

உலகின் முதல் சுருக்கெழுத்தாளர். வெற்றி பெற சாமார்த்திய வழியைக் கண்டுபிடித்தவர், தாயைப்போல தாரம் வேண்டுமென திருமணம் செய்யாமல் அரச மரத்தடியிலும், குளக்கரையிலும் காத்திருப்பவர்.
ஒரு பிள்ளையார் கோயிலில் இருவர் பெரிய அரசமரத்தடியில் ஹாயாக உட்காரந்திருந்தனர்.
பிள்ளையாரை அந்த வழியாகப் போகிறவர்களும், வருகிறவர்களும், சிலர் இரு கைகளால் வணங்குவதும், ஐ.டி பணியாளர்கள் சிலர் ஹாய் சொல்வதுபோல, ஒரு கையால் வணங்குவதாகவும் இருந்தார்கள்.
அப்படி வணங்குபவர்களில் இருவர் அருகருகே நின்று கொண்டு இப்படி வேண்டிக்கொண்டார்கள்...
“பிள்ளையாரே, ஒரு வருஷத்துக்குள்ள நான் வெயிட் பார்ட்டியாக மாற உன்னோட ஆசி வேணும்… அப்படி நடந்திட்டா முந்நூற்று அறுபத்தி ஐந்து கொழுக்கட்டை நைவேத்யம் பண்றேன்”என்று ஒருவர் மனதிற்குள்ளும்… மற்றொருவர் சத்தமாகவும் வேண்டிக்கொண்டனர்.
சத்தமாக வேண்டிக்கொண்டவரை, மௌனமாக வேண்டிக்கொண்டவர் முறைத்துப் பார்த்து… ‘நம்ம மனசுல வேண்டினதை அவரும் வேண்டிக்கொள்கிறாரே எப்படி?’ என்று திகைத்துவிட்டார்.
தினமும் காலையில் வந்து இருவரும் பிள்ளையாரின் முன் அமர்ந்து , மதியம் கோயில் நடை மூடும் வரை இருந்து வீட்டுக்கு செல்வது வாடிக்கையானது.
பிள்ளையாருக்கு குழப்பம்... யாருக்குத் துணைபோவது என்று.
அவரே மனதுக்குள், “நம்ம அப்பாதான் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து சோதிச்சார். சாதாரண மனுஷன்களும்… நம்மளை இப்படியா பண்ணுவாங்க? அவர்கள் என்னதான் செய்கிறார்கள்? நாமும் பார்ப்போமே...” என்று அப்பாவை தியானித்திருந்தார்.
தியானத்தில்… தந்தை சிவன் காட்சியளித்து, “மகனே பக்தர்கள் யாராவது வரம் கேட்டால் அதனைப் பரிசீலித்து, உடனே தந்து அருள்பாலி. நான் என் பக்தர்கள் யார் வரம் கேட்டாலும், உடனே தந்துவிடுவேன். ஆனால் உன் மாமா மாயவன் பக்தர்கள் வரம் கேட்டால் அவர்களுக்குப் பரீட்சை வைத்து சோதனை செய்த பின்னர்தான் வரம் அளிப்பார். அது அவருடைய தனிக்குணம்.
நீ என்னுடைய பிள்ளை அல்லவா? ஆகவே நீ என்னைப் போலவே அனைவருக்கும் வரம் தந்து அருள் பாலி” என அசரீரியாக உணர்த்தினார். அதை அப்படியே கடைப்பிடித்தார் யானை முகன்.
தனக்கு முன்னால் நின்று சத்தமாக வேண்டிக்கொண்டவன் மிகப்பெரியப் பணக்காரனாகி விட்டான். இதைப் பார்த்து மௌனமாக வேண்டிக்கொண்டவனுக்குக் கோபம் பொத்துக்கொண்டது…
“பிள்ளையாரே நீ செய்தது அநியாயம். இரண்டு பேருமே வேண்டிக்கொண்டோம். ஆனால், நீ அவனை வெயிட் பார்ட்டியாக்கி விட்டாய்… நான் முன்னமாதிரியே இருக்கிறேன். இது ஓரவஞ்சனை” என்று பிள்ளையாரை வம்புக்கு இழுத்தான்.
அதற்கு பிள்ளையார், “முட்டாளே… நீ என்னைப்போலவே அசையாமல் உட்கார்ந்துகொண்டிருந்தாய்… ஆனால் நான் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை. என் அம்மையப்பனை நாள்தோறும் தியானிக்கிறேன். அது தெரியாமல் நீயும் நாள்தோறும் கோயிலுக்கு வருவது, சும்மா அமர்ந்து வருகிறவர், போகிறவர்களை வேடிக்கைப் பார்ப்பது என வெட்டியாய் பொழுதைப் போக்கிவிட்டாய். அவனும் உட்கார்ந்துதான் இருந்தான்… ஆனால், மனதுக்குள் விதம்விதமாய் கற்பனை செய்து… வீட்டிற்கு போனதும் என்னைப் பலவித ஓவியங்களாக வரைந்து விற்று ‘வெயிட் பார்ட்டியாகி’ விட்டான். இதற்கு நான் என்ன செய்யட்டும்? போடா போ…. முயற்சி செய்….. முடங்கி கிடக்காதே”
- அசரீரியாய் சொன்னார் பிள்ளையார்.