ஆன்மீகக் கதை: பாண்டுரங்கனின் மகர குண்டலங்கள்!
எந்த விஷ்ணு விக்ரகங்களாக இருக்கட்டும் காதில் அணியும் ஆபரணங்களில் மிகவும் தனித்து நிற்பது மகர குண்டலங்கள். மகர குண்டலங்களோடு பெருமாள் நமக்கு தரும் தரிசனமே தனி. இந்த விஷயத்தில் பண்டரிப்பூரில் இருக்கும் பாண்டுரங்கன் அணிந்திருக்கும் மகர குண்டலங்கள் பின் ஒரு தூய பக்தி கதையே உள்ளது. பாண்டுரங்கனின் லீலைகளை பற்றி உண்மை கதைகள் பல உண்டு.
அவற்றில் ஒன்றான இந்த கதை ஒரு ஏழை மீனவனை பற்றியதாகும். பண்டரிபூரில் மிகவும் பிரபலமானதும் புனிதம் நிறைந்ததாகவும் உள்ள நதி சந்திரபாகா நதி. இந்த நதிக்கு பீமா நதி என்ற பெயரும் உண்டு. இந்த நதிக்கரையில் மீனவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு பாண்டுரங்கன் மேல் அளவில்லா பக்தி.
பாண்டுரங்கனுக்கு பலர் காணிக்கையாக பொன்னும் பொருளும் நிலமும் தருகிறார்கள்; தன்னால் எதுவும் தரமுடிய வில்லை என்று பல நாட்கள் வருத்தப்பட்டு 'நாம் ஏன் நம்மால் முடிந்த எதையாவது பகவானுக்கு தரக்கூடாது' என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான். அந்த முடிவு என்ன தெரியுமா?
இரண்டு மீன்களை பாண்டுரங்கனுக்கு அர்ப்பணித்து அவரை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதுதான். முடிவெடுத்த மறுநாளே இரண்டு மீன்களை தட்டில் வைத்து பாண்டுரங்கன் கோவிலுக்கு சென்று அவைகளை பாண்டுரங்கனின் தலைமை பூசாரியிடம் நீட்டியும் விட்டான்.
"பாண்டுரங்கனுக்கு மீனா? என்ன திமிர் உனக்கு. மூளை கலங்கி விட்டது உனக்கு. உன் மீன்களை எடுத்துக்கொண்டு இடத்தை காலி செய் உடனே. இல்லையேல் நடப்பதே வேறு" என்று கோப பட்டு கத்தினார் பூசாரி. மீனவனும் ஒன்றும் சொல்லாமல் மிகுந்த ஏமாற்றத்தோடும் மற்றும் வருத்தத்தோடும் போய்விட்டான். இது நடந்த மறுநாள் காலையில் வழக்கம் போல பாண்டுரங்கன் விக்ரகத்திற்கு திருமஞ்சனம் செய்ய துவங்கியபோது பாண்டுரங்கன் காதுகளில் மகர குண்டலங்கள் உருவாகி இருந்தது கண்டு அதிர்ந்து போனார். அவருக்கு உடனே காரணம் புரிந்து விட்டது.
முன்னாள் தான் விரட்டி விட்ட மீனவன் அன்போடு பாண்டுரங்கனுக்கு கொண்டு வந்த மீன்களை தான் அவர் மகர குண்டலமாக மாற்றி அணிந்து கொண்டிருக்கிறார் என்று உணர்ந்தவர் அந்த மீனவனை தேடி கோயிலுக்கு அழைத்து வந்து பாண்டுரங்கன் எப்படி அவனது அன்பளிப்பை ஏற்று கொண்டார் என்று காண்பித்து அவனை தூய பக்தனின் ஸ்தானத்தில் வைத்து கவுரவித்தார்.
பாண்டுரங்கன் யார் அந்த கிருஷ்ண பரமாத்மா தானே! அவரது லீலைகளும் கேட்க மிகவும் இனிமையானவை ஆகும்.
விட்டல விட்டல பாண்டுரங்கா!

