
பெரிய கோவிலின் நிர்வாகி, கோபுரத்தின் அருகே உள்ள கோவில் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து நின்றார்.
ஒரு சிறுவன், பாவம், கலைந்த தலையுடனும் வாடிய முகத்துடனும் கையில் ஒரு பையுடனும் உள்ளே வந்து கொண்டிருந்தான்.
“இங்கே, வா," என்ற நிர்வாகி அவனைப் பார்த்து, “எங்கிருந்து வருகிறாய்?” என்றார்.
தான் ஒரு அனாதை என்றும் பிழைப்புக்காக அருகிலிருந்த கிராமத்திலிருந்து வருவதாகவும் அவன் சொன்ன போது பரிதாபப்பட்டார் நிர்வாகி.
“சரி, இதோ கோவில் குளத்தருகே பைப் இருக்கிறது. பார். அங்கே குளித்து விட்டு, வா, சாப்பிடலாம்” என்றார்.
பையன் மகிழ்ச்சியுடன் குளிக்கச் சென்றான்.
பின்னர் நிர்வாகியிடம் வந்த அவனை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை உள்ளிட்டவற்றை அவனிடம் தந்தார்.
திடீரென்று ஒரு யோசனை தோன்றியது நிர்வாகிக்கு. பையனைப் பார்த்து, “இதோ, பார். இந்தக் கோவிலைச் சுற்றிப் பார். இங்கு ஒரு அழுக்கும் இருக்கக் கூடாது. அது உனது பொறுப்பு” என்றார்.