பறித்தவுடன் தங்க நிறமாக மாறும் வெள்ளை நிற பாரிஜாதம்!குந்தேஸ்வர் மகாதேவ் கோவிலின் மர்மம்!

Kundeshwar Mahadev Temple
Kundeshwar Mahadev Temple
Updated on
Deepam strip
Deepam strip

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாரபங்கி (Barabanki) மாவட்டத்தில் அமைந்துள்ளது குந்தி தேவி வழிபட்ட குந்தேஸ்வர் மகாதேவ் கோயில் (Kundeshwar Mahadev Temple). பாண்டவர்களின் தாயான குந்தி தேவி தவம் செய்து சிவலிங்கத்தை நிறுவி வழிபட்ட புகழ்பெற்ற தலம் இது.

குந்தேஸ்வரர் பெயர் காரணம்:

பாண்டவர்கள் தங்களுடைய அஞ்ஞாத வாச(தலைமறைவு வாழ்க்கை) காலத்தில் தங்களின் பாதுகாப்பிற்காகவும், போரில் வெற்றி பெறவும், குந்திதேவி சிவனை வழிபட விரும்பினாள். குந்தி தேவியின் ஆணைப்படி பலசாலியான பீமன் மலையில் இருந்து சிவலிங்கத்தை எடுத்து வந்து இங்கு ஸ்தாபிக்க, குந்திதேவி தினமும் இந்த ஈசனை வழிபட்டாள். குந்திதேவி வழிபட்டதால் இங்குள்ள சிவபெருமான் குந்தேஸ்வர் என்று அழைக்கப்படுகிறார்.

கருவறையில் ஈசன் செவ்வக வடிவில் காட்சி தருகிறார். இரண்டடி உயரத்தில் தலையில் குல்லா அணிந்தது போல நடுவில் லிங்க வடிவம் வித்தியாசமாக உள்ளது. கருவறை மீது வடஇந்திய பாணியில் கோபுரம் உள்ளது. இங்கு துர்கா தேவி தனி சன்னதியில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

பாரிஜாத மரம்:

கோவிலுக்கு அருகில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையான பாரிஜாத மரம் உள்ளது. அர்ஜுனன் இந்திரலோகத்திலிருந்து கொண்டு வந்து நட்டதாக நம்பப்படும் இந்த மரம் சிவபூஜைக்கு சிறப்பான மலராக கருதப்படுகிறது. இம்மரத்தில் பூக்கும் மலர்கள் மரத்தில் இருக்கும் வரை வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த மலர்களைப் பறித்தவுடன் தங்க நிறமாக மாறிவிடுகின்றன.

பீமன் கொண்டு வந்த லிங்கம்:

பாண்டவர்கள் தங்களின் வனவாச காலத்தில் இந்த இடத்தில் தங்கி இருந்தபோது குந்திதேவி சிவனை வழிபடுவதற்காக பீமனால் இங்கு ஒரு சிவலிங்கம் கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது. குந்தி தேவி தன் மகன்களின் நலனுக்காகவும், வெற்றி வேண்டியும் இந்த ஈசனை தினமும் பூஜை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இத்தலம் மகாபாரத காலத்துடன் தொடர்புடைய மிகவும் பழமையான, புனிதமான இடமாக பக்தர்களால் போற்றப்படுகிறது.

தல புராணம்:

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே போர் உறுதியானதும், வெற்றி வேண்டி குந்தி தேவி சிவ பூஜை செய்தாள். ஒரு நாள் அவள் கனவில் தோன்றிய ஈசன், "தங்க மலர்களால் என்னை பூஜை செய். வெற்றி நிச்சயம்" என்றதும் மகன் அர்ஜுனனிடம் தங்க மலர்கள் பூக்கும் மரத்தைக் கொண்டுவர கட்டளையிட்டாள்.

அர்ஜுனனும் கிருஷ்ணனிடம் சொல்ல, 'தங்கமலர் என்பது பாரிஜாத மலரைக் குறிக்கும். பாற்கடலில் தோன்றிய இந்த மரம் இந்திரலோகத்தில் உள்ளது' எனக் கூறினார். அர்ஜுனனும் தவம் செய்து அந்த தெய்வீக மரத்தைப் பெற்று மண்ணில் நட்டவுடன் வளர்ந்து பூ பூத்தது. மகிழ்ந்த குந்தி தேவி அன்று முதல் தங்க மலர் கொண்டு சிவ பூஜை செய்தாள். பாண்டவர்களும் போரில் வெற்றி பெற்றனர். தற்போதும் இந்த பாரிஜாத மரம் கோவிலுக்கு வெளியே உள்ளது.

இதையும் படியுங்கள்:
மலேசியாவில் உருவான முதல் சிவன் கோவில்!? கூர்க்கர் கட்டிய 160 ஆண்டுகால அதிசய ஆலயம்!
Kundeshwar Mahadev Temple

எப்படி செல்வது?

பாரா பங்கியிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அமாவாசை, சிவராத்திரி, ஆவணி மாதம் போன்றவை சிறப்பான நாட்களாக கொண்டாடப்படுகிறது. கோவில் காலை 6:00 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com