
நம்பிக்கை தானே வாழ்க்கை?! பொண்ணு பார்த்தாலும் மாப்பிள்ளை பார்த்தாலும் சில சமயங்களில் நம்ம பதிலை, நாம நேரடியாகச் சொல்ல முடியாத சிக்கல்களில் சிக்கிக் கொள்வோம். மாப்பிள்ளை வீட்டாரோ பொண்ணு வீட்டாரோ ரொம்ப வேண்டியவங்களாப் போயிட்டா எப்படி இல்லைனு சொல்றதுன்னு தெரியாதப்போ... ‘சாமீட்ட பூக் கேட்டுச் சொல்றோம்!’னு பழியைச் சாமி பேர்ல போட்றது சிலரின் வழக்கம். சாமிதான் ஆபத்பாந்தவனாச்சே?! 'இல்லை'ங்கறதுக்கு ஒரு வழி, ‘சாரி! சாமி பூ கொடுக்கலைனு!’ சொல்றதுதான்.
அன்றைக்கு அந்த மலைக்குச் சாமி கும்பிடப்போனான் சாமிநாதன். கூட்டம் இல்லை! பூசாரி மட்டும்தான்! நீண்ட ‘கியூ’ வரிசை இல்லை. நேரடியாக முருகனின் முகம்பார்த்து வேண்டினான். தீபாராதனைத் தட்டு வைக்கும் நீள டேபிளில் இரண்டு பெரிய சில்வர் தட்டுகள். ஒன்றில் வெள்ளை ரோஜாக்கள் மற்றொன்றில் சிவப்பி ரோஜாக்கள். யாரோ பூஜைக்காகத் தன் வீட்டில் பூத்ததைக் கொடுத்திருக்கவேண்டும்.