நாம் செய்கின்ற நல்வினைகள் தீவினைகள் பிறவிகள் தோறும் தொடருகின்றன. அவற்றை அனுபவித்தே ஆகவேண்டும் அதற்காகவே பிறவிகள் எடுக்கப்படுகின்றன.
ஏழுவகை பிறவிகளில் மனித பிறவி பெறுதற்கரிய பிறவியாகும். துன்பங்களுக்கு காரணமான பாவச் சுமையிலிருந்து விடுபட்டு பிறப்பும் இறப்பும் இல்லாத பேரானந்த வாழ்வினை பெருவாழ்வினை முற்றியடைதலே உயிர்களின் இறுதி லட்சியம்.
மனித உடலை எடுத்தது கடவுளை வணங்கி முக்தியின்பம் பெறுவதற்காகவே பழைய வினைகளை மாற்ற செய்யும் வலிமை பக்தி நெறிக்கு உண்டு. பக்தி நெறி மார்க்கத்தில் இறை நம்பிக்கை, இறையன்பு, இறைவனை பூரணமாக சரணடைதல், பிரார்த்தனை வழிபாடு விரதம் அனுஷ்டித்தல் இவை முக்கியமானவை. மாசி மாதத்தில் மகம் நட்சத்திரத்தில் பிறந்தும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மாசி மகம் என்று கொண்டாடப்படுகிறது மாசி மாதத்தில் சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் சந்திரன் நுழையும் தினத்தை மாசி மகம் என்கிறோம்.
மாசிமகம் வரும் நாளை கடல் லாடும் நாள், தீர்த்தமாடும் நாள் என்றும் அழைப்பார்கள். தீர்த்தமாடும் நிகழ்வின் சிறப்பை பற்றி கூற புராணத்தில் ஒரு தகவலும் சொல்லப்பட்டுள்ளது. ஒரு முறை வருண பகவானுக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. இதில் அவர் உடல் கட்டப்பட்ட நிலையில் கடலில் வீசப்பட்டார் அதிலிருந்து விடுபட நினைத்த வருணன் சிவபெருமானை நினைத்து பிரார்த்தித்தார். அதே சமயம் மழை கடவுளான வருணன் கட்டுண்டு கிடந்த காரணத்தால் உலகில் மழையில்லாமல் வறட்சியும் பஞ்சமும் நிலவியது. அனைத்து உயிர்களும் துன்பமடைந்தன இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சந்தித்து முறையிட்டனர்.
வருணபகவானை விடுவிக்கும்படி ஈசனிடம் வேண்டினர். தேவர்களின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் வருண பகவானை விடுவித்தார். அவர் விடுதலை பெற்ற நாள் மாசி மகத்திருநாள் என்று சொல்லப்படுகிறது. விடுதலைப் பெற்ற வருணன் மனம் மகிழ்ந்து சிவபெருமானை வணங்கினார். பின்னர் ஈசனிடம் இறைவா நான் பிரம்மகத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டு கடலில் கிடந்த போது நீருக்குள் இருந்தபடியே உங்களை வணங்கினேன். அதன் பயனாக எனக்கு விடுதலை கிடைத்தது. அதேபோல் மாசி மகத்தன்று புண்ணிய தீர்த்தங்களின் மூழ்கி நீராடி இறைவனை வழிபடும் அனைவருக்கும் அவர்களின் பாவங்களையும் பிறவி துன்பத்தையும் நீக்கி அருள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
சிவபெருமானும் வருணன் கேட்ட வரத்தை வழங்கினார். அன்று முதல் தீர்த்த மாடல் நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்று வருகிறது. மாசி மகத்தன்று பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் உள்ள ஆறு கடல் குளம் போன்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். ராமேஸ்வரம், தஞ்சை மாவட்டம் திருவையாறு, கும்பகோணம், நாகை மாவட்டம், வேதாரண்யம் போன்ற இடங்களில் நீராடி தர்ப்பணம் மற்றும் பிதிர்கடன்களை செய்வது நலம் மகத்தில் பிறந்தவர் ஜெகத்தை ஆள்வார் என்பது ஜோதிடவாக்கு. எல்லா மாதத்திலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நாளில் தான் உமா தேவியார் தட்சன் என்பவரின் மகளாக அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
தட்சன் தனது மகளாக சிவபெருமானின் சக்தியாகிய உமா தேவியார் வந்து பிறக்க வேண்டும் என்று வேண்டி தவம் இருந்தார். அவனது தவத்தை மெச்சிய சிவன் அவர் முன் தோன்றி அவர் கேட்ட வரத்தை வழங்கினார். உமா தேவியாரும் தட்சனுக்கு மகளாக பிறந்தார். அந்த தெய்வக் குழந்தைக்கு தாட்சாயிணி என பெயரிட்டு அன்போடு வளர்த்து சிவபெருமானுக்கு திருமணம் செய்து வைத்தார்..தாட்சாயிணி மாசி மகத்தன்று அவதாரம் செய்ததால் தேவியின் பிறந்த தினமாக புனித நாள் மகத்துவம் பெறுகிறது.
மக நட்சத்திரத்திற்கு அதிபதியான கேது பகவான் மோஷத்தையும் ஞானத்தையும் அருளக்கூடியவர் கோடீஸ்வர யோகத்தையும் வழங்கக்கூடிய வல்லமை உள்ளவர். மாசி மகத்தில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் சந்திரன் வருகிறது. அப்போது சிம்ம ராசிநாதன் சூரியன் கும்ப ராசியிலிருந்து சந்திரனை பார்க்கும் காலம் மாசி மாதம் மக நட்சத்திரத்துடன் இணைவதே மாசி மகமாக திகழ்கிறது. சிவன் விஷ்ணு முருகன் கோவில்களில் அபிஷேக ஆராதனைகள் வழிபாடுகள் நடைபெறுகின்றன.
மோட்சத்தை அருளக் கூடிய கேது பகவான் நட்சத்திரமான மகத்தில் இந்த நாள் அமைகிறது. இந்த நாளில் விரதம் இருந்து காலையிலிருந்து புண்ணிய தீர்த்தங்களின் நீராடி உலர்ந்த ஆடைகளை அணிந்து சிவ சிந்தனையுடன் சிவ கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். மதியம் ஒருவேளை உணவு உட்கொள்ள வேண்டும். இரவு பால் பழம் அருந்தலாம். அன்று முழுவதும் வேறு வேலைகளில் ஈடுபடாமல் தேவார திருவாசங்களை பாடியபடி இருக்க வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மாசி மக விரதத்தை அனுஷ்டிப்பதால் குழந்தை பேரு உண்டாகும். அத்துடன் மதியம் உண்ணும் போது சிவனடியார் ஒருவருக்கு அன்னதானம் வழங்குவது சிறந்தது.
பிறவி பெருங்கடலில் விழுந்து துன்பக் கடலில் அழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருள் கடலாகிய இன்ப வெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்னாளே மாசி மக கடலாடு தீர்த்த நாளாகும். புனித நீராடுபவர்களுக்கு சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் உரிய பலனை வழங்குவர். ஒரு முறை மூழ்கி எழுந்தால் பாவங்கள் விலகும், இரண்டாம் முறை மூழ்கினால் சொர்க்கப் பேறு கிடைக்கும், மூன்றாம் முறை மூழ்கி எழுந்தால் அவர் புண்ணியத்திற்கு ஈடே கிடையாது. நீராட முடியாதவர்கள் சிவ சிந்தனையுடன் மாசி மகபுராணம் படிக்க வேண்டும்.
(இந்துக்களின் பண்டிகைகள் பூஜை முறைகள் என்ற நூலில் இருந்து...)