Sri Dwarkadhish
Sri Dwarkadhishhttps://in.pinterest.com

தங்கப் பல்குச்சியால் பல் துலக்கி உணவு படைக்கும் ஸ்ரீ கிருஷ்ணர் கோயில்!

முக்தி தரும் ஏழு நகரங்களில் துவாரகையும் ஒன்று. துவாரகாதீசர் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள இக்கோயில் ஐந்து ஆழ்வார்களால் பாடப்பட்ட க்ஷேத்ரம். இது பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், ஆண்டாள் ஆகிய ஐந்து ஆழ்வார்களால் பாடப்பட்ட தலமாகும். ஓகா துறைமுகத்திற்கு அருகில் கோமதி என்னும் புண்ணிய நதிக்கரையின் கரையில் அமைந்துள்ளதால் இதனை, ‘கோமதி துவாரகா’ என அழைக்கின்றனர்.

உண்மையான துவாரகை கடலில் மூழ்கி விட்டது. துவாரகை ஆறு முறை கடலுக்கு அடியில் மூழ்கியதாகவும் இப்போது பூமியில் காண்பது ஏழாவது முறையாக அமைக்கப்பட்டுள்ள துவாரகை என்று கூறப்படுகிறது. ஸ்ரீகிருஷ்ணனின் பேரன் வஜ்ரநாபி என்பவரால் எழுப்பப்பட்டது இக்கோவில். இங்குள்ள மக்கள் துவாரகா நாத்ஜி ஆலயம் என்று இதனை அழைக்கிறார்கள். இக்கோயில் சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டதாகும்.

சிறிய மலையின் மீது அமைந்துள்ள இக்கோயிலுக்கு 56 படிகள் உள்ளன. ஐந்து அடுக்கு கோயில் இது. 43 மீட்டர் உயரம் உள்ள கோபுரத்தின் மேல் 52 கெஜம் துணியால் செய்யப்பட்ட கொடி பறக்கிறது. கோயிலுக்குள் நுழைவதற்கு இரண்டு வாயில்கள் உள்ளன. வட வாசலை மோட்ச வாசல் என்று அழைக்கிறார்கள். இந்த வாசல் வழியாக சென்றால் மூலஸ்தானத்தை அடையலாம். மற்றொரு வாசலான தெற்கு நுழைவு வாசலுக்கு சொர்க்கவாசல் என்று பெயர். இதன் வழியாகச் சென்றால் கோமதி நதியை அடையலாம்.

இக்கோயிலின் அடிவாரத்தில் உள்ள சுதாமா சேது என்ற பாலம் கோமதி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஒரு தொங்கு பாலமாகும். இந்த பாலத்திலிருந்து அரபிக்கடல், கோமதி நதி மற்றும் துவாரகாத்தீஸ்  கோயில் ஆகியவற்றைக் காண முடிகிறது. 5000 ஆண்டுகளாக அவ்வப்போது ஏற்பட்ட கடல் சீற்றத்தாலும், பிற இன்னல்களாலும் இத்தலம் பாதிக்கப்பட்டபோதெல்லாம் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கோயில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டதாகும்.

கண்ணனின் வரலாற்றோடு தொடர்புடைய இந்த இடம் கண்ணனால் நிர்மாணிக்கப்பட்டு கடைசி வரை அரசாண்ட இடமாகக் கூறப்படுகிறது. தனது மாமனான கம்சனை மதுராவில் வதம் செய்த பிறகு துவாரகையின் மன்னனாக முடிசூடிய கண்ணன், வைகுண்டத்திற்கு திரும்புவதாக முடிவு செய்யும் வரை துவாரகை நகரிலேயே வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இத்தலத்து இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் துவாரகாதீசன், கல்யாண நாராயணன் என்ற பெயர்களுடன் அருள்புரிகிறார். கருவறையில் அமைந்துள்ள மூலவர் சாளக்ராமத்தால் ஆனது. பார்ப்பதற்கு கருங்கல்லால் ஆன விக்ரகம் போல் காட்சியளித்தாலும் இது சாளக்ராமத்தால் ஆனது. இறைவி கல்யாண நாச்சியார் மற்றும் எட்டு பட்டத்தரசிகள் அமைந்துள்ள கோயில் இது. இத்தல தீர்த்தம் கோமதி நதியாகும். விமானம் ஹேமகூட விமானம் என்னும் அமைப்பைச் சேர்ந்தது.

இத்தலத்தில் ஆதிசங்கரர் நிறுவிய சாரதா பீடம் உள்ளது. ‘ஜகத் மந்திர்’ எனப்படும் இக்கோயில் மிகப்பெரிய அரண்மனை போன்று அமைந்துள்ளது. இங்கு அவரது பட்டத்தரசிகளும், அண்ணன் பலராமனும், குருவாகிய துர்வாசரும் தனித்தனியே சன்னிதிகள் கொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
கோபப்படும் கணவரை மிஸ்டர் கூலாக மாற்றும் தந்திரம்!
Sri Dwarkadhish

க‌‌ருவறையில் ஸ்ரீ கிருஷ்ணர் சங்கு, சக்கர கதாபாணியாக பத்மத்துடன் ராஜ அலங்காரத்தில் தலையில் முண்டாசுடன் காட்சி தருகிறார். கண்ணனுக்கு உணவும், உடையும் ஓயாமல் கொடுத்துக்கொண்டே இருக்கின்றார்கள். ஒரு நாளைக்கு 17 முறை உணவு கொடுத்து, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடை மாற்றுகிறார்கள்.

காலையில் இங்கு நடைபெறும் திருப்பள்ளியெழுச்சியை உடாபன் என்று அழைக்கிறார்கள். அப்போது ஸ்ரீகிருஷ்ணனுக்கு தங்கப்பல் குச்சியால் பல் விளக்கி லட்டும், ஜிலேபியும் தருகிறார்கள். உண்ட களைப்பு மாறுவதற்குள் மீண்டும் 8 மணிக்கு பால், சர்க்கரை, தயிர் போன்று தருகிறார்கள். பிறகு அப்பமும், அக்காரம் பாலில் கலந்து அமுதும், சிற்றுண்டியும் தருகிறார்கள். அதன் பிறகு பழங்கள் தரப்படுகின்றன. பிறகு ஜீரணத்திற்காக லேகியமும் தருகிறார்கள். இதன் பிறகு கண்ணன் உறக்கம் கொள்கிறான். இவ்விதம் கண்ணனுக்கு உணவு கொடுக்கும் முறைக்கு போக் என்று பெயர்.

பக்த மீரா மேவாரிலிருந்து பாலைவனத்தில் நடந்து வந்து கண்ணனுடன் இரண்டறக் கலந்தது இந்தத் தலத்தில்தான். இக்கோயில் கொடி ஒரு நாளைக்கு ஐந்து முறை ஏற்றப்படுகிறது. இதில் சூரியன், சந்திரன் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஜன்மாஷ்டமி மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தவிர, தீபாவளி, ஹோலி பண்டிகை மற்றும் குஜராத் புத்தாண்டு போன்றவை விசேஷமாக கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயம் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com