

முன்னொரு காலத்தில் சிவநேசன் செட்டியார் என்பவர் வாழ்ந்துவந்தார். சிறந்த வணிகரான இவர், தினமும் நிறைய பேருக்கு அன்னதானம் வழங்கி தொண்டாற்றி வந்தார். மேலும் இவர் திருஞானசம்பந்தரின் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். பல்வேறு தலங்களில் சம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, தன் மகள் பூம்பாவையை அவருக்குத் திருமணம் முடித்து வைக்க மனதுக்குள் ஆவல் கொண்டார்.
ஒருநாள், பூம்பாவை மலர் பறிக்க தோட்டத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த பாம்பு தீண்டி இறந்துவிடுகிறாள். மனம் மிகவும் வருந்திய சிவநேசர், பூம்பாவையின் அந்திமச் சடங்குகளை முடித்து, அஸ்தியைக் கரைக்க மட்டும் மனமில்லாமல், ஒரு குடத்தில் வைத்து பூம்பாவை வளர்ந்த மாடத்தில் வைத்து பாதுகாத்து வந்தார்.
ஐந்து வருடங்கள் கழிந்தன. திருஞானசம்பந்தர் திருவொற்றியூருக்கு வருகை புரிந்திருப்பதை அறிந்த சிவநேசர், தன் இருப்பிடத்திற்கு அவரை அழைத்துவர விரும்பினார். சம்பந்தரும் தன் அடியார்கள் வாயிலாக சிவநேசர் குறித்தும், பூம்பாவையின் இழப்பு குறித்தும் அறிந்து கொள்கிறார்.