

குரு பகவானுக்கு ஏற்ற முக்கியமான தலமாக இந்த புளியரை தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. ஆலங்குடி குருபகவானுக்கு அடுத்த இடத்தில் இந்த கோவில் உள்ளது என்றால் மிகையாகாது. தென்காசி அருகே புளியரை என்ற கிராமத்தில் இந்த கோவில் உள்ளது. சதாசிவ மூர்த்தி என்ற சிவன் மூலவராக இருந்தாலும் தட்சிணாமூர்த்திக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
மூலவர் - சதாசிவ மூர்த்தி
இறைவி - சிவகாமி அம்பாள்
உற்சவர் - சதாசிவ மூர்த்தி
தலவிருட்சம் - புளியமரம்
இங்கு மூலவர் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். எல்லா கோவில்களிலும் தட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து அமர்ந்த நிலையில் இருப்பார். ஆனால் இந்த கோவிலில் சிவனுக்கும் நந்திக்கும் இடையில் தட்சிணாமூர்த்தி அருள்பாலித்து வருகிறார். சிவலிங்கத்தின் சுற்று பிரகாரத்தில் சதாசிவ மூர்த்தி, சண்டிகேஸ்வரர், முருகன், பைரவர், சப்த கன்னிகள் என தனி சன்னதிகள் உள்ளன.
தை மாதம் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். குருப்பெயர்ச்சி விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
இவை தவிர சனிப்பெயர்ச்சி, நவராத்திரி, ஆடிப்பூரம் முக்கிய விழாக்கள் ஆகும். இந்த கோவிலில் திருமண தடைகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், வேலை, தொழில் தொடங்கவும், பாவ தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த திருதலத்தில் வேண்டிக் கொண்டால் வேண்டியவை அனைத்தும் நடக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் உள்ளது. எனவே இங்கு எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தங்களுக்கு தோஷங்கள் நீங்கியவுடன் மீண்டும் இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.
தட்சிணாமூர்த்திக்கு முல்லை பூ மாலை, கொண்டைக்கடலை மாலை, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள்.
இந்த கோவிலுக்கு செல்ல 27 படிகள் உள்ளது. 27 படிகளும் 27 நட்சத்திரங்களை குறிக்கிறது.
நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இந்த 27 படிகளிலும் ஏறி சிவனை வழிபட்டால் அவர்களது தோஷம் தீரும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.
புளிய மரத்தின் அடியில் சிவன் காட்சியளிப்பதால் புளியரை என பெயர் பெற்றது. இந்த ஊர் சின்ன சிருங்கேரி எனவும் அழைக்கப்படுகிறது. வியாழக்கிழமை அன்று கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதேபோன்று குருப்பெயர்ச்சியின் போது இங்கு கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும். இங்குள்ள அம்பாள் சிதம்பரத்திலிருந்து கொண்டு வரப்பட்டதால் சிவகாமி என அழைக்கப்படுகிறார்கள்.
சமண மதம் மேலோங்கி இருந்த காலத்தில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சிலையை காப்பாற்ற இங்குள்ள தீட்சிதர்கள் நடராஜர் சிலையை பத்திரமாக தென்னகத்திற்கு கொண்டு வந்து இங்கு அடர்ந்து காணப்பட்ட புளிய மரத்தின் அடியில் உள்ள ஒரு பொந்தில் சிவலிங்கத்தை ஒளித்து வைத்தனர்.
அந்தப் புளிய மரத்தின் உரிமையாளர் இந்த சிவலிங்கத்தை கண்டு ஆச்சரியப்பட்டு தினசரி பூஜை பூக்களால் வழிபட்டு வந்தார். சமணர்கள் அட்டகாசம் முடிந்தவுடன் அங்குள்ள தீட்சிதர்கள் மீண்டும் இந்த சிலையை தேடி இந்த அடர்ந்தகாட்டுப் பகுதிக்குள் வந்தனர். அவர்களால் நடராஜர் சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு சிவனை நினைத்து மனம் உருகி வேண்டினார்கள். ஒரு அசரீரி மூலம் எறும்பு சாரையாக செல்லும், அது எந்த இடத்தில் முடிகிறதோ அங்கு நான் இருப்பேன் என்று சொல்லி அசரீரி சத்தம் மறைந்தது.
தீட்சிதர்கள் அந்த இடத்தை அடைந்து மீண்டும் சிவலிங்கத்தை கைப்பற்றி சிதம்பரத்திற்கு கொண்டு சென்றனர்.
மறுநாள் புளிய மரத்தின் உரிமையாளர் சிவலிங்கத்தை தேடும் போது கிடைக்கவில்லை. எனவே சிவனிடம் மனம் உருகி வேண்டி தனக்கு காட்சி தருமாறு வேண்டிக் கொண்டார். அதன்படியே சிவன் சுயம்புவாக காட்சியளித்தார்.
இவரைத்தான் சதாசிவமூர்த்தி என்று அழைக்கிறார்கள். இதனை கேள்விப்பட்ட இந்த பகுதியை ஆண்ட மன்னன் இதற்கு ஒரு கோவில் கட்டி கொடுத்தார்.
சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.
சிவன் வடபுறமும், அம்பாள் தென்புறமும் அருள்பாலிக்கிறார்கள்.
சிவனையும், தட்சிணாமூர்த்தியையும் ஒன்றாக தரிசிக்கலாம்.
காலை 6:00 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடை திறந்து இருக்கும்.
புளியரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர், திருநெல்வேலியில் இருந்து 78 கிலோமீட்டர் மற்றும் குற்றாலத்தில் இருந்து 18 கிலோமீட்டர், செங்கோட்டையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த புளியரை தட்சிணாமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. மிகச் சிறந்த பரிகாரத் தலமாகவும் குருவுக்கு ஏற்ற பிரதான கோயில் ஆகவும் செயல்பட்டு வருகிறது.