
சமையலறைச் சந்தேகங்கள் ... மல்லிகா பத்ரிநாத் தரும் பதில்கள்!
சோயாபீன்ஸ் மட்டும் அன்றி அதிலிவிருந்து தயாரிக்கப்படும் சோயா பால், டோபு எனப்படும் சோயா பனீர், சோயா உருண்டைகள் எதுவானாலும் அதில் உள்ள புரதச்சத்து சிறந்த புரதமாக எல்லா விஞ்ஞானிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.
தாங்கள் கேட்டபடி அது குழந்தைகள் உண்ணும்படி ருசியாக சமைப்பது என்பது மிக முக்கியம். சோயாவை அப்படியே சுண்டல் செய்தால் ருசி இல்லாததால் சாப்பிட மாட்டார்கள். அதனால் சோயாவை மட்டும் உபயோகப்படுத்தி சுண்டல் செய்யாமல் மற்ற பயறு வகைகளோடு சேர்த்துத் தயாரிக்கவும்.
சோயாவை மட்டும் தனியாக ஊறவைக்கவும். தண்ணீரை மாற்றி வேறு தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவைக்கவும். சோயா பீன்ஸ் வெடிக்கும்வரை மெத்தென்று வேக வைக்கவேண்டும். மற்ற பயறு வகைகளைவிட சோயா வேக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சரியாக வேகவில்லையென்றால் ஜீரணமாவது கடினம். வயிற்றில் 'காஸ்' சேர்ந்துவிடும்.
இதைப்போல வேகவைத்ததை உபயோகப்படுத்தி பூரி, சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள 'சைட் டிஷ் செய்யலாம். சன்னா, பட்டாணி, ராஜ்மா பீன்ஸ் போன்ற எந்த மசாலா செய்தாலும் பாதிக்குப் பாதி என்ற அளவில் சோயாவை சேர்க்கலாம். தனியாகச் செய்யப்படும்போது அவ்வளவு ருசி இருக்காது.
மற்றபடி இட்லிக்கு, தோசைக்கு என்று மாவு அரைக்கும்போது உளுந்தைக் குறைத்து சோயாவை தனியே ஊறவைத்து அரைத்துச் சேர்க்கலாம்.
சப்பாத்திக்கு மாவு அரைக்கும்போது 5க்கு 1 என்ற விகிதத்தில் சோயாவை இலேசாக வறுத்து கோதுமையுடன் அரைக்கலாம்.
சோயா உருண்டைகளை மிகச் சூடான தண்ணீரில் போட்டுப் பிழிந்து எடுக்கவும். (இரண்டு தடவை செய்தால் அந்த அளவு சோயா வாடை இருக்காது) இதை பொரியலில் மற்ற காய்கறிகளோடு சேர்க்கலாம். அப்படியே சேர்க்காமல் மிக்ஸியில் ஒரு தடவை திருப்பிப் பொடி செய்து சேர்த்தால் நன்றாகக் கலந்து விடும். ருசியாக இருக்கும்.
சிறிய துகள்களாகக் கிடைக்கும் சோயாவை சுடுநீரில் போட்டுப் பிழிந்து சேர்க்கலாம். குழம்பில் சேர்க்கலாம். கிரேவியில் மற்ற காய்கறிகளோடு சேர்த்துத் தயாரிக்கவும். பிரியாணியில் போடலாம். கட்லெட் செய்யும்போது இதைச் சேர்த்துச் செய்யலாம்.
சோயா உருண்டைகளை நெய்யில் வறுத்துப் பொடி செய்து எல்லாவிதமான அல்வா, லட்டு, பாயசம் போன்றவைகளுடன் சேர்த்துக்கொள்ளலாம். சோயா பாலை அப்படியே குடிக்கலாம் அல்லது அந்தந்த காலகட்டங்களில் கிடைக்கும் பழங்களுடன் சேர்த்து 'மில்க் ஷேக்' செய்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
சோயா பனீரை கிரேவி, பொரியல், கட்லெட், சாண்ட்விச், தோசையின் மேல் போடும் மசாலா என்று பல வகையிலும் உபயோகப்படுத்தலாம். இந்த பனீரை எண்ணெயில் பொரிக்கக் கூடாது. அப்படியே இலேசாக வதக்கியோ, நேரடியாக கிரேவியிலோ, துருவியோ சேர்க்கலாம்.
சட்னி, மோர்க்குழம்பு, அவியல் போன்று தேங்காய் அரைத்துச் செய்யும் எந்தவிதமான குழம்பிலும் தேங்காயைக் குறைத்துவிட்டு கடைசியில் துருவிய சோயா பனீரை சேர்த்து அரைத்துச் சேர்க்கலாம்.
இதைப்போல பலவிதங்களிலும் சோயாவை நமது தினப்படி சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். தனியாக சோயாவை மட்டும் செய்யும்போது அந்த ருசி பழகாததால் சாப்பிட கஷ்டப்படுபவர்களுக்கு இதைப்போல சேர்த்தால் ருசி பழகிவிடும்.
முளைவிட்ட பயறு வகைகளை எவ்வாறு 'சாலட்' ஆகவும், சமையலில் உப யோகிப்பது என்றும் தெரிவிக்கவும்.
எலுமிச்சம் பழ ஜூஸ் கலந்து செய்யும் எந்த காய்கறி சாலட்' ஆனாலும் முளை விட்ட பயறை கலந்து கொள்ளலாம். கேரட், தக்காளி, வெள்ளரிக்காய் போன்ற பலவிதமான காய்கறிகளுடன் பயறு ருசியில் சேர்ந்துகொள்ளும். சுலபமாக.
மற்றபடி சமையலில் இதை இலேசாக ஆவியில் வேகவைத்து கரகரப்பாக அரைத்து வதக்கி சப்பாத்திக்கு உள்ளே வைக்கும் ஸ்டப்பிங் (பூரணம்) செய்யலாம். ஆவியில் வேகவைத்ததை பூசணிக்காய், பரங்கிக்காய், உருளை, சேனை போன்ற காய்கறி குழம்பில் சேர்த்துச் செய்யலாம். கிரேவியில் மற்ற காய்கறிகளுடன் சேர்த்துச் செய்யலாம்.
தோசைக்கு உள்ளே வைக்கும் மசாலாவுடன் சேர்க்கலாம், கட்லெட் போன்றவைகளிலும் பொரியலில் காய்கறிகளுடன் சேர்த்தும் செய்யலாம். ருசியாக இருக்கும்.