

தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் உத்தரகோசமங்கை என்ற இடத்தில் உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சிவபெருமான் வேத ரகசியங்களை பார்வதிக்கு உபதேசம் செய்த இடம். இக்கோவிலின் முக்கிய அம்சம் மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தன காப்பில் காணப்படுவது.
'மார்கழி திருவாதிரை' அன்று மட்டுமே சந்தனம் களையப்பட்டு மரகத நடராஜர் பச்சை நிறத்தில் காட்சி அளிப்பார். உலகின் மிகப்பெரிய பச்சை நிறத்தில் மரகத நடராஜர் இங்கு தான் உள்ளது. 'ஆருத்ரா தரிசனம்' அன்று மட்டுமே காட்சி தருவார். மேலும் இங்கு தாழம் பூவை பூஜைக்கு பயன்படுத்துகிறார்கள். இங்குள்ள மரகத நடராஜர் ஆறடி உயரம் உள்ளது.
'உத்திரம்' என்றால் ரகசியம். 'கோசம்' என்றால் உபதேசம். 'மங்கை' என்றால் பெண். சிவபெருமான் வேத ரகசியங்களை பார்வதிக்கு உபதேசம் செய்த இடம் என்பதால், 'உத்தரகோசமங்கை' என பெயர் பெற்றது. ஆயிரம் லிங்கங்களை கொண்ட சகசர லிங்கம் திருமேனியும் இங்கு உள்ளது. 3000 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை காண லட்சக்கணக்கில் இங்கு மக்கள் கூடுவார்கள்.
மூலவர் மங்களேஸ்வரர் அம்பாள் 'மங்களேஸ்வரி' என அழைக்கப்படுகிறாள். இந்த கோவில் ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானம் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது சமஸ்தானத்தின் திவான் நிர்வாகம் செய்து வருகிறார்.
சிதம்பரத்திற்கு அடுத்த இடத்தில் இந்த கோவில் உள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக காட்சி தருகிறார். இக்கோவில் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. உலகில் சிவன் முதன் முதலில் இங்கு தோன்றிய காரணத்தால், இந்த ஊர் சிவனின் சொந்த ஊராக கருதப்படுகிறது (First temple of lord shiva) என புராணம் கூறுகிறது. திருவிளையாடல் புராணத்தில் வலை வீசி மீன் பிடித்த படலம் இங்கு தான் நடைபெற்றது.
மேலும் திருப்பணிகளை பாண்டிய மன்னர்கள் செய்து வந்தனர். பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக சில காலம் உத்தரகோசமங்கை இருந்து வந்தது. இந்த தலம், சிவபுரம், தட்சிண கைலாசம், பிரம்மபுரம், மங்களகிரி, ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
ராவணன்- மண்டோதரி வழிபட்ட கோவிலாகும். இருவரும் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி இந்த கோவிலில் தவம் இருந்ததாக புராணம் கூறுகிறது. இத்தலத்தில் வேத வியாசர், புஜண்டர், வானாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்டு அருள் பெற்றனர்.
கோவில் வாசலில் விநாயகரும், முருகனும் காட்சியளிக்கின்றனர். இங்கு முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. இந்திரன் தன் ஐராவதத்தை இந்த கோவிலுக்கு வழங்கியதாக வரலாறு. இந்தக் கோவிலில் சுவாமிக்கு அம்பாள் தினமும் பூஜை செய்வதாக ஐதீகம். முன்னர் ஆதிசைவர்கள் கைவசம் இருந்த இந்த கோவில் அதன் பின்னர் ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கோவில் குளத்தில் வாழும் மீன்கள் கடல் நீரில் வாழும் மீன்கள் என்பது வியப்பை அளிக்கிறது. இந்தக் கோவிலில் தாழம்பூவை வைத்து பூஜை செய்தால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
இங்குள்ள வராகியை வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும். அலாவுதீன் கில்ஜி இந்த கோவிலில் உள்ள பச்சை மரகத லிங்கத்தை கொள்ளையடிக்க முயன்றார். அவரால் கொள்ளை அடிக்க முடியாமல் தோற்றுப் போனார். காகபுஜண்டர் சாபம் நீங்கிய ஸ்தலமாகும். இங்கு அறுபதாயிரம் சிவனடியார்கள் ஞான உபதேசம் பெற்றனர். காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு வந்து சிவனை பூஜை செய்வதாக புராணங்கள் கூறுகின்றன.
சித்திரை திருக்கல்யாணம், வைகாசி வசந்த உற்சவம், ஆனி மாதம் 10 நாள் திருவிழா, மார்கழி திருவாதிரை, மகா சிவராத்திரி ஆகியவை முக்கிய திருவிழாக்கள் ஆகும். 'ஆருத்ரா தரிசனம்' வெகு சிறப்பாக நடைபெறும். அன்று இந்து கோவிலில் லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள்.
மரகத நடராஜர் மீது உள்ள சந்தனத்தை வாங்கி வெந்நீரில் கரைத்து குடித்தால், தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
கோவில் பிரகாரத்தில் மகாலட்சுமியும், ராஜகோபுரத்தில் சரபேஸ்வரரும் காட்சி தருகிறார்கள். தலவிருட்சம் இலந்தை மரம். இங்குள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தமாகும். ஆதி காலத்தில் நவகிரகங்கள் அறியப்படாத காலத்தில் இந்த கோவில் தோன்றியது.