நமது நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய ஷீரடி ஶ்ரீ சாயி பாபாவின் அமுத மொழிகள் பொதுவானவை மற்றும் மனிதனை நல்வழிப் படுத்துபவை. அவைகளை நினைவில் வைத்து செயல்பட்டால் அவைகள் எப்போதும் நமக்கு நன்மைகளையே அளிக்கும். மனிதனின் குணங்களை மேம்படுத்த பாபா கூறிய பின்வரும் அறிவுரைகள் விலைமதிக்க முடியாதவை.
“ஏதேனும் உறவோ தொடர்போ இல்லாவிடில் ஒருவரும் எங்கும் செல்லுவதில்லை. ஏதேனும் ஜீவராசிகளோ, மனிதர்களோ உங்களிடம் வர நேர்ந்தால் அவர்களை பண்பின்றி விரட்டி விடாதீர்கள். அவர்களை நல்ல முறையில் வரவேற்று உரிய மரியாதையுடன் நடத்துங்கள். தாகத்துக்குத் தண்ணீரையும், பசித்தவர்களுக்கு உணவையும், ஆடையற்றவர்களுக்கு ஆடைகளையும், இளைப்பாறுவதற்கு இடமும் அளித்தால் கடவுள் நிச்சயமாகப் மகிழ்வடைகிறார். யாராவது உங்களிடம் பணம் கேட்டு நீங்கள் கொடுக்க விரும்பவில்லை என்றால், கொடுக்காதீர்கள்.
யாரேனும் உங்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான விஷயங்களைப் பேசட்டும், ஆனால் நீங்கள் கசப்பான பதிலளித்து கோபப்பட வேண்டாம். இதுபோன்ற விஷயங்களை நீங்கள் எப்போதும் பொறுத்துக் கொண்டால், நீங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உலகம் தலைகீழாக மாறட்டும்; நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள். உங்கள் இருப்பிடத்தில் நின்று கொண்டோ, வசித்துக் கொண்டோ உங்களுக்கு முன்னால் நடக்கும் எல்லாவற்றையும் கடந்து செல்லும் காட்சியாக அமைதியுடன் பார்த்துக் கொண்டிருங்கள்.
“என்னிடமிருந்து உன்னைப் பிரிக்கும் வேற்றுமைச் சுவரை இடித்துவிடு, அப்போது நமது சந்திப்புக்கான பாதை தெளிவாகவும் திறந்ததாகவும் இருக்கும். நான், நீ என்ற வேறுபாடு, சீடனை அவனது குருவிடம் இருந்து விலக்கி வைக்கும் தடையாக இருக்கிறது. அது அழிக்கப் படாவிட்டால், ஐக்கியம் அல்லது பிராயச்சித்த நிலை சாத்தியமில்லை.”
"கடவுள் மட்டுமே ஒரே உரிமையாளர்; வேறு யாரும் நமது பாதுகாவலர் அல்ல. அவர் வேலை செய்யும் முறைமை அசாதாரணமானது, விலைமதிப்பற்றது மற்றும் புரிந்துகொள்ள முடியாதது. அவருடைய சங்கல்பமே நிறைவேறும், அவர் நமக்கு வழி காட்டுவார், நம் உள்ளத்தின் விருப்பங்களை பூர்த்தி செய்வார். முன் ஜென்ம உறவின் மூலமாகவே நாம் ஒன்று சேர்ந்துள்ளோம், நாம் ஒருவரையொருவர் நேசித்து சேவை செய்து மகிழ்ச்சியாக இருப்போம். எவன் வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோளை எய்துகிறானோ அவன் இறவா புகழுடையவன் மற்றும் மகிழ்ச்சி யடைவான், மற்றவரெல்லாம் வெறுமனே மூச்சுவிடும் வரை வாழ்கிறார்கள்.
அறிவுரை வழங்குவதற்கு சாயிபாபாவுக்கு எத்தகைய சிறப்பான இடமோ, குறிப்பிட்ட நேரமோ தேவையிருக்கவில்லை. சந்தர்ப்பம் நேரிட்டபோதெல்லாம் அறிவுரை வழங்கினார். பொதுவாக மற்றவர்களை அவதூறாகப் பேசும் போக்கைக் கொண்டவர்கள் தேவையில்லாமல் வெறுப்பையும் தீய எண்ணத்தையும் ஏற்படுத்துகிறார்கள்.
முனிவர்கள் இந்தப் புறங்கூறுதலை மற்றொரு கோணத்தில் பார்க்கிறார்கள். அழுக்கை சுத்தப்படுத்த அல்லது அகற்ற பல்வேறு வழிகள் உள்ளன, அதாவது. மண், தண்ணீர் மற்றும் சோப்பு போன்றவற்றின் மூலம், ஆனால் புறங்கூறுபவனோ தனக்கென ஒரு வழியைக் கொண்டிருக்கிறான். அவன் தனது நாவினால் மற்றவர்களின் அழுக்கை (குறைகளை) அகற்றி நீக்குகிறான். ஒரு வகையில் அவன் தன்னால் திட்டப்படுபவனுக்கே உதவுகிறான். இதற்காக அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். புறங்கூறுபவனை சரிசெய்வதற்கு சாய்பாபா தனக்கே உரிய முறையைக் கொண்டிருந்தார். அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் கூறி நல்வழிப்படுத்தினார்.
ஜெய் ஸ்ரீசாயிராம்