
சென்னை திருநின்றவூரில் வாழ்ந்த பூசலார் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர். இவர் வேதங்களைக் கற்றுத் தேர்ந்தவர். ஈசனுக்கும், சிவனடியார்களுக்கும் தொண்டு செய்வதையே கடமையாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். சிந்தையாலும், செயலாலும் ஈசனின் திருவடிகளைப் பற்றிக் கொண்டிருந்த பூசலாருக்கு, சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் எழுப்ப வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஆசை இருந்தால் மட்டும் போதுமா? அதைச் செயல்படுத்தும் அளவிற்கு அவரிடம் பொருள் வசதி இல்லையே.
பூசலாரின் மனதில் வேதனை வாட்டியதைவிட, எப்படியாவது சிவாலயம் எழுப்ப வேண்டும் என்ற பேராவல் அதிகமாக இருந்தது. எப்பொழுதும் இதைப்பற்றிய சிந்தனையிலேயே இருந்தவர், ஒரு கட்டத்தில் கற்பனையிலேயே கோயில் எழுப்பும் பணியைத் தொடங்கினார்.
கற்பனையிலேயே கற்களைக் கொண்டு வந்து குவித்தார். முகூர்த்த நாள் பார்த்து, சுப வேளையில் ஆகம விதிப்படி அஸ்திவாரம் அமைத்தார். இரவு பகல் பாராமல் இதே சிந்தனையில் இருந்தார் பூசலார். உறங்காமல் அடுத்தடுத்து செய்ய வேண்டிய ஏற்பாடுகள் பற்றிய சிந்தனையிலேயே இருந்தார்.