பக்தரின் சிறப்பு!

srirangam perumal
srirangam perumal
Published on

ஸ்ரீரங்கத்தில் தென் திருக்காவிரி தாண்டி (முன் காலத்தில்) குடிசையில் ஒரு பக்தர் வாழ்ந்து வந்தார். வடக்கேயிருந்து ஒரு பக்தர் பல நாட்கள் பயணித்து  ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். “உங்களுடைய குடிசையில் நான்கு நாட்கள் தங்கியிருந்து பெருமாளைச்சேவிக்கலாமா?” என்று இவரிடம் கேட்டார்.  பக்தரும் அனுமதித்தார்.

அதாவது ஸ்ரீரங்கத்தின் சிறப்பு, வீதிகளின் அமைப்பு, விசேஷம் இவற்றைத் தெரிந்து கொண்டு சேவிப்பது உத்தமம் என்று நினைத்தார். எப்படி தரிசனம் செய்ய வேண்டும், தாயார், பெருமாள் பிரபாவம், கருட மண்டபம், புஷ்கரிணி, ராயர் கோபுரம் சிறப்புகள் பற்றி விவரித்துச் சொல்லுமாறு ஸ்ரீரங்க பக்தரைக் கேட்டார் வடநாட்டு பக்தர்.

காவிரிக்கரை பக்தர் கையை விரித்தார்.

“சுவாமி! நான் காவிரி தாண்டி, ஒருநாள் கூட சென்றதில்லை. கோயிலுக்குப் போனதே இல்லை.”

வந்த பக்தருக்கு அதிர்ச்சி, வருத்தம்! “அடடா! இவ்வளவு அருகில் அரங்கனைச் சேவிக்கும் பாக்கியம் பெற்றும், கோயிலுக்குப் போகாத உம் கிருஹத்தில் தங்கினேனே! பாவி, நான்” என்று சொல்லிவிட்டு, பெருமாளை சேவிக்கப்புறப்பட்டார்.

ஸ்ரீரங்கத்து பக்தர், “சுவாமி! ஸ்ரீரங்கத்து மண் ஒரு பிடி கொண்டு வாருங்கள். நான் தினமும் நெற்றியில் இட்டுக்கொள்கிறேன்” என்றார்.

வடநாட்டு பக்தர் மனங்குளிர தரிசனம் செய்து கொண்டு திரும்பும்போது, மேல் துண்டில் ஒரு கைப்பிடி மண் எடுத்து முடிந்து கொண்டார்.

ஸ்ரீரங்கத்து பக்தரின் குடிசைக்கு வந்து முடிச்சை அவிழ்த்தால், அதில் 5,6 சாளக்கிராமங்கள் இருந்தன. வடநாட்டு பக்தர் திகைத்துப் போனார். தாம் எடுத்து முடிந்தது மண்தான். திறந்தால் சாளக்ராமங்கள் இருக்கின்றன என்றால், இவரிடம் ஏதோ விசேஷ பாவம் இருக்கிறது என்று புரிந்தது. அதனால், “ஏன் தாங்கள் ஸ்ரீரங்கனைத் தரிசனம் செய்வதில்லை. காரணம் என்ன?” என்று வினவினார்.

இதையும் படியுங்கள்:
மூலப்பொருட்கள் ஒன்று; சத்தான பொடி வகைகள் மூன்று!
srirangam perumal

அதற்கு குடிசைவாசி, “சுவாமி! தினமும் காவிரியில் நீந்தி அக்கரை போவேன். மண்ணில் கால் வைக்கவே கூசும். எத்தனை எத்தனை மகான்கள், ஆச்சார்யப் பெருமக்கள் நடமாடிய இடம். நாம் கால் வைத்து நடப்பதா என்று காவிரிக் கரையிலிருந்தே ராய கோபுரத்தைப் பார்த்து, கை கூப்பி சேவித்துவிட்டுத் திரும்பி விடுவேன். அவ்வளவுதான். கோயிலுக்குப் போனதே இல்லை.”

“எவ்வளவு பெரிய மகான், மனதாலும் பவித்ரமானவர். அவரைப் போய் நொந்து கொண்டோமே” என்று வடநாட்டு பக்தர் அவர் காலில் விழுந்தார். இது, பகவானை விட பக்தருக்கு ஏற்றம் என்பதைத் தெரிவிக்கிறது.

ஸ்ரீ அனந்த பத்மநாபாச்சாரியார் உரையில் கேட்டவர்:

-இந்திரா பத்மநாபன், திருச்சி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com