‘வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே
செந்தில் நகர் சேவகா வென
திருநீறு அணிவோர்க்கு மேவ வாராதேவினை!’
பெளர்ணமி திதியும், பூச நட்சத்திரமும் சேர்கின்ற நன்னாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கும் விழாவே தைப்பூசமெனப்படுகிறது. 1500 ஆண்டுகள் பழைமையானது. ‘தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த’ என்று திருஞானசம்பந்தர் அன்றே பாடியுள்ளார்.
ஆண்டிக்கோலத்தில் முருகக் கடவுள் பழனி மலை சென்று வீற்றிருக்கையில், அசுரர்களை அழிக்க, பார்வதி தேவியார் முருகனுக்கு ஞானவேலை தைப்பூச தினமன்று வழங்கியதாகக் கூறப்படுகிறது. தேவர்களின் படைத்தளபதியாக பொறுப்பேற்று, அசுரர்களை சம்ஹாரம் செய்ய முருகன் பயன்படுத்திய ஞானவேலை தைப்பூசத்தன்று வணங்கி வழிபட, எந்தவித கெட்ட சக்தியும் நம்மை அணுகாதென்பது நிச்சயம்.
இந்தியா மட்டுமல்லாது, வெளி நாடுகளிலும் தைப்பூசம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
பழனியில் பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறும் தைப்பூச திருவிழாவின் ஏழாம் நாள் வள்ளி - தெய்வானை சகிதம் முருகன் திருமணக் கோலத்தில் ரத வீதிகளில் தேரில் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். பக்தர்கள் பல நாட்கள் விரதமிருந்து, பல்வேறு வகை காவடிகள், பால் குடமெடுத்து பாத யாத்திரையாக வருவது வழக்கம். தாருகாசுரனை வதம் செய்த நிகழ்வு, பழனியில் கொண்டாடப்படுகிறது.
சிதம்பரம் சிவபெருமானும் உமாதேவியும் இணைந்து நடனமாடி தரிசனம் அளித்த நாள். சிதம்பரத்தில் அரும்பெரும் திருப்பணிகளை செய்த இரணியவர்மன் எனும் மன்னன், நடராஜப் பெருமானை நேருக்கு நேர் தரிசனம் செய்த தினம்.
வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒளியான திருநாள். வடலூருக்கு அருகேயுள்ள மேட்டுக்குப்பத்தில், லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் திருவிழாவாகக் கொண்டாடும் நாள்.
தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமென்பதால், தைப்பூசமன்று குரு வழிபாட்டினை மேற்கொள்வது மிகுந்த பலனை அளிக்கும்.
மும்பை செம்பூர், செட்டாநகர் முருகன் கோயிலில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்படும். அலகு குத்துதல், சர்க்கரைக் காவடி, தீரத்தக் காவடி, பறவைக்காவடி, பால் காவடி, தேன் காவடி, பால் குடம் என பக்தர்கள் எடுத்து 108 படிகளின் மீது ஏறி முருகப்பெருமானை தரிசிப்பது வழக்கம்.
மலேசியா, பினாங்கு, சிங்கப்பூர், மொரீஷியஸ், ஆஸ்திரேலியா போன்ற பல வெளிநாடுகளிலும் தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருக்கும் பத்துமலைக் கோயிலில் விமரிசையாக நடைபெறும் தைப்பூசம். உலகில் முதலிடம் வகிக்கும் Bath Caves கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ. வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. 400 மீட்டர் நீளமும் 100 மீட்டர் உயரமும் கொண்டது. எல்லாமே லைம் ஸ்டோன் குகைகள்.
1892ல் கண்டுபிடிக்கப்பட்ட பத்து கேவ்ஸ் 272 படிகளை உடையது. டெம்பிள் கேவ் (Temple Cave) 2000 மீட்டர் நீளமுடையது. இதனுள் சுப்பிரமணிய ஸ்வாமி வீற்றிருக்கிறார். தைப்பூச நாளன்று பத்து லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வந்து வழிபடும் கோயில்.
தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணிய ஸ்வாமி 21 அடி உயரமுள்ள வெள்ளி ரதத்தினுள் வைக்கப்பட்டு, இரண்டு காளைகள் அதை இழுக்க, பக்தர்கள் புடைசூழ பவனி வருவார்.
கோலாலம்பூரிலுள்ள ஜலான், ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் இருந்து, இந்த ரத ஊர்வலம் அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பமாகி, பத்து கேவ்ஸை மதியம் ஒரு மணி அளவில் அடையும். 15 கிலோ மீட்டர் தூரமுடையது. ரதம் வருகின்ற வழியில், நம்மூரைப் போலவே, ஆங்காங்கே முக்கியமான இடங்களில் நிறுத்தப்பட்டு, பக்தர்கள் தேங்காய் - பழம் நிவேதனம் செய்து வழிபடுவதுண்டு. கோலாட்டம், கரகாட்டம், பக்திப் பாடல்கள் என அமர்க்களப்படும். விதவிதமாக அலங்கரிக்கப்பட்டு இருக்கும் காவடிகளை பக்தர்கள் ஏந்தி வருவார்கள். சில காவடிகளின் கனம் 100 கிலோ வரை இருக்கும். இந்தியர்களும், சீனர்களும் மலாய்க்காரர்களும், ‘வேல்! வேல்!’ எனக் கூறியவாறே பால் குடம் எடுத்து வந்து வழிபடுவதுண்டு.
தைப்பூச தினத்திற்கு மறுநாள் வெள்ளித்தேர் மீண்டும் ஜலான் கோயிலுக்கு வந்துவிடும்.
குழந்தைப்பேறு வேண்டும் தம்பதிகள், தங்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது வழக்கம். எப்படியென்றால், இரு நீள கரும்புத்துண்டுகளுக்கு நடுவே ஆரஞ்சு நிற துணியைத் தூளி மாதிரி கட்டி அதனுள் குழந்தையை படுக்கவைத்து, தோள் மீது ஏந்தி சுமந்து செல்வார்கள். அங்கப் பிரதட்சணம் செய்பவர்களும் உண்டு.
அனைவராலும் பெருமையாகப் பேசப்படுவதாகும் பத்து கேவ்ஸ் தைப்பூச பண்டிகை. மனதார பிரார்த்தித்து வேண்டுபவர்களுக்கு அருள்புரிபவர் முருகப்பெருமான். தைப்பூசமன்று முருகப்பெருமானை நாமும் வணங்கி வழிபடுவோம்.