புராணக் கதை: பிள்ளைக் கறி கேட்ட அடியவரும் சிறுத்தொண்ட நாயனாரும்!

சிறுத்தொண்ட நாயனார்
சிறுத்தொண்ட நாயனார்

சிறுத்தொண்ட நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இவர் இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்ட சேனாதிபதியாக நரசிம்ம பல்லவரிடம் பணியாற்றினார். காவிரி வளநாட்டில் திருச்செங்காட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். இவர் ஆயுர் வேதக்கலையிலும், வடநூற்கலையிலும், படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர். யானையேற்றம், குதிரையேற்றம் ஆகியவற்றிலும் வல்லவர். மிகுந்த சிவபக்தர்.

நரசிம்ம பல்லவரிடம் சேனாதிபதியாய் போர்முனையில் பகையரசர்களை வெற்றி கொண்டவர். இவர் வாதாபி நகரத்தை வெற்றி கொண்டு அங்கிருந்து பலவகை செல்வங்களையும், யானை, குதிரை முதலியவற்றையும் கைப்பற்றினார். அரசன் இவரது வீரத்தைப் புகழ்ந்து பாராட்டினார்.

அந்நிலையில் அமைச்சர்கள், ‘அரசே! இவரிடம் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் பண்பு உள்ளது. இதன் காரணமாக இவரை போரில் எவராலும் வெல்ல முடியவில்லை என்றனர். இதனைக் கேட்டு வியந்த அரசன் அவருக்கு எண்ணிலா செல்வ வளத்தையும், நல்நிலம், கால்நடைகள் ஆகியவற்றை அளித்து வணங்கி, 'நீர் உம்முடைய திருத்தொண்டின் பணியினை செய்வீராக’ என வாழ்த்தி விடை கொடுத்தனுப்பினார்.

சிவத் தொண்டராக மன்னவனிடம் விடைபெற்ற பரஞ்சோதியார், தமது ஊராகிய திருச்செங்காட்டங்குடியினை அடைந்தார். அங்கு கணபதீச்சரத்து இறைவனை இறைஞ்சிச் வணங்கி சிவ தொண்டுகளை தவறாது செய்து வந்தார். இவர் திருவெண்காடு நங்கையை மணம் முடித்தார். நங்கையாருடன் இல்லறத்தினை இனிதே நிகழ்த்தி நாள்தோறும் சிவனடியார்களுக்குத் உணவு வழங்கிக் பின் தாம் உண்ணலை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

Lord sivan parvathi
Lord sivan parvathi

பரஞ்சோதியார் சிவனடியார்களை விரும்பித் தொழுது, அவர் மிகச் சிறியவராகப் பணிந்து வணங்கியமையால் 'சிறுத்தொண்டர்' என அழைக்கப்பட்டார். இவருக்கு சீராளன் என்னும் மகன் பிறந்தான். அப்பிள்ளைக்கு ஐந்து வயது வந்தபொழுது பள்ளியில் கல்வி பயில வைத்தார். சிறுத்தொண்டரது உண்மை அன்பை உலகுக்கு அறிவிக்க விரும்பிய சிவபெருமான், பைரவ அடியாராக வேடந்தாங்கி, திருச்செங்காட்டங்குடியை அடைந்தார்.

சிறுத்தொண்டரது வீட்டு வாயிலை அடைந்து ‘தொண்டர்க்குச் சோறளிக்கும் சிறுத்தொண்டர் இவ்வீட்டில் உள்ளாரோ?’ என வினவி நின்றார். அம்மொழியினைக் கேட்ட மனைவியார், முன்வந்து வணங்கி, ‘அவர் அடியாரைத் தேடி வெளியே சென்றுள்ளார். அடியார் வீட்டின் உள்ளே எழுந்தருள வேண்டும்’ என வணங்கினார்.  பைரவ சுவாமியார் அவரை நோக்கி, ‘மாதர்கள் இருக்கும் இடத்தில் நாம் தனியே புக மாட்டோம்’ என்றார்.

அதுகேட்ட திருவெண்காட்டு நங்கையார். ‘இவ்வடியவர் போய்விடுவாரோ’ என்று    அஞ்சி விரைந்து உள்ளிருந்து வீட்டு வாயிலிற்கு வந்து ‘எம்பெருமானே! அமுது செய்விப்பதற்கு அடியார் எவரையும் காணாமல் வெளியே தேடி சென்றுள்ளார்.  இங்கு தாங்கள் எழுந்தருளியதனைக் கண்டால் தாம் பெற்ற பெரும் பேறெனக் கொள்வார். இனிச் சிறிதும் தாமதிக்கமாட்டார் இப்பொழுதுதே வந்துவிடுவார். தேவரீர் வீட்டினுள் எழுந்தருளி இருப்பீராக’ என வேண்டினார்.

அதுகேட்ட பைரவர் ‘மாதரசியே நான் மிகவும் பசியாக உள்ளோம், சிறுத்தொண்டரைக் காண வந்தோம். அவரின்றி இங்கு தங்க மாட்டோம். கணபதீச்சரத்து ஆத்தி மரத்தின் கீழ் இருக்கின்றோம். அவர் வந்தால் நாம் வந்த செய்தியைச் சொல்வீராக’ எனக் கூறிச் சென்று திருவாத்தி மரநிழலின் கீழ் அமர்ந்தருளினார். அடியார்களைத் தேடி வெளியே சென்று திரும்பிய சிறுத்தொண்டர், அடியார் ஒருவரையும் காணாமையை மனைவியாருக்குச் சொல்லி வருந்தினார். அப்பொழுது மனைவியார் அடியார் ஒருவர் வந்த செய்தியைக் கூறினார். சிறுத்தொண்டர் மகிழ்வுடன் விரைவாகச் சென்று, ஆத்தியின் கீழமர்ந்த அடியார் திருவடிகளைப் பணிந்து நின்றார்.

பணிந்து நின்ற சிறுத்தொண்டரை நோக்கிய பைரவ சுவாமியார் “நீரோ பெரிய சிறுத்தொண்டர்?” என வினவினார். சிறுத்தொண்டர் அவரை நோக்கி வணங்கி, அடியார்களைப் பணிந்து போற்றுவதற்குரிய தகுதி இல்லாதவனாயினும், சிவனடியார்கள், கருணையினால் என்னை அவ்வாறு அழைப்பர்” என்று கூறி பின் “இன்று சிவனடியார்களை அமுது செய்விக்க விரும்பி எங்கு தேடியும் காணப்பெற்றிலேன்’ தவத்தால் கண்டேன். அடியேன் வீட்டில் எழுந்தருளி அமுது செய்தருளல் வேண்டும்’ என வேண்டிக் கொண்டார். அதுகேட்ட பைரவர், சிறுத்தொண்டரை நோக்கி, ‘தவச்செல்வரே! உம்மைக் காணும் விருப்புடன் இங்கு வந்தோம். நாம் உத்தராபதியோம். எம்மைப் பரிவுடன் உண்பிக்க உம்மால் முடியாது; செய்கை அரியது’ என்று கூறினார். ‘தேவரீர் அமுது செய்யும் இயல்பினை கூறினால், விரைந்து உணவு சமைக்கச் செய்வேன். சிவனடியார் கிடைக்கப் பெற்றால் தேட முடியாதனவும் எளிதில் கிடைப்பதாகும் என்று சிறுத்தொண்டர் உரைத்தார்.

அதனைக் கேட்ட பைரவகோலப் பெருமான், ‘எம் அன்புக்குரிய தொண்டரே! நாம் ஆறு மாதத்திற்கு ஒரு தடவை பசுவைக் கொன்று உண்ணுவது. அதற்குரிய நாளும் இன்றேயாகும். உம்மால் எம்மை உண்பிக்க முடியாது’ என்றார். அதுகேட்ட சிறுத்தொண்டர், ‘மிகவும் நன்று, மூவகைப் பசு நிரையும் என்னிடமுள்ளன. உமக்கு அமுதாகும் பசு இதுவெனத் தெரிவித்தால் நான் போய் விரைந்து சமைத்துக் காலம் தப்பாமல் வருவேன் என்று கூறி தொழுதார். பைரவர் அவரை நோக்கி, ‘நாம் உண்ணக் கொல்லும் பசு மனிதன். அதுவும் ஐந்து வயதுள், உறுப்பில் மறு இல்லாதிருத்தல் வேண்டும்’ எனக் கூறினார். இதனைக் கேட்ட சிறுத்தொண்டரும் எதுவும் அரியதில்லை என்றார்.

‘தனது குடிக்கு ஒரு மகனான தன் மகனை மனமுவந்து தாய் பிடிக்க தந்தை அரிந்து குற்றமின்றி சமைத்த கறியினை நாம் உண்பது’ எனக் கூறினார். இதனைக் கேட்ட சிறுதொண்டர் யான் இதனை சமைக்கப் பெறுவேன் என்று கூறி வீட்டை அடைந்தார்.

வீட்டு வாயிலில் கணவர் வருகையை எதிர்பார்த்து நின்ற மனைவியார், அவரது மலர்ந்த முகங்கண்டு, வந்த அடியாரைப் பற்றி வினவினார். சிறுத்தொண்டர், ‘ஒரு குடிக்கு ஒரு மகனாயும் ஐந்து வயதுடையவனாயும் உறுப்பில் ஊனமற்றனாயுமுள்ள பிள்ளையைத் தாய் பிடிக்க தந்தை மகிழ்ச்சியுடன் அரிந்து கறி சமைத்தால்தாம் திருவமுது செய்வதாகக் கூறினார்’ என்றார்.

அதுகேட்ட கற்பிற் சிறந்த மனைவியார், பெரிய பைரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்கு உரிய வகையால் அமுதளிப்போம் என தமது சம்மதத்தை முன்னர் புலப்படுத்தினார். பின்னர் ஒருவனாகி ஒரு குடிக்கு வரும் அச்சிறுவனைப் எவ்வாறு பெறுவது? என வினவினார். சிறுத்தொண்டர் மனைவியாரின் முகத்தை நோக்கி, ‘இத்தகமையுடைய பிள்ளையை, பெரும் செல்வம் கொடுத்தாலும் தருவார் இல்லை.  நேர் நின்று தம் பிள்ளையைத் தாமே அரியும் தாய் தந்தையார் இருக்க மாட்டார்கள். ஆகவே நீ பெற்ற மைந்தனை இங்கு அழைப்போம்’ என்றார்.

சிறுத்தொண்டர் தம் மைந்தர் வேதம் ஓதச் சென்ற பள்ளிக்குச் சென்றார். பாதச் சலங்கை ஒலியெழுப்பச் சீராளன் ஓடிவந்து தந்தையைத் தழுவிய நிலையில், சிறுத்தொண்டர் மைந்தனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தார். மைந்தனை எதிர் சென்று வாங்கிய வெண்காட்டு நங்கையார் பிள்ளையைத் தலைசீவி, முகம் துடைத்துத் திருமஞ்சனமாட்டிக் கோலஞ்செய்து கணவர் கையில் கொடுத்தார். பிள்ளையைக் கையிற்கொண்ட சிறுத்தொண்டர், அடியார்க்கு உணவாகும் பிள்ளை என்று மைந்தனை உச்சிமோவாது, மார்பிலணைத்து முத்தம் கொள்ளாது, அடியார்க்கு அமுதமளிக்க அடுக்களையிற் செல்லாது, வேறிடத்திற்கு சென்றார்.

இதையும் படியுங்கள்:
சத்துமிகுந்த சோயாவை எவ்வகையில் சமைத்தால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்?
சிறுத்தொண்ட நாயனார்

தந்தையார் பிள்ளையின் தலையைப் பிடித்தார், தாயார் பிள்ளையின் கால் இரண்டினையும் மடியின் இடுக்கிக் கொண்டார். அதனைக் கண்ட மைந்தன் பெற்றோர் முகம் நோக்கி மகிழ்ந்து நகைத்தனன். தனிமா மகனைத் தந்தையார், கருவிகொண்டு தலையரிவாராய் இருவர் மனமும் பேருவகை எய்தி அச்செயலினை செய்தனர். தலை தவிர்த்து பிற உறுப்புக்களின் இறைச்சிகளையெல்லாம் அறுத்துப் பாகம் பண்ணி வேறு கறிகளும் சமைத்துச் சோறும் சமைத்துக் கணவருக்குத் தெரிவித்தார். சிறுத்தொண்டர், ஆர்வத்துடன் விரைந்து சென்று திருவாத்தியின் கீழிருந்த பைரவ சுவாமிகளை வணங்கி, ‘தேவரீர் அடியேன் இல்லத்திற்கு எழுந்தருளி அமுது செய்தருள வேண்டும்’ என்று ஆர்வத்தோடு அழைத்தார். ‘தேவரீர் பசித்தருளக் காலந்தாழ்த்தினேன். ஆயினும் தேவரீர் சொல்லியவண்ணம் திருவமுது சமைத்தேன். எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும்’ என வேண்டினார்.

அடியவரைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்தார். வெண்காட்டு நங்கையார் கொணர்ந்த தூய நீரினால் அடியார் பாதங்களை வணங்கினார் சிறுத்தொண்டர். திருவெண்காட்டு நங்கையார் வெண்துகில் விரிப்பில் செந்நெற்சோறும் கறியமுதும் படைத்தார். அதனைக் கண்ட பைரவர் அவரை நோக்கி, 'சொன்ன முறையிற் கொன்ற பசுவினது உறுப்பு எல்லாவற்றையும் கொண்டு சுவை நிரம்பக் கறியாக்கி வைத்தீரோ?' என்றார். தலை இறைச்சி திருவமுதுக்கு ஆகாதென்று கழித்துவிட்டோம்' என்றார் வெண்காட்டு நங்கையார். 'அதுவும் கூட நாம் உண்பது' என்றார் பைரவர். அதுகேட்டுச் சிறுத்தொண்டரும் மனைவியாரும் திகைத்து நின்றனர். அப்பொழுது சந்தனத்தாதியார், 'அந்தத் தலையிறைச்சி, வந்த தொண்டர் அமுது செய்யும் பொழுது நினைக்கவரும் என்று முன்னரே கறியாக்கி வைத்துள்ளேன்' என்று சொல்லி எடுத்துக் கொடுத்தார். திருவெண்காட்டு நங்கையார் முகமலர்ந்து அதனை வாங்கிப் படைத்தார். அதன்பின் பைரவர், சிறுத்தொண்டரைப் பார்த்து 'இங்கு நமக்கு தனியே உண்ண ஒண்ணாது, இறைவனடியார் இப்பக்கத்தே உள்ளாரை அழைத்துவாரும்' என்றார். அதுகேட்ட சிறுத்தொண்டர் 'அடியார் அமுது செய்ய இடையூறு வரும் ' என்று வருந்தினார். வீட்டின் பின்னால் சென்று பார்த்தார். அடியார் ஒருவரையும் காணாது முகத்தில் வாட்டம் பெருக முதல்வரை வணங்கி யாரும் இல்லையே என்று கூறி வருந்தினார்.

நீர் எம்முடன் உணவு உண்ணலாமே என்று அடியார் பணித்தார். உடனமர்ந்த சிறுத்தொண்டர், அடியாரை உண்பிக்க வேண்டி தாம் உண்ணப் புகுந்தார். அதுகண்ட பைரவர் அவரைத் தடுத்தருளி, 'நாம் ஆறு மாதம் கழித்து உண்போம். நாம் உண்ணுமளவும் பொறுத்திராது நாளும் சோறு உண்ணும் நீர் முன்பு உண்பது ஏன்? நம்முடன் இருந்துண்ண மகனினைப் பெற்றீராயின் அம்மைந்தனை வரச் சொல்லும்' என்றார். அதனைக் கேட்ட சிறுத்தொண்டர் 'இப்போது அவன் உதவ மாட்டான்' என்றார். 'நாம் உண்பது அவன் வந்தால்தான் அவனை அழையும்' என்றார் பைரவர்.

அச்சொற்கேட்டுத் தரியாது சிறுத்தொண்டர் மனைவியாரோடும் புறத்தே போய் அழைத்தனர். அவர் மனைவியாரும் தலைவர் பணியில் தலை நிற்பவராய் 'செய்மணியே! சீராளா! வாராய். சிவனடியார் நாம் மகிழும் வகையால் உடனுண்ண அழைக்கின்றார்' என்று ஓலமிட்டழைத்தனர்.

சிறுத்தொண்டர்
சிறுத்தொண்டர்

அப்பொழுது பரமன் அருளால் பள்ளிக்கூடத்தினின்று ஓடி வருபவனைப் போன்று சீராளன் வந்தான். வந்த புதல்வனைத் தாயார் தழுவியெடுத்தார். 'சிவனடியார் அமுது செய்யப் பெற்றோம்' என்னும் மகிழ்ச்சியால் கணவர் கையில் கொடுத்தார். வந்த மைந்தரை அழைத்துக் கொண்டு அடியாரை அமுது செய்விப்பதற்கு உள்ளே புகுந்த சிறுத்தொண்டர் பைரவக் கோலத்தொண்டரைக் காணாதவராய்ச் சிந்தை கலங்கித் திகைத்து நின்றார்.

அப்பொழுது மறைந்த அம்முதல்வர் உமையம்மை யாரோடும், முருகனாகிய குழந்தையுடனும் விடை மீது அமர்ந்து சிறுதொண்டரும், மனைவியும் காண எழுந்தருளித் திருவருள் புரிந்தார். அன்பின் வென்ற தொண்டராகிய சிறுத்தொண்டரும், அவர் மனைவியாரும், சீராளனும் தம் முன்னே தோன்றிய பெருமானை எலும்பும், மனமும் கரைந்துருக துதித்துப் போற்றினார்கள். அங்கு தம்மை வழிபட்டு நின்ற சிறுத்தொண்டர், மனைவியார், மகனார், தாதியார் நால்வரையும் தம்மை என்றும் பிரியாது இறைஞ்சியிருக்கும் வண்ணம் உடன் கொண்டு திருக்கயிலையை அடைந்தருளினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com