பூஜையறையில் வெற்றிலை பாக்கு வைக்கும் முறை!

வெற்றிலை...
வெற்றிலை...
Published on

பூஜையையும் வெற்றிலை பாக்கையும் பிரிக்கவே முடியாது; பிரிக்கவும் கூடாது. வீடுகளில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெற்றிலை பாக்கு வைத்துதான் பூஜை செய்வது வழக்கம். தட்டு நிறைய பழங்களையும் பூக்களையும் வைத்து பூஜை செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால்  பூஜை நிறைவு பெறாது. நம்முடைய நைவேத்தியமும் சுவாமியால் ஏற்கப்படாது.

வெற்றிலையின் விலை ஒன்றும் சாமானியர்களால் வாங்க முடியாதது அல்ல என்பதால் தட்டு நிறைய பழங்களை வைக்க முடிந்த நாம் வெற்றிலை பாக்கை வைக்க வேண்டும். மங்களகரமான பொருள் என்பதால் வெற்றிலை இல்லாமல் எந்த பூஜையும் கிடையாது, எந்த நல்ல காரியமும் கிடையாது.

வெற்றிலை என்பது பார்வதி தேவியாகவும், பாக்கு என்பது சிவனாகவும் கருதப்படுகிறது. எனவே வெற்றிலையையும் பாக்கையும் பிரிக்கக் கூடாது. இந்த வெற்றிலை இருக்கும் வீடுகளில் அமங்கல நிகழ்வுகளை தடுக்கும் ஆற்றல் உள்ளது என்கிறார்கள்.

வெற்றிலையில் முப்பெரும் தேவர்களும் முப்பெரும் தேவியர்களும் வாசம் செய்கிறார்கள். எனவே வெற்றிலை பாக்கை வைக்கும் போது தேவர்களுடன் தேவியர்களும் நம் வீட்டில் குடிகொள்வர் என்பது ஐதீகம். அழைப்பிதழ்களை வைக்க சென்றாலும் தட்டு பூரா பழம், தேங்காய், துணி என வைத்திருந்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அது அசிங்கப்படுத்துவது என்பது இன்றும் கிராமப்புறங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதெல்லாம் சரி வெற்றிலை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதுதான் பலருக்கு சந்தேகமாகஇருக்கும். இதற்கு சிறந்த உதாரணம், வாழை இலைதான். வாழை இலையை வைக்கும்போது நுனியை நமக்கு இடது புறத்திலும் அடி பாகத்தை வலது புறத்திலும் வைப்பர்.

அதில் காய்கறி, கூட்டு உள்ளிட்டவைகளை நிறைய சாப்பிட்டுவிட்டு ஸ்வீட், ஊறுகாய், அப்பளம் ஆகியவற்றை குறைவாக சாப்பிட வேண்டும் என்பதற்காக இடது புறம் குறுகலாக இருக்க வேண்டும் என்று சொல்வதும் உண்டு. சுவாமிக்கு படைப்பதற்கு இலை போடும் போது கூட சுவாமியின் இடது பக்கத்தில் நுனியும் வலது பக்கத்தில் அடியும் வர வேண்டும்.

அது போல்தான் வெற்றிலையிலும் நுனி பகுதி, காம்பு (அடி) பகுதி என உள்ளது. எனவே நுனி பகுதியை சுவாமிக்கு வைக்கும்போது அவருக்கு இடது புறத்திலும் அடி பகுதியை வலது புறத்திலும் வைக்க வேண்டும். இதே யாருக்காவது தாம்பூலமாக கொடுக்கும்போது எதிரெதிரே நின்றுதான் கொடுப்போம்.

இதையும் படியுங்கள்:
சுட்டிப் பெண்ணின் அழகு ஓவியங்கள்! (ஓர் நேர்காணல்)
வெற்றிலை...

அப்போது யாருக்கு கொடுக்கிறீர்களோ அவர்களுக்கு இடது புறத்தில் நுனியும் வலது புறத்தில் அடியும் இருப்பதுபோல் கொடுக்க வேண்டும். இதுதான் வெற்றிலையை பயன்படுத்தும் முறை. 

பூஜை அறையில் 4 வெற்றிலையையும் 2 பாக்கையும் வைக்க வேண்டும். தட்டு நிறைய வைப்பதென்றால் கணக்கே இல்லை. திதி உள்ளிட்ட கெட்ட காரியங்களுக்கு ஒரு வெற்றிலை ஒரு பாக்கைத்தான் வைக்கவேண்டும். அதுபோல் காம்பை கிள்ளிவிட்டு வெற்றிலை வைக்கக் கூடாது. காம்பில் பார்வதியும் நடு பகுதியில் சரஸ்வதியும் நுனி பகுதியில் லட்சுமி தேவியும் வாசம் செய்கிறார்கள். மூப்பெரும் தேவியர்களையும் ஒன்றாகத்தான் நம் வீட்டுக்கு அழைத்து பூஜை அறையில்அமர வைக்கவேண்டும். அதை விட்டுவிட்டு காம்பையோ நுனியையோ கிள்ளி போட்டு விட கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com