
முன்னொரு காலத்தில், தாய்லாந்த் நாட்டின், ப்ரோம்பனா நகரில், பஜித் என்ற இளவரசர் இருந்தார். கல்வி, கேள்விகளில் நல்ல தேர்ச்சி பெற்றதுடன், இளவரசர், புத்த மதத்தைச் சார்ந்த போதிசத்துவராகவும் இருந்தார். திருமண வயது வந்தவுடன், அவரது தந்தையான அரசர், இளவரசரை, தகுந்த வாழ்க்கைத் துணைவியை தேடிக் கொள்ளும்படி அறிவுரை செய்தார். அவர் மனதிற்குப் பிடித்த பெண் ப்ரோம்பனா நகரில் கிடைக்காததால், இளவரசர், அரசரின் அனுமதியுடன், வாழ்க்கைத் துணை தேடி ஊர் ஊராகச் சென்றார்.
பனாரஸ் வந்த இளவரசர், அங்கு ஒரு அழகானப் பெண்ணைப் பார்த்தவுடன், அவள் மீது காதல் கொண்டார். கணவனை இழந்த அந்தப் பெண், நிறை மாத கர்ப்பிணி. அரசர் குல வழக்கப்படி, அந்தப் பெண்ணை மணந்து கொள்ள பஜித்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்தப் பெண்ணிற்கு, அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தையின் பெயர் ஒராபிமா. அந்தப் பெண்ணிற்கு பதினாறு வயது முடிந்ததும், அவளை மணம் புரிந்து கொள்ளப் போவதாகவும், அது வரை அவளின் பாதுகாவலனாக இருக்கப் போவதாகவும், பஜித் சபதம் எடுத்துக் கொண்டார்.
ஒராபிமா, அழகான, அறிவுள்ள மற்றும் மத நம்பிக்கைகளில் ஆழ்ந்த விருப்பம் உள்ளவளாகவும் வளர்ந்தாள். பஜித், ஒபாமா ஒருவரையொருவர் மனதார காதலிக்க ஆரம்பித்தனர். ஒராபிமாவின் அழகில் மயங்கி, இளைஞர்கள் பலர் அவளை வட்டமிட ஆரம்பித்தனர். மற்றவர்கள் அவளை நெருங்காமல், காத்து வந்தார் பஜித். பெனாரஸ் நாட்டின் இளவரசர், பிரம்மதத்குமார், ஒராபிமா மீது காதல் வயப்பட்டார். தகுந்த தருணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
ஒராபிமா திருமண வயதை அடைந்தாள். அந்த காலத்து வழக்கப்படி, மணமகன், பெண்ணின் பெற்றோர்க்கு, பெண்ணை அதுவரை வளர்த்து வந்ததற்கு, வரதட்சணை கொடுக்க வேண்டும். அதுவும், ஒராபிமா போன்ற அழகான, புத்திசாலிப் பெண்ணிற்கு வரதட்சணை தொகை அதிகம். வரதட்சணை கொடுப்பதற்கு கையில் பணம் இல்லாத காரணத்தால், தந்தையிடமிருந்து பணம் பெற்று வருவதற்கு பஜித் தன்னுடைய நாட்டிற்குத் திரும்பினார்.
இந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த பிரம்மதத்குமார், ஒராபிமாவை சந்தித்து, தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். இளவரசர் காதலை ஏற்க மறுத்தாள் ஒராபிமா. அவளை அரண்மனையில் சிறை வைத்த இளவரசர், அவளுடைய மனதை மாற்ற முயற்சி செய்தார். அவளை நெருங்க முயற்சி செய்த போது, ஒராபிமா, பஜித் மீது வைத்திருந்த ஆழமான காதல், நெருப்பாக மாறி, இளவரசரைச் சுட்டது. கல்யாணத்திற்கான வரதட்சணை கொண்டு வந்த பஜித், ஒராபிமா சிறை வைக்கப்பட்டிருப்பதை அறிந்தார். இரவில் அரண்மனை புகுந்து ஒராபிமாவை விடுவித்தார். பெனாரஸ் நகரில் இனிமேல் தங்குவது உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்த பஜித்தும், ஒராபிமாவும், தாய்நாடு திரும்ப நிச்சயித்து, காட்டு வழியில் சென்றனர்.
ஒராபிமாவின் அழகில் மயங்கிய, ஒரு காட்டுவாசி, அவர்கள் அறியாமல், பின் தொடர்ந்து சென்றான். களைப்பாறுவதற்காக மரத்தடியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பஜித்தைக் கோடாரியால் வெட்டிக் கொன்று, ஒராபிமாவைத் தன்னுடைய இருப்பிடத்திற்கு கடத்திச் சென்றான், அந்த காட்டுவாசி. தக்க சமயத்தை எதிர் நோக்கியிருந்த ஒராபிமா, காட்டுவாசி தூங்கும் போது, அதே கோடாரியால், அவனைக் கொன்றாள். ஒராபிமா, பின்னர் மாறு வேடத்தில், பிமாய் நகரை அடைந்தாள். அங்கே, ஒராபிமா, புது வாழ்விற்கான கடவுள் இந்திரனை, பஜித்தின் ஆவிக்கு உயிர் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டாள்.
பஜித் கொண்டு வந்த வரதட்சணைப் பணத்தில், பிமாய் நகரில் புத்தர் கோயில் ஒன்றை நிர்மாணித்தாள் ஒராபிமா. அந்தக் கோவிலின் சுவர்களில், தங்களுடைய காதல் கதையை ஒவியமாக வரைந்து வைத்தாள். ஆவி ரூபத்திலிருந்து உயிர் பெற்ற பஜித், தன்னைத் தேடி வருவான் என்பது ஒராபிமாவின் நம்பிக்கை. அப்படி வருபவன், ஒவியங்களைப் பார்க்கும் போது, தன்னுடைய பழைய வாழ்க்கையை நினைவு கூர்வான் என்று அவளுக்குத் தெரியும். கோவிலுக்கு வரும் மக்களில், தான் வரைந்த ஒவியத்தைப் பார்த்து யாராவது கண்ணீர் சிந்தினால், தனக்குத் தெரிவிக்கும்படிக் கோவில் சிப்பந்திகளிடம் சொல்லி இருந்தாள்.
ஒரு நாள், கோவிலுக்கு வந்த இளைஞன் ஒருவன், ஒவியங்களைப் பார்த்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டான். உடனே, கோவில் சிப்பந்திகள் அந்த இளைஞனை, ஒராபிமாவிடம் கூட்டி வந்தனர். அந்த இளைஞனைப் பார்த்தவுடன், ஆவி ரூபத்திலிருந்து உயிர் பெற்ற பஜித் என்று அறிந்து கொண்டாள் ஒராபிமா. பஜித், ஒராபிமாவை மணந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
அந்த ஊருக்கு 'பீ மாய்' என்று பெயரிடப்பட்டது. 'பீ மாய்' என்பதன் பொருள் 'நீ வந்து விட்டாய்'. இந்தப் பெயர், நாளாவட்டத்தில் 'பிமாய்' என்று மாறியது. 'பிமாய்' என்ற சொல்லின் பொருள் 'ஆவி திரும்புகிறது'. இந்தக் கோவில் தாய்லாந்தில் உள்ளது. இந்த சரணாலயத்தை இந்து மற்றும் புத்த மதத்தினர் கோவில் என்பார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டது.