

ஜகதாத்ரி பூஜை (Jagadhatri Puja) என்பது குறிப்பாக மேற்கு வங்காளத்தில் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையாகும். மேற்கு வங்காளத்தை தவிர, ஒடிசா மற்றும் ஜார்க்கண்டின் சில பகுதிகளிலும் இந்த பூஜையானது கொண்டாடப்படுகிறது. துர்கா தேவியின் அவதாரமான ஜகதாத்ரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த பூஜையானது, தீமையை நன்மை வென்றதை குறிக்கிறது.
ஜகதாத்ரி பூஜை தீபாவளி அமாவாசை பிறகு ஒன்பதாம் நாளான அக்ஷய நவமியுடன் ஒத்துப்போகிறது . சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி என நான்கு நாட்களுமே துர்கா தேவிக்கு பூஜை நடைபெறும். இந்த நான்கு நாட்களும் துர்கா தேவிக்கு போக் என்று சொல்லக் கூடிய கிச்சடி மற்றும் கீர் அதாவது அரிசியால் செய்த பாயசத்தையும் நைவேத்யமாக படைத்து பிறகு பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்கள்.
ஜகதாத்ரி என்றால் “உலகைத் தாங்குபவர்" என்று பொருள்படும். ஜகதாத்ரி தேவி தந்திரங்களின் தெய்வமாகக் கருதப்படுகிறாள். மேலும் அனைத்து உலகங்களையும் அவள் தன்னுடைய கைகளில் வைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. அவள் பொதுவாக மூன்று கண்கள் மற்றும் நான்கு கரங்களைக் கொண்ட தெய்வமாக சித்தரிக்கப்படுகிறாள். அவள் கைகளில் சங்கு, சக்கரம், வில் மற்றும் அம்பு ஆகியவற்றை ஏந்தி இருக்கிறாள். சிங்கத்தின் மீது சவாரி செய்கிறாள். சிவப்பு நிற உடையணிந்து பிரகாசமான அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டவளாக காணப்படுகிறாள். மேலும் யானை வடிவில் இருக்கும் கரேந்திராசுரன் என்ற அரக்கனின் சடலத்தின் மீதும் அவள் நிற்பதாகக் சித்தரிக்க படுகிறது.
ஜகதாத்ரி தேவியுடன் தொடர்புடைய புராணக்கதை:
துர்கா தேவி, அசுரன் மகிஷாசுரனை அழித்து, பிரபஞ்சத்தையே அவனுடைய கொடுமைகளிலிருந்து காப்பாற்றினாள். அதனால் தேவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், அவர்கள் தங்களுடைய சக்திகளால் மட்டுமே தேவி வெற்றி பெற்றதாக நினைக்கத் தொடங்கினார்கள். இந்த நினைப்பானது, அவர்களை ஆணவமடையச் செய்தது.
இவர்களுக்கு உண்மையைப் புரிய வைப்பதற்காக, பிரம்மா ஒரு சிறிய புல்லை அவர்கள் முன் வைத்து அதை அழிக்கும்படி கேட்டார். தேவர்கள் தங்களால் இயன்றதைச் செய்தார்கள், ஆனால் தங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தியும் எளிய புல்லை எதுவும் செய்ய முடியவில்லை. தங்கள் அனைத்து சக்திகளுக்கும் மூல காரணம் "சக்தி" தான் என்பதை அவர்கள் அப்போது தான் உணர்ந்தார்கள். அனைத்து தேவர்களும் உடனடியாக தங்கள் மாயையையும் ஆணவத்தையும் கைவிட்டு, ஜகதாத்ரி தேவியை வணங்கத் தொடங்கினார்கள்.
இந்த பூஜையை முதன் முதலாக மேற்கு வங்காளத்திலுள்ள நாடியா என்ற பகுதியில் கிருஷ்ணாநகரைச் சேர்ந்த "மகாராஜா கிருஷ்ணச்சந்திரா" தொடங்கினார். பிரிட்டிஷ் காலத்தில், அவர் ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட போது இந்த பூஜை இடையே நிறுத்தி வைக்க பட்டது. மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக, இன்றும், இந்த விழா அதே ஆடம்பரத்துடனும், மகிமையுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஜகதாத்ரி பூஜை மிகவும் பிரமாண்டமாக மேற்கு வங்காளத்தில் சந்தன்நகர், கிருஷ்ணாநகர், ஹூக்ளி மற்றும் கொல்கத்தாவில் நடைபெறுகின்றன. குறிப்பாக சந்தன்நகர் அதன் அற்புதமான விளக்கு காட்சிகள் மற்றும் பந்தல் கலைத் திறனுக்கு பிரபலமானது . இந்த விழா ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது, இது மேற்கு வங்காளத்தின் பாரம்பரிய கலாச்சார செழுமையையும் ஆழ்ந்த பக்தியையும் வெளிப்படுத்துகிறது.