தாலி மாற்றித் தரும் மலையேறி அம்மன்: குட்டையான பெண்களை வளர வைக்கும் தஞ்சை கிராமத்தின் வினோத திருவிழா!

Thanjavur Temple Festivals - மலையேறி அம்மன்
Thanjavur Temple Festivals - மலையேறி அம்மன்AI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து  மேடையில் “எங்க ஊர் சாமி எனும் தலைப்பில் உங்க ஊர் சாமியின் மகிமையை சொல்லுங்க’’ன்னு கேட்டிருந்தோம். அதில் தேர்வான சுவாரஸ்யமான கட்டுரைகளில் முதல் கட்டுரை இதோ…

தஞ்சை மாவட்டத்தில் உள்ள எங்கள் கிராமத்தில் மாரியம்மன், மலையேறி அம்மன் என்ற இரண்டு அம்மன்கள்தான் எங்க ஊரு சாமிகள். ஊரில் யார் வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் முதலில் பாக்கு பத்திரிக்கை படைப்பது இந்த அம்மன்களுக்குத்தான். அதேபோல் எங்கள் கிராமத்தில் குழந்தைகள் பிறந்தால் அந்த ஊரில் பிறந்த பெண்கள் எல்லோரும் அந்த குழந்தைகளுக்கு முதன் முதலில் முடி எடுப்பது மலையேறி அம்மனுக்குத்தான்.

Thanjavur Temple Festivals - மலையேறி அம்மன்
இந்திராணி தங்கவேல்

மலையேறி அம்மன் மகிமையால் உயரமாக வளரும் பெண் குழந்தைகள்:

அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் வைகாசி மாதம் முதல் புதன்கிழமை அன்று ஊருக்கு வந்து சேர்ந்து விடுவார்கள். அடுத்த நாள் வியாழக்கிழமையன்று திருவிழா பார்த்து, முடி எடுத்து நேர்த்திக் கடனை செலுத்திவிட்டுச் செல்வார்கள். எங்கள் ஊர் அம்மன்களின் மகிமை என்னவென்றால் மிகவும் வளர்ச்சி அதிகமாக இல்லாமல் குட்டையாக பெண் பிள்ளைகள் இருந்தால் அவர்களை களியாட்டம் என்று ஒரு திருவிழா வரும்.

அந்த நாளில் விரதம் இருக்க வைத்து, புத்தாடை அணிவித்து அழகாக அலங்கரித்து ஒரு மண் தோண்டியில் பச்சரிசி மாவினால் கோலமிட்டு, அதற்குள் மஞ்சள் தண்ணீர் நிரப்பி அதன் மீது மாவிலை வைத்து தேங்காய் வைத்து அந்த தோண்டியை அந்த குழந்தைகளின் தலையில் எடுத்துக்கொண்டு கோவிலில் சேர்ப்பதாக வேண்டிக்கொள்வார்கள். அதற்கு மது எடுத்தல் என்று பெயர். அப்படி செல்லும்பொழுது ஒரு சிறப்பு என்னவென்றால் அந்தப்பெண் குழந்தைகள் தாலியை அணிந்து செல்லவேண்டும். அந்தத் தாலி புதிதாக செய்வது அல்ல. வீட்டில் அம்மாவுடையதோ அல்லது பாட்டிமார்கள் இருந்தால் அவர்களுடையதாகத்தான் இருக்கும் அதை அணிவித்து வழி அனுப்பிவைப்பார்கள்.

இந்த மது எடுத்தல் நிகழ்ச்சியை புஷ்பவதியாகிவிட்டால் எடுக்கமாட்டார்கள். அதற்கு முன்பு வரைதான் இந்த வழக்கம் . இப்படி செய்தால் அம்மன் அருளால் வளர்ச்சி மேம்படும். நல்ல உயரமான வளர்ச்சியை எட்ட முடியும் என்பது எங்கள் ஊர் பெண்களின் நம்பிக்கை. இதை மூன்று வருடம், 5 வருடம் அல்லது வயது வரும்வரை என்று செய்பவர்கள் உள்ளனர். ஒரே வருடத்தில் முடித்துக் கொள்பவர்களும் உண்டு. இப்பொழுதும் குட்டையாக இருக்கும் சிறுமிகளைப் பார்த்தால் இந்த வருஷம் மலையேறி அம்மனுக்கு மது எடு கட கட என்று வளர்ந்து விடுவாய் என்று கூறுவார்கள். அப்படி ஒரு மகிமை உங்கள் அம்மனுக்கு.

தாலி மணிகளை திரட்டி நடக்கும் மலையேறி அம்மன் மது எடுத்தல் சடங்கு:

அடுத்தபடியாக காப்பு கட்டுதல் என்று அடுத்த கட்ட திருவிழா தொடங்கும் . அப்பொழுது சிரத்தையாக விரதம் இருந்து (15 நாட்களுக்கு மேலாக) வைகாசி புதன்கிழமையன்று இந்த மது எடுத்தல் நிகழ்வு நடைபெறும். அப்பொழுது ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மனைவி அல்லது கணவர் இல்லாத பெண்மணிகள் அந்த வீட்டில் இருக்கும் கொழுந்தனார் மைத்துனர் கூட சேர்ந்து காப்பு கட்டுதல், மது எடுத்தல் என்ற திருவிழா சடங்கு நடைபெறுவது உண்டு.

Thanjavur Temple Festivals - மலையேறி அம்மன்
Thanjavur Temple Festivals - மலையேறி அம்மன்AI Image

அப்பொழுது ஊரில் உள்ள பெண்மணிகள் அனைவரிடமிருந்தும் தாலி மணி, தாலி போன்றவற்றை சேகரித்து அந்த மது எடுப்பவர் கழுத்தில் அணிவித்து விடுவார்கள். அதற்கு எல்லா பெண்மணிகளும் எந்த இடத்தில் நிற்கிறார்களோ அம்மனுக்கு என்று கேட்டவுடன் தாலியை அப்படியே கழற்றி கொடுத்து அம்மனுக்கே அணிவிப்பதுபோல் கேட்பவரிடம் கழற்றிக் கொடுத்து விடுவார்கள். அதை எல்லாவற்றையும் ஒன்றாக கோர்த்து இரண்டு மூன்று தாலி சரடுகளில் அதைவிட கூட அதிகமாக வரும்.

அதில் அதிசயம் என்னவென்றால் வாங்கிக்கொண்டு போன மணி, தாலி, குண்டு எதுவுமே மாறாமலும் தொலைந்து விடாமலும் எப்படி வாங்கி சென்றார்களோ அப்படியே திருப்பிக் கொடுப்பதுதான் சிறப்பு. அந்த மது எடுக்கும் பெண்மணி கணவனை இழந்தவராக இருந்தாலும் இத்தனை தாலி மணிகளை அணிந்து கொண்டுதான் அந்த மது எடுக்கும் நிகழ்வு நடைபெறும். மூன்று பெண்மணிகளின் தலையில் இருக்கும் அந்த மது பானையை வாங்கி மலையேறி அம்மனுக்கு எதிராக ஆரத்தி போல் மூன்று முறை சுற்றி காட்டிவிட்டு அவர்கள் தலையில் வைப்பார்கள்.

அது ஒரு பெரிய திருவிழாவாக நடக்கும். அதற்கு மது காட்டுதல் என்று பெயர். இப்படி செய்வதால் பெண்களின் திருமாங்கல்யம் நிலைத்து நிற்கும் என்பது எங்கள் ஊர் பெண்மணிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: வானப்பிரஸ்த்தம்!
Thanjavur Temple Festivals - மலையேறி அம்மன்

அந்தத் தாலி, மணி, குண்டு, குழாய் என்று அனைத்தும் மாறிவிடாமல் எப்படி கொடுத்தோமோ அப்படியே கைக்கு கிடைப்பதில் இருந்தே அம்மனின் மகிமை புரிந்துகொள்ளலாம். மாரியம்மனுக்கு என்று இரண்டு நாள் திருவிழா நடக்கும். அப்பொழுது வயிற்று வலி மற்றும் நோய்களால் துன்பப்படுத்துவார்கள் மாவிளக்கு போடுகிறேன் என்று வேண்டிக்கொண்டு நோய் சரியான உடன் அந்த திருவிழா நாட்களில் வயிற்றில் மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

ஆதலால் நோய் நொடி நீங்கி வாழ, கல்யாண தடை நீங்க, வேலை வாய்ப்பு கிடைக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமணம் இனிதே நிறைவேற, என்று அனைத்துக்கும் எங்கள் அம்மன் அருள் புரிவதை பெரிய மகிமையாக நாங்கள் நினைக்கிறோம். பக்தர்களின் மனம் அறிந்து கேட்பதை கொடுப்பவளே எங்கள் மலை ஏறி அம்மன் மாரியம்மனின் மகிமை.

logo
Kalki Online
kalkionline.com