
'தென்னாடுடைய சிவனே போற்றி ' என்ற வரிகளுக்கு ஏற்ப தமிழகம் முழுவதும் பல்வேறு சிவன் கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அந்த வகையில் 1000 முனிவர்களுக்கு சிவபெருமான் ஒரே நேரத்தில் காட்சி கொடுத்த பழமை வாய்ந்த சிவன் கோவில் தான் உத்திரகோசமங்கை மங்கள நாதசுவாமி கோவில். இக்கோவில்தான் சிவபெருமானுக்காக கட்டப்பட்ட முதல் கோவில் என்றும் சொல்லப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள உத்திரகோசமங்கை எனும் ஊரில் அமைந்துள்ளது இக்கோவில். உத்திரகோசமங்கை என்ற பெயருக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. அந்த வகையில் உத்திரம் என்பதற்கு உபதேசம் என்றும் கோசம் என்பதற்கு ரகசியம் என்றும் மங்கை என்பது பார்வதி தேவியை குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது.
'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை பார்வதி தேவிக்கு முதன்முதலாக சிவபெருமான் இக்கோவிலில் வைத்துதான் சொன்னதாகவும் ஒரு புராணக்கதை உண்டு.
ராவணனின் மனைவியான மண்டோதரி சிவபெருமானிடம் தவம் செய்து தான் ஒரு சிவபக்தரையே மணக்க விரும்புவதாக கூறியதாகவும், அதன் பொருட்டே சிவபெருமான் மண்டோதரியை இராவணனுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் ஒரு புராணக்கதை உண்டு. இதனைக் குறிக்கும் வகையில் இக்கோவிலில் உள்ள தூண்களில் மண்டோதரியின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.
நவகிரகங்களில் ஒருவராக இருக்கக்கூடிய சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூவருக்கும் இங்கு தனித்தனியாக வழிபாடு நடத்தப்படுகிறது.
இக்கோவிலின் தலவிருட்சமாக இலந்தை மரம் ஒன்று உள்ளது. இம்மரத்தின் கீழ்தான் சிவபெருமான் சுயம்பு வடிவமாக தோன்றியதாகவும் இக்கோவில் உள்ள இலந்தை மரம் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான மரம் என்றும் சொல்லப்படுகிறது. இதன் பழமையை வலியுறுத்தியே அங்குள்ள மக்களிடம் 'மண் தோன்றியதற்கு முன்பே (உத்திரகோச) மங்கை தோன்றியது' என்ற பழமொழி வழக்கத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோவில்களில் உத்திரகோசமங்கை சிவன் கோயில் இலக்கியங்களில் அதிகமாக பாடப்பட்டுள்ளது. மாணிக்கவாசகர் தான் பாடிய திருவாசகத்தில் கிட்டத்தட்ட 38 இடங்களில் இக்கோவிலை புகழ்ந்து பாடியுள்ளார்.
' வெளிவாய் அறுகால் உழுகின்ற பூம்
பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசே'
இதைப் போன்று 38 இடங்களில் மாணிக்கவாசகர் இத்தலத்தை திருவாசகத்தில் புகழ்ந்து பாடியுள்ளார்.
மேலும், அருணகிரிநாதர், காரைக்கால் அம்மையார் போன்ற பல்வேறு சித்தர்களும் புலவர்களும் முனிவர்களும் இங்குள்ள ஈசனை வணங்கி அருள் பெற்றதாகவும் புராணங்கள் கூறுகின்றன. இவற்றைத் தாண்டி 60,000 சிவனடியார்கள் வணங்கிய குறிப்புகளும் இக்கோவிலுக்கு உண்டு.
இத்தகையே பல பெருமைகளை இக்கோவில் பெற்று இருப்பதால் இத்திருத்தலம் சிவபுரம், சதுர்வேதி மங்களம், மங்களபுரம், ஆதி சிதம்பரம், பிரம்மபுரம் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.
ஆதி சிதம்பரம் என்ற பெயரால் அழைக்கப்படுவதன் மூலம் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் அங்கு காட்சி தருவதற்கு முன்பே இக்கோவிலில் காட்சி தந்ததாகவும், நடனமாடும் வகையில் மரகதத்தால் அமைக்கப்பட்டுள்ள இச்சிவன் கோயிலே சிதம்பரத்திற்கு முந்தைய சிவன் கோயில் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள நடராஜர் சிலை முழுக்க முழுக்க மரகத பாறையை குடைந்து 5 1/2 அடி உயரத்தில் செதுக்கப்பட்டுள்ளது.
மரகதத்தால் சிலை செய்யப்பட்டு உள்ளதால் பெரும்பாலும் இங்கு மேள வாத்தியங்கள் இல்லாமலேயே பூஜை நடத்தப்படுகிறது. மரகதத்தால் செய்யப்பட்டுள்ள சிலையை வருடத்தில் ஒரு நாள் மட்டுமே காண முடியும். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசனம் என்று சொல்லக்கூடிய திருவாதிரை திருநாளில் மரகதத்தால் செய்யப்பட்ட சிவபெருமானுக்கு பூசப்பட்டுள்ள சந்தன காப்பு நீக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. சிவபெருமான் உடலில் உள்ள பச்சை நரம்புகள் தெரியும் வகையில் தத்ரூபமாக இச்சிலை செதுக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு. இயல்பாகவே மரகதத்திற்கு அதிகமான மருத்துவ குணங்கள் இருப்பதால் சிவபெருமான் உடலில் பூசிய சந்தனத்தை பக்தர்கள் பிரசாதமாக பெற்று அதனை உடலில் தேய்த்துக் கொள்வதன் மூலம் தீராத நோய்களும் தீர்ந்து போவதாக நம்புவதாகவும் சொல்லப்படுகிறது.
கருவறையில் வைக்கப்பட்டுள்ள சிலை முழுக்க முழுக்க மரகதத்தால் செய்யப்பட்டுள்ளதால் இங்கு பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட நடராஜர் சிலை ஒன்றும் உள்ளது. திருவிழாக்களின் போது இச்சிலைதான் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இவற்றைத் தாண்டி நடராஜர், பைரவர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பால பைரவர் போன்றவர்களின் சிலைகளும் மிகவும் தத்ரூபமாக இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
சுமார் ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் மிகவும் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. நுழைவு வாயிலில் மிகப்பெரிய அளவில் யாழி ஒன்று வாயில் பெரும் கற்பந்தை வைத்திருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லை சுழற்ற முடியும் ஆனால் வெளியே எடுக்க முடியாத வகையில் மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பழம் பெருமையும் சிறப்புகளும் வாய்ந்த இத்திருத்தலத்தை நீங்களும் தரிசித்து சிவபெருமானின் அருளை பெறுங்கள்!