மேற்கு வங்க மாநிலம், பர்தமான் மாவட்டத்தில் உள்ள குஸ்காராவின் உஜானி கிராமத்தில் அமைந்துள்ளது மங்கள சண்டிகை கோயில். 51 சக்தி பீடங்களில் சதி தேவியின் வலது மணிக்கட்டு விழுந்த இடம் இது என்று கூறப்படுகிறது. இங்கு மங்கள சண்டிகா தேவியின் சக்தி பீடம் நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள அன்னையின் பெயர் மங்கள சண்டிகை. இவள் துர்கை தேவியின் வடிவமாகப் போற்றப்படுகிறாள். இந்த அம்பிகைக்கு வளையல் சாத்தி பிரார்த்தனை செய்யப்படுகிறது. இவளை வழிபட அறிவும், ஆற்றலும் பெருகும் என்று கூறப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில் இது.
மேற்கு வங்கத்தில் 15 சக்தி பீடங்கள் உள்ளன. அதில் ஒரு சக்தி பீடம் மட்டும் பங்களாதேஷ் பார்டரில் அமைந்துள்ளது. மற்ற 14 சக்தி பீடங்களும் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளது. இவை அனைத்தும் சக்தி வாய்ந்தவை. மங்கள சண்டிகை பாராயண துதிகளில் மிகவும் மகிமை வாய்ந்தது. அம்பிகையிடம் ஏதாவது கோரிக்கை வைத்து அது நிறைவேற தொடர்ந்து 9 வாரங்கள் படிப்பது மிகுந்த பலனைத் தரும்.
கல்யாண காரியங்களில் மங்கலம் தருபவளாகவும், அதிக சாமர்த்தியமும் கோபமும் உள்ளவளாகவும் இருக்கும் தேவிதான் மங்கள சண்டிகை. மனு வம்சத்தில் பிறந்த மங்களன் என்பவன் ஏழு கண்டங்களைக் காக்கும் அரசனாக இருந்தான். அவன் சண்டிகையை வணங்கியதால்தான் ஏழு கண்டங்களையும் வெற்றி பெற முடிந்தது. மங்களன் பூஜித்து வெற்றி அடைந்ததால் துர்கை தேவி மங்கள சண்டிகை என்று அழைக்கப்படுகிறாள்.
மங்கள சண்டிகை என்பவள் மின்னல் ஒளியை உடையவள். சிம்ம வாகனத்தில் வீற்றிருப்பவள். ஒன்பது மாதர்களால் சூழப்பட்டவள். முக்கண்ணும் பிறை முடியும் தரித்தவள். காயாம்பு வண்ண மேனியுடன், நீலோத்பல மலர் போன்ற கண்களுடன் விளக்குபவள். சண்டன் என்ற அசுரனைக் கொன்றவள். மங்கள சண்டிகையான இவள் தனது எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், கதை, வாள், கேடயம், அம்பு, வில், பாசம் போன்றவற்றை கொண்டிருப்பவள்.
மகாவிஷ்ணு முதலான எல்லா தேவர்களும் திரிபுரங்களிலும் வெற்றி பெறுவதற்காக சகல திரவியங்களாலும் பூஜித்து இந்த தேவியை போற்றி வழிபட்டனர். அப்போது மங்கள சண்டிகை துர்கை வடிவாகத் தோன்றினாள். தன்னை வேண்டி நின்ற தேவர்களை நோக்கி எதற்கும் பயப்பட வேண்டாம். ருத்ரமூர்த்தியால் திரிபுர வெற்றி உண்டாகும் என்று கூறி மறைந்தாள்.
சிவபெருமான் துர்கையின் கூற்றுப்படியே திரிபுரங்களையும் அழித்தார். இதற்கு துணை நின்ற மங்கள சண்டிகையை தேவர்கள் பால், பழங்கள், தேன் கொண்டு பூஜித்து வழிபட்டனர். மங்கள சண்டிகையின் சுலோகத்தை சொல்வதும், காதால் கேட்பதும் சகல பாக்கியங்களையும் பெற்றுத் தரும் என்று பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
வெற்றியைத் தரும் மங்கள சண்டிகையை போற்றி வணங்குவது சிறப்பு. துன்பங்களைப் போக்குபவளான ஸ்ரீ துர்கையை போற்றும் மங்கள சண்டிகை ஸ்தோத்திரத்தை ராகு காலத்தில் சொல்வதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
இந்த சக்தி பீடத்தில் தேவியை ‘மங்கள சண்டிகை’ என்றும், சிவபெருமானை ‘கபிலம்பர்’ என்றும் போற்றி வணங்குகிறார்கள். இவருக்கு முன் அழகிய சிறிய நந்தியும் உள்ளது. அருகில் ஆதிபைரவரும் உள்ளார். இது மிகவும் பழைமையான கோயிலாகும். இங்கு துர்கா பூஜையும் மற்றும் சிறப்பு யாகங்களும் நடத்தப்படுகின்றன.
அழகான கிராமத்தில் வீற்றிருக்கும் இந்த மங்கள சண்டிகா தேவியின் ஆலயம் பர்தமான் குஸ்காரா டவுனில் இருந்து 39 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.