'என்னைப் பெற்ற தாயே' -ஏன்?
உலகத்தை காக்கும் வருண பகவானிடம் இருந்து அவனைக் காக்கும் லட்சுமி தாயார் கோபம் கொண்டு பிரிந்து வந்து நின்ற இடத்திற்கு 'திருநின்றவூர்' என்று பெயர். வருண பகவானின் சமாதானத்தை ஏற்காதவராக இருந்தார் தாயார். அப்பொழுது வருண பகவான் பெருமாளிடம் சென்று முறை இட, அவர் தாயாருக்கு சமாதானம் கூறி வைகுண்டம் சென்றதாக கதை. இக்கதை அமையப்பட்ட திருக்கோயில் அருள்மிகு பக்தவச்சல பெருமாள் திருக்கோயில் ஆகும்.
தாயாரை சமாதானப்படுத்த வருண பகவான் 'என்னைப் பெற்ற தாயே' என அழைத்ததால் என்னைப் பெற்ற தாயார் என்ற திருநாமத்துடன் தாயார் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளுகிறார்.
கோயில் அமைப்பு: 108 வைணவ திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இது இந்து சமய அறங்காவலர் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இத்திருக்கோயிலில் திருமால் திருமகள் பூமகளுடன் நின்றகோலத்தில் பஞ்சாயுதம் தாங்கி சுமார் 11 அடி உயரத்தில் காட்சி தருகிறார். மூலவர் மற்றும் உற்சவர் திருநாமம் அருள்மிகு பக்தவச்சலப் பெருமாள் ஆகும். மூலவர் பெருமாளின் வலது புறம் தாயார் சன்னதி உள்ளது.
கோயிலின் தனிச்சிறப்பு:
புராதனமான சுதர்சன ஆழ்வார் சன்னதியும, ஆதிசேஷனுக்கு என உருவோடு கூடிய ஆதிசேஷன் தனி சன்னதியும் கொண்ட ஒரே தலம் இத்திருத்தலம் என்பது பெருமை உடையது.
பிரம்மாண்டமான திருவிழாக்கள்:
ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், திருநட்சத்திரங்கள், சித்ரா பௌர்ணமி, ஆனிகருடன், ஆடி கருடன், பவித்ரோத்சவம் ,புரட்டாசி சனிக்கிழமைகள், திருக்கல்யாண உற்சவம் ,தீபாவளி, திருக்கார்த்திகை, தனுர் மாதம், பகல் பத்து, ராப்பத்து , வைகுண்ட ஏகாதசி, பரமபத வாசல் திறப்பு, போகி, திருக்கல்யாணம், தைப்பொங்கல், கனுபார் வேட்டை, இரத சப்தமி, மாசிமகம் , பங்குனி மாதம் 10 நாட்கள் பிரமோற்சவ திருவிழாவும் அதன் மூன்றாம் நாள் அதிகாலை கருட சேவையும் ஏழாம் நாள் திருத்தேரும் பத்தாம் நாள் சப்தாவர்ண உற்சவமும் மிகச் சிறப்பானவை.
பூஜை முறை:
தினமும் காலை 7.30முதல் 11.30 வரையும் மாலை 4.30முதல் 8.30 வரையும் தரிசனத்திற்காகவும் பூஜைக்காகவும் சன்னிதிகள் திறந்திருக்கும் .பாஞ்சராத்திர ஆகம முறைப்படி பூஜை நடைபெறுகிறது. விமானம் ஸ்ரீனிவாச விமானம். இதன் தல விருட்சம் பூச்சொறியும் பாரிஜாதம் எனப்படும் பவளமல்லி .தீர்த்தம் வருண புஷ்கரணி எனப்படும். இத்தலத்தில் தரிசிப்பதற்கு ஒவ்வொரு பௌர்ணமி, உத்திரம் திருவோணம்,வெள்ளி, சனிக்கிழமைகள் மிகவும் உகந்த நாட்களாகும்.
மங்களா சாசனம்:
திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். திருமங்கை ஆழ்வார் இத்திருத்தலத்தை பாடாது சென்று விடவே தாயார் பெருமாளை அனுப்பி அவரிடம் இருந்து பாடல் வாங்கி வர கூறினார். மாமல்லபுரம் வந்துவிட்ட அவர் ஒரு பாடல் பாடி கொடுத்து அனுப்ப, அதை கண்ணுற்ற தாயார் இந்த கோயிலுக்கு இந்த ஒரு பாடல் மட்டும் தானா? இன்னும் வாங்கி வாருங்கள் என்று கூற, திருக்கண்ணமங்கை வந்துவிட்ட திருமங்கை ஆழ்வார் பக்தவச்சல பெருமாள் வந்திருப்பதை ஓரக்கண்ணால் அறிந்து அவருக்காகவும் மங்களாசாசனம் செய்தார்.
ஆதலால் திருமங்கை ஆழ்வார் இக்கோயிலை கடல் மல்லையைப் பாடும்போதும், திருக்கண்ணமங்கையைப் பாடும் போதும் இரு பாடல்களில், நின்றவூர் நின்ற நித்திலத்தை' எனவும் 'நின்றவூர் நித்திலம்' எனவும் மங்களாசாசனம் செய்து பாடுகிறார்.
இழந்ததை மீண்டும் பெற:
பக்தவச்சல பெருமாள் என்னைப் பெற்ற தாயார் இருவருக்கும் துளசி மாலை சார்த்தி வழிபட்டால் குடும்ப ஒற்றுமை நிலவும் என்பது நம்பிக்கை. பிரிந்த தம்பதியர் ஒன்றிணைவர். இணக்கமான சூழ்நிலை குடும்பத்தில் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இழந்ததை கிடைக்கப் பெற அனைவரும் சென்று வழிபட்டு வருவோம்! தம்பதி சமேதர்களின் அருளைப் பெறுவோம்!