

ஒரு குடும்பம் காசிக்குப் போனது. அது ஆன்மிக குலம் என்பதால் குடும்பத்தலைவர் வேதம் ஓதுவதும் வித்தை கற்பிப்பபதுமாக இருந்தார். குடும்பத் தலைவி இறந்துவிட்டார். தன் ஒரே மகளை நிறைய தர்மசாஸ்திரங்கள் கற்றுக்கொடுத்து வளர்ந்தார் தந்தை.
அவள் வளரவளர, அவளுக்கு திருமணம் செய்ய வேண்டுமே என தந்தை கவலைப்பட, அவளோ தான் திருமணம் செய்ய மாட்டேன் என மருத்தாள். வேறு வழியில்லாமல் நிலபுலன்கள் விற்று, தான் இறந்தாலும் பிறரிடம் கையேந்தாமல் வாழ தந்தை அவளிடம் கூறினார்.
தந்தை இறந்தபிறகு காசிக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக தங்க இடம், உணவு அளிப்பதையே பணியாக செய்ததோடு, மருத்துவப் பணி, கல்விப்பணியும் செய்ததால், அனைத்துச் செல்வங்களையும் இழந்து வறுமையில் வாடினார் இப்பெண்.
பலரிடம் கடன் வாங்கியதால் கடனும் தர மறுத்துவிடுகிறார்கள். காசி விஸ்வநாதரை வருத்தத்துடன் வேண்டுகிறாள். தனக்குக் கடன்களை திருப்பிக் கொடுக்கும் சக்தியை தனக்குக் கொடுக்கும்படி வேண்டுகிறாள்.
ஒரு நாள் ஒரு மகான் வர, அவரை வணங்கி தன் கவலையைக் கூற, அவர் ஒரு பெரிய செல்வந்தர் பற்றிக் கூறி, அவரிடம் சென்று கடன் கேட்கக் கூறுகிறார்.
செல்வந்தர் அவளிடம் "பெண்ணே உனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல் செலவு செய்துவிட்டாய். அடமானமாக என்ன இருக்கிறது உனக்குக் கடன் கொடுக்க?" என்றார் செல்வந்தர்.
அதற்கு அவள் "தங்கள் மாளிகை முன்பு இருக்கும் குளம் நான் கட்டியது தான். இந்த நீரை ஆயிரக்கணக்கான மனிதர்களும் விலங்குகளும் பயன்படுத்துகிறார்கள். இக்குளத்தில் யாரெல்லாம் பயன்படுத்துகிறார்களோ, அதனால் வரக்கூடிய புண்யபலனை அடகு வைக்கிறேன். 5 லட்சத்திற்கான புண்ணியம் சேரும்போது தங்கள் கடன் தீர்ந்ததாக வைத்துக் கொள்ளலாமா?" என்றாள்.
அதற்கு செல்வந்தர், "பொருளைத் தான் அடகு வைப்பார்கள். நீ சொன்னபடி, புண்ணியம் எனக்கு வருவது எப்படித் தெரியும்?" என்று கேட்க,
அப்பெண், "அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்." என்று கூறி குளக்கரையில் அவரை அழைத்துச் சென்று கருங்கல்லால் ஆன சிவலிங்கத்தைக் காட்டி, "ஈசனே இந்த தீர்த்தத்தின் அடியில் நீ இருக்க வேண்டும். எப்பொழுது அசலும் வட்டியுமாக புண்ணியம் இந்த செல்வந்தரிடம் சேர்கிறதோ அப்போது நீ மேலே மிதக்க வேண்டும்" என்று கூறி பலமுறை பஞ்சாட்சரம் கூறி வணங்கி அடியார்களின் துணை கொண்டு சிவலிங்கத்தை திருக்குளத்தில் நடுவே இடுகிறாள்.
பிறகு செல்வந்தரைப் பார்த்து "அய்யா, இவரை கல் என்று எண்ணிவிடாதீர்கள். காலைலியிருந்து கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை காலம் ஆகுமோ தெரியாது. தங்கள் கடன் தொகைக்கு சமமான புண்ணியம் சேரும் போது சிவலிங்கம் மேலே மிதக்கும்" என்கிறாள்.
நம்பிக்கையில்லாமல் செல்வந்தர் 5 லட்சம் தர, அப்பெண் சென்று விட்டார்.
செல்வந்தர் சில வேலையாட்களை அமர்த்தி கணக்கெழுதக் கூறினார். விடிந்து காலை 6 தான் ஆகிறது. காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சொந்தமான காளை ஒன்று குளத்து நீரை அருந்த செல்கிறது. அவ்வளவுதான் குபுகுபுவென தூபம் தீபம் சாம்பிராணி குங்கும சந்தன மணத்தோடு மேளதாளத்தோடு உடுக்கை ஒலிக்க பகவான் சிவலிங்கம் மேலே மிதக்கிறார். செல்வந்தர் உடல் நடுங்கிவிட்டார்.
'ஒரு மாடு நீர் அருந்திய புண்ணியத்திற்கே 5 லட்சம் சமம் என்றால் அந்தப் பெண்மணி செய்த அறப்பணிகளுக்கு முன் என் செல்வம் அனைத்தும் வீண்' என்பதை பரிந்து கொண்ட செல்வந்தர், அப்பெண்ணிடம் "என் மகளே கண்ணை திறந்து விட்டாய். செல்வம் நிலையானது அல்ல என்பதை புரிய வைத்தாய்," என்று கூறி, அப்பெண்ணை தத்து எடுத்து தானும் கடைசிவரை தான தர்மம் செய்தார்.
'தர்மங்கள் செய்கிறோம், ஆனால் நம் வாழ்க்கை சிறக்கவில்லை' என்று எண்ணுபவர்கள் இக்கதையை நினைவு கூர்ந்தால் கட்டாயம் உற்சாகம் கிடைக்கும்.