

அப்பாவுடன் அதிகாலையிலேயே ஆஞ்சநேயர் கோயிலுக்குக் கிளம்பினான் அரவிந்தன்.
“அரவிந்தா, பூக்கூடையை எடுத்துட்டயா?“ என்றார் அப்பா.
“எடுத்துட்டேன் அப்பா…! வீட்டுல இருக்கற செம்பருத்திப் பூவெல்லாம் பறிச்சுக் கூடைல நிறைக்கட்டுமா?!” என்றான் அரவிந்தன்.
“வேண்டாம்..! போற வழியிலெ பாட்டி கடைல வெற்றிலை மாலை இருக்கும். அதை வாங்கிட்டுப் போலாம்! ஆஞ்சநேயருக்குப் பிடித்தது அதுதான்!” என்று அப்பா சொன்னதும்,
“ஏம்ப்பா ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்துகிறோம்?" என்று கேட்டான் அரவிந்தன்.
“நாம நெனைச்ச காரியம், நல்லா நடக்கணும்னா ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்துவது வழக்கம்! காரிய சித்திக்கு அது ரொம்ப உதவுமாம்! நீ ஒண்ணு பண்ணு, வர்ற முழு ஆண்டுத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கவும், அடுத்து அடுத்து வரும் வருடங்களில் நல்லா படிச்சு உயரவும் வேண்டிக்கோ… அதுக்காக உன் கையால ஒரு வெற்றிலை மாலை வாங்கு…! பாட்டிக்கு நான் காசு கொடுத்துடறேன்!” என்று சொல்ல, பாட்டி கடையில் வெற்றிலை மாலை வாங்கினான் அரவிந்தன்.
பாட்டி அவனை வாழ்த்தி, "கோயிலுக்குப் போடப் போறயா கண்ணா..?? போடு! போடு! ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போடு! நல்லா படிப்பே!" வாழ்த்தினாள் கடைப்பாட்டி.