கும்பத்தின் முக்கியத்துவம் அமிர்தம். பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் இணைந்து கடைந்து அமிர்தத்தை எடுத்தனர். அமிர்தம் வெளிவந்த உடனேயே தேவர்கள் அதை அசுரர்களுக்கும் கொடுக்காமல் தாங்களே வைத்துக்கொண்டனர். அசுரர்கள் தேவர்களிடமிருந்து அமிர்தத்தை பெற வேண்டும் என நினைத்து அவர்களை 12 நாட்கள் (பிரம்மனின் கணக்குப்படி ஒருநாள் ஒரு வருடம் 12 நாள் 12 வருடம்) பின் தொடர்ந்து வந்தனர்.
அந்த சமயத்தில் தேவர்களின் கைகளில் இருந்த அமிர்தம் பூமியில் 4 இடங்களில் விழுந்தது.அந்த அமிர்தத்தை பெற வேண்டும் என்பதற்காகத்தான் அந்த 4 இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நடைபெற்று வருகிறது.
கும்பமேளாவின் தொடக்க காலத்தை கூறுவது கடினம் என்றாலும், சில ஆன்மிக அறிஞர்களின் கூற்றுப்படி கும்பமேளா கி.மு. 3464ல் தொடங்கியது என்கிறார்கள். அத்தகைய கும்பமேளாவின் வகைகள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
கும்பமேளாவின் வகைகள்:
மகா கும்பமேளா: முந்தைய அலகாபாத் என்று அழைக்கப்படும் இன்றைய பிரயாக்ராஜில் மட்டுமே மகா கும்பமேளா நடத்தப்பட்டது. இது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது 12 பூர்ண கும்பமேளாவுக்குப் பிறகு நடத்தப்படுகிறது.
பூர்ண கும்பமேளா அல்லது கும்பமேளா: ஒவ்வொரு 12 வருடங்களுக்குப் பிறகு நடப்பது பூர்ண கும்பமேளா அல்லது கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது. பிரயாக்ராஜ், ஹரித்வார், நாசிக் மற்றும் உஜ்ஜைனியில் இத்தகைய கும்பமேளா நடைபெற்றது. முந்தைய கும்பமேளா 2013ல் பிரயாக்ராஜ், 2015ல் நாசிக் மற்றும் 2016ல் உஜ்ஜைனிலும், 2025ல் மீண்டும் பிரயாக்ராஜிலும் நடைபெறுகிறது.
அர்த்த கும்பமேளா: அர்த்த கும்பமேளா அல்லது அரை கும்பமேளா என்று அழைக்கப்படும் இது 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹரித்வார் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே நடைபெறும். முந்தைய அர்த்த கும்பமேளா 2016ல் ஹரித்வாரிலும், 2019ல் பிரயாக்ராஜிலும் நடைபெற்றது.
மாக் மேளா: மினி கும்பம் என்றழைக்கப்படும் மாக் மேளா ஆண்டுதோறும் பிரயாக்ராஜில் மட்டுமே நடைபெறும். முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நாள் தை அமாவாசை. இதுவரை முன்னோர்களுக்கு திதி கொடுக்காதவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் ராமேஸ்வரம், காசி போன்ற புனித இடங்களில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம்.
இதனால் பித்ரு தோஷ சாப விமோசனம் பெறுவதுடன் முன்னோர்களின் ஆசியை பெறலாம் என்பது ஐதீகம். அந்த வகையில் இந்த வருடம் தை அமாவாசை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கும்பமேளாவுடன் இணைந்து வந்தது சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.