குழந்தைக்கு மழன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். குழந்தை சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தது. கொஞ்சம் வளர்ந்ததும் இறைவனைத் தேடும் சிந்தனையில் ஆழ்ந்தார் மழன். தந்தையின் உபதேசத்தால் சிவ வழிபாடு செய்யத் தீர்மானித்தார்.
காசி முதல் பல சிவத் தலங்களைத் தரிசித்து வந்தவர், தில்லை வந்தடைந்தார். தில்லை வனத்தில் சுயம்புவாகத் தோன்றியிருந்த சிவலிங்கத்தைப் பூஜித்தார். அவர் மனம் அங்கே லயித்தது. அங்கேயே குடில் அமைத்துத் தங்கி தினமும் சிவபெருமானைப் பூஜித்தார். தினமும் அதிகாலை சீக்கிரம் எழுந்து நீராடி, புதிதாக மலர்ந்த, தேனீக்கள் மொய்க்காத மலர்களாகத் தேடிப் பறித்துவந்து பூஜை செய்வார்.
அதிகாலை வெளிச்சம் வருவதற்கு முன் மலர்களைப் பறிப்பதால் அவருக்கு அன்றலர்ந்த மலர்களைப் பறிப்பதில் சிக்கல் இருந்தது. பழைய பூக்களும் சேர்ந்து வந்ததால் மனதுக்கு ஒப்பவில்லை. மேலும் பனிக்காலத்தில் பூக்களைப் பறிக்க மரமேறும்போது கால்கள் வழுக்கின.
இதனால் அவருக்கு பூஜையில் நிறைவு கிடைக்கவில்லை. சிவபெருமானிடம் தன் ப்ரார்த்தனையை வைத்தார். “பூப்பறிக்க மரத்தில் ஏறும்போது வழுக்காமல் இருக்க புலியின் கால்களையும், கைகளையும், இருளில் கண் நன்றாகத் தெரிவதற்காக புலியின் கண்களையும் தந்தருளுங்கள்.
விடிந்ததும் தேனீக்கள் மலர்களை மொய்த்து எச்சில் செய்துவிடும். மேலும் இருளில் மலர்களைப் பறிக்கும்போது அரும்புகளும், பழைய அழுகிய மலர்களும் சேர்ந்து வந்துவிடுகின்றன. அவற்றைக் கொண்டு உம்மைப் பூசிப்பது உசிதமல்லவே இறைவா. அதனால் அதிகாலையில் பூக்களைக் கொய்ய புலியின் கண்கள் வேண்டும்,” என்று ப்ரார்த்தித்தார்.
தன் மீது அளவுகடந்த பக்தியைச் செலுத்தும் பக்தனுக்கு ஈசன் அருளாமல் இருப்பாரா? மழ முனிவரின் வேண்டுதல் நிறைவேறியது. புலியின் கால்கள், கண்கள் மற்றும் வால் கிடைக்கப்பெற்ற மழன், அதன்பிறகு வ்யாக்ரபாதர் என்று அழைக்கப்படலானார் (வ்யாக்ரம் – புலி).
வ்யாக்ரபாதர் தன் சிவ பூஜையைத் தொடர்ந்தார். இவருக்கு ஒத்த சிந்தை உள்ள ஒரு நட்பும் கிடைத்தது. அவர்தான் பதஞ்சலி முனிவர். பதஞ்சலி முனிவர் தோற்றம் குறித்து முதலில் தெரிந்து கொள்வோம்.
ஒரு சமயம் திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்திருந்தார் மகாவிஷ்ணு. என்றும் இல்லாத அளவுக்கு அன்று பாரம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தார் ஆதிசேஷன். “சுவாமி, இன்றைக்கு உங்கள் எடை கூடியுள்ளதா? மிகவும் பாரமாக உணர்கிறேன்,” என்று ஆதிசேஷன் கேட்க,
“ஒருவரை மட்டும் சுமந்தால் கனம் தெரியாது. இருவரை அல்லவா சுமக்கிறாய்,” என்றார் மகாவிஷ்ணு. ஆதிசேஷனுக்குப் புரியவில்லை. “சுவாமி, தாயாரைச் சொல்கிறீர்களா? அன்னையையும் தினமும் சுமக்கிறேனே, இன்றுபோல் கனத்ததில்லையே.” “மகாலட்சுமி எப்போதும் என் நெஞ்சில் இருப்பவள். ஆனால் நான் இன்று சிவபெருமானின் ருத்ர தாண்டவத்தை மனதில் இருத்தி ரசித்தேன். அதுதான் உன்னால் தாங்க முடியவில்லை,” என்றார் பெருமாள். “எனக்கும் சிவபெருமானின் அந்த நடனத்தைக் கண்டு மகிழவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.”
“அவரை எண்ணித் தவம் செய். ஆனந்தத் தாண்டவமே ஆடிக் காட்டுவார்,” என்று திருமால் சொன்னதும், ஆதிசேஷன் மிகவும் மகிழ்ந்து இமயமலையில் தவமிருந்தார்.
சிவபெருமானின் அருளால் அத்ரி - அனுசூயா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார் ஆதிசேஷன். இவர் பாம்பின் உடலும் மனிதனின் முகமும் கொண்டிருந்தார். அவருக்கு பதஞ்சலி என்று பெயரிட்டு வளர்த்துவந்தனர். பதஞ்சலி வளர்ந்து, தன் பிறவி நோக்கத்தை எண்ணி ஈசனிடம் விண்ணப்பம் வைத்தார். “தில்லைவனம் சென்று பூஜித்து வா. புலிக்கால் முனிவனும் தவமிருக்கிறான். இருவருக்கும் குருவாரத்தில் வரும் தைப்பூசத்தில் ஆனந்தத் தாண்டவமாடிக் காட்டுவோம்,” என்று ஈசன் அருளினார்.
பதஞ்சலி முனிவரும் தில்லை வந்து, வ்யாக்ரபாதருடன் இணைந்து சிவபூஜை செய்துவந்தார். வியாழக்கிழமையோடு இணைந்த தைப்பூச நாளன்று, பதஞ்சலி முனிவர், வ்யாக்ரபாதர் மற்றும் அன்னை சிவகாமசுந்தரி மகிழ, தில்லைவாழ் அந்தணர்கள் கண்டு உருக, ஆனந்தத் தாண்டவமாடினார் சிவபெருமான். அதுதான் பொன்னம்பலம் என்று போற்றப்படும் கனகசபையான சிதம்பரம். அன்றுமுதல் வ்யாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் சிதம்பரத்தில் அரூபமாக இருந்து இறைவனின் திருநடனத்தைக் கண்டு மகிழ்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.