'அழகர் மலை' என்பது மதுரைக்கு வடக்கே 21 கி .மீ தூரத்தில் இருக்கிறது. இது கிழக்கு மேற்காக 18 கி.மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது. அதிலிருந்து பல சிறிய மலைகள், நாலா பக்கமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோயில் இருக்கிறது. இதில் அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது. இதற்குத் திருமாலிருஞ்சோலை, உத்யான சைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷ பாத்திரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு.
அழகர் கோவில் 108 வைணவ திவ்வியதேசங்களுள் ஒன்று. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலமாகும். இந்த மலையில் முதலில் காவல்தெய்வமாகப் பதினெட்டாம் படி கருப்பண்ண சுவாமியும், மலையடிவாரத்தில் கள்ளழகரும், மலை மேல் பழமுதிர்சோலையும், மலையின் உச்சியில் நூபுர கங்கை தீர்த்தமும், இராக்காயி அம்மன் கோவிலும் அமைந்துள்ளன.
பார்ப்பதற்கு காளை வடிவிலிருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான். தவத்தை மெச்சி எமதர்மனுக்கு பெருமாள் சாபவிமோசனம் தந்தபோது, 'இதேபோல் இங்கேயே தங்கியிருந்து பூலோக பக்தர்களுக்கும் அனுகிரகம் பண்ண வேண்டும்.' என்று எமதர்மன் கேட்டுக்கொண்ட காரணத்துக்காக இந்த மலையில் பெருமாள் குடிகொண்டதாகப் புராணம் சொல்கிறது.
எங்கும் இல்லாத சிறப்பாக இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜப் பெருமாள் சங்கு, சக்கரம், வில், வாள், கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இங்கு மட்டும்தான் பெருமாளின் கையில் உள்ள சக்கரம் புறப்படத் தயாராக இருக்கிறது. பக்தர்களிடமிருந்து அபயக்குரல் வந்தால், கண நேரமும் தாமதிக்காமல் துஷ்டர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக சக்கரத்தைப் பிரயோக நிலையிலேயே வைத்திருக்கிறார் பெருமாள்.
கோயில்களில் சுவாமிக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் வெண் பொங்கல் என்று படைப்பர். ஆனால் தோசையை நைவேத்தியமாக படைக்கும் பழக்கம் அழகர் கோயிலில் உள்ளது. இந்த தோசையுடன் கொண்டைக்கடலை, வடை, சர்க்கரை ஆகிய வழக்கமான நைவேத்தியமும் உண்டு. மாலை 6.30 மணி பூஜையில் சுவாமிக்கு தோசை நைவேத்தியம் தினமும் படைக்கப்படுகிறது. தாயார் சுந்தரவல்லிக்கு வெள்ளிக்கிழமை மட்டும் தோசை நைவேத்தியம் படைக்கப்படுகிறது.
அழகர் கோயில் நூபுர கங்கை தீர்த்தத்தில் நீராட்டு விழா. ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி தினத்தன்று ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி தைலக்காப்பு திருமஞ்சனம் நடக்கும். உலகிலேயே இங்கு மட்டும் தான் நேரடியான நீராட்டு விழா சிறப்பாக நடை பெறுகிறது 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அழகர் கோவில் சுந்தர்ராஜன் பெருமாளுக்கு மட்டுமே இப்படி நீராட்டு விழா நடைபெறும்... ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இந்த தீர்த்தம் அறியப்படுகிறது. இந்த தீர்த்தம் உற்பத்தியாகும் இடம் பல ஆராய்ச்சிகளுக்கு இடையிலும் கூட இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள்.
யானையின் துதிக்கைப் போல, பருமனாக அமைந்த கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்தில் வந்து விழுகின்றது, இந்த நூபுர கங்கை தீர்த்தம். இந்தத் தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. நோய்கள் தீர்க்கும் சக்திக் கொண்டதாக இத்தீர்த்தம் விளங்குகிறது. இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ்பெற்ற அழகர்கோவில் பிரசாதமான ‘சம்பா தோசை’ தயார் செய்யப்படுகிறது.
அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும், 2 மைல் தூரத்தில் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. சைத்ரோற்சவ காலத்தில் அழகர் மதுரைக்கும், வண்டியூருக்கும் போய்த் தங்கி இருப்பார். அப்போதும் கூட நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வந்துதான் அவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. வேறு தீர்த்தத்தில் அழகரை நீராட்டினால், அவர் உருவம் கருத்து விடுகிறது என்பதாலேயே இப்படி செய்யப்படுவதாக கூறுகிறார்கள்.