ஆன்மீகக் கதை: காண்டீபம் - கர்ணன் இதை வாங்க மறுத்தது ஏன்?

Karna-Gandiva
Karna-GandivaAI Image - Glorious Hinduism
Published on
deepam strip
Deepam strip

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடத்தில் கொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன் "கர்ணா, இனி இவர்களின் சொத்து அனைத்தும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீப வில்லை நீ எடுத்துக் கொள்," என்றான்.

ஆனால், கர்ணனோ காண்டீபத்தை வாங்க மறுத்து விட்டான். "நான் எனது திறமையிலும், வலிமையிலும்  நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்கள் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை" என்று கர்ணன்  சொன்னான்‌. 

"ஆஹா, நீயல்லவோ சுத்த வீரன். அர்ஜுனன் காண்டீபத்தை நம்புகிறான். நீ உன் திறமையை நம்புகிறாய்," என்று கர்ணனை துரியோதனன் பாராட்டினான்.

அர்ஜூனன் வனவாச காலத்தில் வியாசரிடம் இதைச் சொல்லி வருத்தப்பட்டார். இதைக் கேட்டு சிரித்த வியாசர்  "கர்ணன் காண்டீபத்தை மறுக்க வேறு காரணம் உள்ளது. அதை அவன் வெளிக்காட்டவில்லை‌" என்றார்‌.

"அது என்ன?" என்று ஆர்ஜுனன் கேட்க,

"நேரம் வரும்போது சொல்வேன்" என்றார் வியாசர்.

பல ஆண்டுகள் கழிந்தன.  மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு தர்மபுத்திரர் முடிசூட்டிக் கொண்ட பிறகு அர்ஜுனன்‌ துவாரகைக்கு சென்றான்.

அங்கு கண்ணன் "நான் வந்த வேலை முடிந்தது. வைகுண்டம் செல்லவுள்ளேன். அதனால் அரண்மனையிலுள்ள பெண்களையெல்லாம் நீ பாதுகாப்பாக இந்திரப் பிரஸ்தத்துக்கு அழைத்துச் சென்றுவிடு" என்று கண்ணன் கூறினான்.

கனத்த மனத்துடன் விடைபெற்ற அர்ஜுனன் தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனை தாக்கினர். அவர்களைப் பதிலுக்குப் தாக்குவதற்காக தன் காண்டீபத்தை எடுக்க முற்பட்டான். ஆனால் அவனால் காண்டீபத்தைத் தூக்க முடியவில்லை‌ பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்த முடியாதவன் என்றும் வில் விஜயன் என பெயர் பெற்றவனான அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்தி விட்டார்கள்.

தன்வாழ்வில் முதல் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் ஆர்ஜுனன். அதுவும் சாதாரண திருடர்களிடம்‌ வெட்கத்தால் தலைகுனிந்து நிலையில் இந்திரப்ரஸ்தம்  வந்தான். அப்போது எதிரில் வந்த வியாசர், "அர்ஜுனா நீயும் உன் சகோதரர்களும் புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது" என்று வியாசர் கூறினார். 

இதையும் படியுங்கள்:
ஆன்மீகக் கதை: இலையால் அர்ச்சித்தவருக்கு இலைபோட்டு அர்ச்சிப்பது ஏன்?
Karna-Gandiva

"கண்ணனே புறப்பட்டுப் பிறகு நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம்‌, நாங்களும் புறப்படத்தயார். ஆனால் என்மனதில் பெரும் ஐயம் உள்ளது. இதுவரை நான் காண்டீ பத்தை  பொம்மை போல் கருதி அனாயாசமாக  கையில் ஏத்தினேன். இப்போது இது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே என்ன காரணம்" என்று அர்ஜுனன் கேட்டான்.

அதற்கு வியாசர், "உன்னால் இந்த காண்டீபத்தைத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்த காண்டீபத்தை ஏந்துவதற்கான பலத்தைத் தந்தான். அவனது அருளால் நீ அதை பொம்மை போல் தாங்கினாய். இப்போது பூமியைவிட்டு அவன் சென்றுவிட்டதால் உன்னால் இதைத் தூக்க முடியவில்லை. மேலும் நீ சூதாட்டத்தில காண்டீபத்தை இழந்த போது கர்ணன் அதை வாங்க மறுத்தான். ஏன் தெரியுமா? கண்ணனின் அருள் பெறாத கர்ணனால் இந்த காண்டீபத்தை அசைக்கக் கூட முடியாது‌. இது கர்ணனுக்கு நன்றாகத் தெரியும்‌. அந்தக் காரணத்தை வெளியே  சொல்ல விரும்பாத கர்ணன் கௌரவமாக தான் சுத்த வீரன் என்றும், இந்த வில்லை நம்பி தான் இல்லை என்றும் சமாளித்தான்."

இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கு கூட அந்த பலத்தை கடவுள் தான் வழங்குகிறார் என்பதை உணர முடிகிறது‌.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com