
வாழ்க்கையில் நமக்குத் துன்பங்கள் வரும்போது நாம் அனைவருமே நாடுவது இறைவனின் திருவடியைத்தான். இறைவனை எப்படி நாட வேண்டும் என்பதற்குக் கூட சில வழிமுறைகள் இருக்கிறது. தாயாரின் சரணங்களை பற்றி விட்டு, பின் பெருமானின் சரணங்களில் நாம் சரணாகதி செய்யும்போதுதான் பெருமான் நமக்காக இரங்கி, நம் மீது கருணை புரிவார். நம் வீடுகளிலேயே இதை பார்த்திருப்போம். ஒரு குழந்தை ஏதோ ஒரு தவறை செய்து விட்டது என்றால் அந்தக் குழந்தை நேரடியாக தனது அப்பாவிடம் சென்று, ‘தான் தவறு செய்து விட்டதாக’ தைரியமாகச் சொல்லாது. முதலில் தயங்கித் தயங்கி தனது தாயிடம்தான் அந்தக் குழந்தை அழுதுகொண்டே சொல்லும். குழந்தையின் கண்ணீரைப் பார்த்து பொறுக்க மாட்டாத தாய், அந்தக் குழந்தையிடம் சமாதானம் செய்து, தனது கணவரிடம் அக்குழந்தைக்காகப் பரிந்து பேசுவாள்.
ஏதாவது ஒரு பொருள் தனக்குத் தேவை என்றாலும், ஒரு குழந்தை தனது தாயிடம்தான் முதலில் கேட்கும். அந்தத் தாயின் பரிந்துரையின்பேரில், தன் தந்தை நிச்சயம் அந்தப் பொருளை தனக்கு வாங்கிக் கொடுத்து விடுவார் என்ற அந்தக் குழந்தையின் நம்பிக்கை நிச்சயம் பலிக்கத்தானே செய்யும்? அந்தக் குழந்தை வைத்திருக்கும் அதே நம்பிக்கையைத்தான் நாம் ஜகத்ஜனனியான சக்தியிடம், தாயாரிடம் வைத்திருக்க வேண்டும். ஸ்ரீயான அந்தத் தாயார் தனது குழந்தைகளான நமக்குச் செய்யக்கூடிய முக்கியமான ஆறு செயல்கள் என்னென்ன என்பது தெரியுமா?
முதல் செயல் ஸ்ருணோதி, அதாவது கேட்கிறாள் என்று அர்த்தம். முன் ஜன்மத்திலும், இந்த ஜன்மத்திலும் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ பல பாவங்களைச் செய்திருப்போம். அந்தப் பாவத்துக்கான தண்டனைகளை கர்ம வினையின் பலனாக இந்த ஜன்மத்தில் பல துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருப்போம். அப்படி அந்த கர்ம வினைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும், தண்டனைகளின் கடுமை நமக்கு குறைய வேண்டும் என்றால் நாம் நேராகச் சென்று முறையிட வேண்டியது தாயாரிடம்தான். ஏனென்றால், அவள்தான் நாம் பேசுவதை, நமது குறைகளைக் கேட்கிறாள் பரிவோடு.
ஸ்ரீ செய்யும் இரண்டாவது செயல் ஸ்ராவயதீ. அதாவது, கேட்க வைக்கிறாள். யாரை கேட்க வைக்கிறாள் என்றால், பெருமாளை. நாம் பகவான் முன் சென்று நிற்கும் போது, நாம் செய்த தவறுகளைத்தான் முதலில் பகவான் பார்ப்பாராம். அப்போது அவனது இதயத்திலேயே சிம்மாசனம் இட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் தாயானவள், ‘குழந்தை ஏற்கெனவே ரொம்ப மனக்கஷ்டத்தில் வந்திருக்கிறான்/ள். அந்தக் குழந்தையின் கஷ்டத்தை தயவு கூர்ந்து கேட்டு அதை நீக்குங்களேன்’ என்று சொல்லி நமக்காக பெருமாளிடம் நம் குறைகளைக் கேட்க வைக்கிறாளாம்.
மூன்றாவதாக ஸ்ரீ செய்வது ஸ்ருணாதி. அதாவது, நம்முடைய பாவங்களை எல்லாம் போக்கி, நம்மைத் தூய்மையாக்கி விடுகிறாளாம்.
ஸ்ரீயின் நான்காவது செயல் ஸ் ரீநாதி. நமக்கு உயர்ந்த பக்தியை அருளும் செயல். நம்மை நிச்சயம் இறைவன் கைவிடவே மாட்டார் என்கிற நம்பிக்கைதானே உயர்ந்த பக்தி. அந்த பக்தி நமக்குள் வளர விதை விதைப்பவள் தாயார்தான்.
ஐந்தாவது செயல் ஸ் ரீயதே. அதாவது, அனைவராலும் வணங்கப்படுகிறாள்.
முக்கியமான ஆறாவது செயல், ஸ்ரயதே. நமக்காக பெருமாளை சென்று ஆஸ்ரயிக்கிறாள் அதாவது வணங்குகிறாள்.
இனி, கோயில்களுக்குச் செல்லும்போதோ அல்லது வீட்டில் பிரார்த்தனைகள் செய்யும்போதோ முதலில், தாயாரை வணங்கி விட்டு பின் பெருமானை நமஸ்கரிப்போம். தாயாரின் அருளால் எல்லாம் ஜயமே என்று நம்புவோம்.