

கலிய நாயனார் திருவெற்றியூரில் உள்ள சக்கரபாடியில் செக்கார் குலத்தில் பிறந்தவர். இவர் சிறந்த செல்வந்தராக இருந்தவர். சிவன் மீது கொண்ட பற்றினால் திருத்தொண்டு செய்ய வேண்டும் என்று அந்த சிவாலயத்தில் எம்பெருமானுக்கு ஆயிரக்கணக்கான விளக்குகளை கோவிலின் உள் பிரகாரத்திலும் வெளிப்பிரகாரத்திலும் ஏற்றுவார். கலிய நாயனார் நெடுங்காலமாக விளக்கு ஏற்றும் இத்திருப்பணியை கோவிலுக்கு செய்து வந்தார்.
இதனை அறிந்த பரமசிவன் அவரது திரு தொண்டை உலகிற்கு உணர்த்த வேண்டும் என்று எண்ணினார். அதனால் அவருடைய செல்வங்கள் குன்றும்படி செய்தார். இருப்பினும் கலிய நாயனார் செல்வங்கள் இல்லாதபோதும் தம் உறவினர்களிடமிருந்து எண்ணெய் வாங்கி அதனை விற்று கோவிலுக்கு திருவிளக்கு ஏற்றி வந்தார். பின்னர் உறவினர்களும் உதவி புரியவில்லை.
மனம் தளரிய கலிய நாயனார் செக்கு ஆட்டும் ஆலைக்குச் சென்று கூலி வேலை செய்து வரும் பணத்தில் எண்ணெய் வாங்கித் திருவிளக்கு ஏற்றினார். பல புதிய வியாபாரிகள் வந்ததன் காரணமாக அந்த தொழிலும் அவருக்கு தடைபட்டது. இருப்பினும் அவர் கோவிலில் திருவிளக்கு ஏற்ற வேண்டும் என்ற எண்ணம் நீங்கவில்லை.
சிவன் மீது கலிய நாயனார் கொண்ட பற்றினால் தன் மனைவியை விற்று வரும் பணத்தில் கோவிலில் திருவிளக்கு ஏற்ற வேண்டும் என்று எண்ணி தன் மனைவியை நகர் எங்கும் கூவி கூவி விற்க தொடங்கினார். இருப்பினும் யாரும் வாங்க மறுத்ததால் மனம் தளரிய கலிய நாயனார், கோவிலுக்குச் சென்று செய்வதறியாது தவித்தார். சிவாலயத்திற்குச் சென்று விளக்குகளில் திரியிட்டு அதனை தன் ரத்தத்தால் ஏற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். தன் கழுத்தை அறுத்து அதில் வரும் ரத்தத்தின் மூலம் திருவிளக்கு ஏற்ற வேண்டும் என்று கத்தியினால் கழுத்தை அறுக்க முயன்ற போது சிவபெருமான் தோன்றி அவரது கைகளை பற்றிக் கொண்டார்.
கலிய நாயனாரின் சுயநலமற்ற உண்மையான பக்தியை கண்ட எம்பெருமான் அவரை தம் திருவடிகளில் சேர்த்துக் கொண்டார். சிவபெருமான் மீது ஏற்படும் பக்தியானது தானாக ஒரு மனிதனுக்கு ஏற்படாது. சிவன் அருளாலே அவன் மீது பக்தியும் அளப்பரிய அன்பும் தோன்றும்.
“அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்ற வரிகளுக்கு ஏற்ப சிவன் அருளாலே சிவத்தை நாம் உணர முடியும். இவ்வாறாக, கலிய நாயனார் இந்த பூவுலகில் எந்த செல்வம் மீதும் மனைவி மீதும் பற்றற்று சிவன் மீது அளப்பரிய அன்பு கொண்டவராய் சிவ தொண்டாற்றிய நாயனர் ஆவார்.