கடல் பூஜையில் அலைரூபமாக வந்து படையலை ஏற்கும் அதிசயம் - கோடி சுவாமிகள்!

கோடி சுவாமிகள்
கோடி சுவாமிகள்Image credit - kodiswamigal.com

செக்கச் செவேல் என்ற நிறம். சுருக்கங்கள் விழுந்த முகம். அதில் தவழும் அமைதி. வெண்மையான தாடி. ஒளி வீசும் கண்கள். குளிரானாலும் வெயிலானாலும் இரண்டு மூன்று கோட்டுகளை ஒன்றின் மேல் ஒன்று அணிந்தபடி இருப்பாராம் இந்த சுவாமிகள்.

சீரடி பாபாவின் மறு அம்சமாக கோடி சுவாமிகளை பார்க்கின்றனர் மக்கள். இவர் கொச்சைத் தமிழில்தான் பேசுவார். இவரின் இயற்பெயர், எப்போது பிறந்தார், எங்கு பிறந்தார், இவரின் தாய் தந்தையர் யார் என்ற எந்த விவரமும் தெரியவில்லை. அவரிடமே நிறைய பேர் கேள்வி கேட்கும்போது சிறு புன்னகை ஒன்றை மட்டுமே பதிலாக தருவார். ஆகவே அவரைப் பற்றி பூர்வீகம் எதுவும் யாருக்கும் தெரியவில்லை.

இவரை "தாத்தா சுவாமிகள்"என்றும் பக்தர்கள் அழைப்பார்கள். காரணம் சில நேரங்களில் எந்த ஒரு பக்தரையும் "தாத்தா" "தாத்தா"என்று அழைப்பாராம்.  சில நேரங்களில் இந்துஸ்தானியில் சில பாடல்களை பாடுவார். சில நேரங்களில் "ராம் ராம்"என ஜெபிப்பார். கல்கத்தா நகரில் உள்ள ஒவ்வொரு வீதிகளின் பெயரையும் கடகடவென்று பக்தர்களிடம் விவரிப்பாராம்.

தனுஷ்கோடி ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்தோணியார் கோவில் அருகே ஒரு மேடை மீது சதா சர்வ காலமும் ஒற்றைக்காலில் நின்றபடி தவம் செய்து கொண்டிருப்பாராம் சுவாமிகள். அவ்வழியே செல்கின்ற மீனவர்களும் மற்றவர்களும் இவர் கடும் தவத்துக்கு இடைஞ்சல் செய்யாமல் நகர்ந்து விடுவார்களாம்.

தனுஷ்கோடிக்கு பிறகு கோடி சுவாமிகள் திருச்சியில் சில காலம் தங்கினார். இவரைப்பற்றிய விவரம் 1940 ஆம் ஆண்டில் இருந்துதான் தெரிய வருகிறது. தனுஷ்கோடியில் இவர் ஒற்றை காலில் நின்று தவம் செய்து கொண்டிருந்தபோது இவரை கடந்து செல்லும் மீனவர்கள் இவரை பார்த்து விட்டு சென்றால் கடலில் மீன்கள் அதிகம் கிடைக்கும் என்று நம்புவார்கள்.

கோடி சுவாமிகள்...
கோடி சுவாமிகள்...

பக்தர்களில் ஏழை பணக்காரர் என்னும் பாகுபாடோ, ஜாதி மத பேதங்களோ பார்க்க மாட்டார் சுவாமிகள். இன்றும் இவரது சமாதிக்கு முஸ்லிம், கிறிஸ்துவர் உட்பட மதங்களைக் கடந்து பலரும் வந்து வணங்கி செல்கின்றனர்.

சுவாமிகள் தண்ணீர் குடித்து எவரும் பார்த்ததே இல்லையாம். ஆனால் பக்தர்கள் எப்போதாவது பாட்டிலில் கொண்டு வந்து கொடுக்கும் பன்னீரை குடித்து விடுவாராம். பக்தர்கள் அன்புடன் தரும் ஆரஞ்சு மிட்டாய், சாக்லேட்டுகள் ஆகியவற்றை சுவாமிகள் உண்பார்.

இதையும் படியுங்கள்:
நுரையீரல் பிரச்னைகளை தடுக்கும் பச்சைக் காய்கறி!
கோடி சுவாமிகள்

சுவாமிகளுக்கு பிடித்தமானது அன்னதானம் செய்வது. அதனால்தான் தனுஷ்கோடியில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. அத்துடன் மாசி மாத பௌர்ணமியை அடுத்த திருதியை அன்று சுவாமிகளுக்கு கடல் பூஜை செய்வதும் வழக்கமாக நடந்து வருகிறது. கடல் பூஜை அன்று காலை தனுஷ்கோடியில் யாகங்கள் செய்து பின் கடல் கரையில் படையில் போடுவார்கள். சுவாமிகள் அலை ரூபமாக வந்து அந்த படையலை ஏற்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது.

சென்னை பெருங்குடி திருமலை நகர் ஆறாவது குறுக்குத் தெருவில் கோடி சுவாமிகளின் அழகிய தபோவனம் ஒன்று உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் அங்கு சென்று தரிசனம் செய்து வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com