'இறகு இல்லாத சரபேஸ்வரர்' அருள்பாலிக்கும் திரிசூலம் திரிசூலநாதர் திருக்கோவில்!

The Trisula Nath Temple
The Trisula Nath Temple
Published on

சென்னையில் திரிசூலம் ரயில் நிலையத்திற்கு அருகில் நான்கு மலை குன்றுகளுக்கு நடுவே அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமையான திரிசூலநாதர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. பழமை வாய்ந்தது. இந்த நான்கு மலைகளும் நான்கு வேதங்களாக கருதப்படுகின்றன. வேதத்தின் உட்பொருளாக அதன் நடுவே சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார். பிரம்மா தனது ஆணவம் அடங்கும் பொருட்டு இத்தலத்தை நிர்மாணித்து வழிபட்டதாக புராண வரலாறு கூறுகிறது. எனவே இத்தலத்திற்கு 'பிரம்மபுரி' என்றும், ஈசனுக்கு 'பிரம்மபுரீஸ்வரர்' என்றும் பெயருள்ளது.

தல சிறப்பு:

மூலவர் திரிசூலநாதர். உற்சவர் சந்திரசேகரர். அம்பாள் பெயர் திரிபுரசுந்தரி. இக் கோவிலின் தல விருட்சம் மரமல்லி. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். இங்கு இறகு இல்லாத சரபேஸ்வரர் அருள்பாலிப்பது இக்கோவிலின் முக்கியமான தலசிறப்பாகும். இங்கு மூலவர் சன்னிதியின் மேல் உள்ள விமானம் கஜபிருஷ்டம் எனப்படுகிறது. இத்தலத்து விநாயகர் 'நாக யக்ஞோபவீத கணபதி' எனப்படுகிறார். இக்கோவிலில் ஆதிசங்கரருக்கு சன்னதி உள்ளது.

ஷோடச லிங்க வடிவில் (16 பட்டை லிங்கம்) மார்கண்டேஸ்வரர் தனி சன்னதியில் காட்சி தருகிறார். முருகன் வள்ளி தெய்வானையுடனும், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, ஐயப்பன் போன்ற சன்னதிகளும் உள்ளன. ஈசன் கோவிலில் சீனிவாசப் பெருமாளும் காட்சி தருகிறார். வைகுண்ட ஏகாதசி அன்று சீனிவாச பெருமாளுக்கு முத்தங்கி சேவை மிகச் சிறப்பாக நடைபெறும்.

தனிச் சிறப்பு:

திரிசூலநாதர் லிங்க வடிவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஈசன் சன்னதியில் சிவனுக்கு அருகில் 'சொர்ணாம்பிகை' காட்சி தருவது விசேஷமான அமைப்பாகும். பிரதான அம்பிகையாக திரிபுரசுந்தரி தனி சன்னதியில் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். அன்னையின் திருக்கரங்களில் அட்சத மாலையும், தாமரைப் பூவும் காணப்படுகின்றது. இதன் மூலம் ஞானத்தையும் செல்வத்தையும் ஒரு சேர தரும் திரிபுரசுந்தரியை வணங்கிட செல்வ வளமும், ஞானமும் கிடைக்கும். தை, ஆடி வெள்ளிக் கிழமைகளில் 'பூப்பாவாடை' என்னும் வைபவம் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. பல சோழ மன்னர்கள் இந்த ஆலயத்திற்கு திருப்பணிகள் செய்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

இதையும் படியுங்கள்:
பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் தழுவக் குழைந்த ஈசன் அருள்பாலிக்கும் தலம்!
The Trisula Nath Temple

வீராசன தட்சிணாமூர்த்தி:

சிவன் சன்னதி கோஷ்டத்தில் வீராசன தக்ஷிணாமூர்த்தி வலது காலை முயலகன் மீது ஊன்றி, இடது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். வலது செவியில் மகர குண்டலமும், இடது செவியில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருவது அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இங்குள்ள தக்ஷிணாமூர்த்திக்கு கீழே உள்ள சீடர்கள் இருவர் சின்முத்திரை காட்டியபடி காட்சி தருகின்றனர். பொதுவாக தக்ஷிணாமூர்த்திக்கு கீழே உள்ள சீடர்கள் வணங்கியபடி தான் காட்சி தருவார்கள். ஆனால் இங்கு சின்முத்திரையுடன் வித்தியாசமாக காட்சி தருகிறார்கள். இத்தகைய அமைப்பை காண்பது வெகு அபூர்வம்.

நாக யக்ஞோபவீத கணபதி:

இங்குள்ள விநாயகர் நாக யக்ஞோபவீத கணபதி எனப்படுகிறார். உடலில் உள்ள ஆறு ஆதாரங்களில் மூலாதார சக்தியான குண்டலினி நாக வடிவில் உள்ளது. இந்த விநாயகர் சிலை சுவரைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இவரை வணங்கி வேண்டுகின்றனர்.

இதையும் படியுங்கள்:
வெட்டவெளியில் அருள்பாலிக்கும் வெக்காளி அம்மன்!
The Trisula Nath Temple

யம பயம் போக்கும் சரபேஸ்வரர்:

நரசிம்மரின் உக்ரம் தணிக்க வந்த சரபேஸ்வரர் இங்கு அழகாக ஒரு தூணில் காட்சியளிக்கிறார். சரபேஸ்வரருக்கு 'சரபம்' என்ற பறவையின் இறக்கை இருக்கும். ஆனால் இங்கு சரபேஸ்வரர் இறக்கை இல்லாமல் இரண்டு முகங்கள், இரு கைகளில் மான் மழு ஏந்தி, மற்ற இரு கைகளால் நரசிம்மரை பிடித்த வண்ணம் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் சரபேஸ்வரரை காண்பதும் வெகு அபூர்வம். யம பயம் போக்கும் சரபேஸ்வரரை நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.

தல வரலாறு:

பிரம்மா தன்னுடைய படைத்தல் தொழிலை சிறப்பாக நடத்துவதற்காக லிங்கப் பிரதிஷ்டை செய்து நான்கு வேதங்களையும் சுற்றிலும் வைத்து பூஜை செய்தார். சிவபெருமானும் அவருக்கு அருள் செய்ய, லிங்கத்தைச் சுற்றி இருந்த நான்கு வேதங்களும் மலைகளாக மாறின. மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை பொதுவாக 'சுரம்' என்று அழைப்பர். எனவே சிவன் 'திருச்சுரமுடைய நாயனார்' என்று அழைக்கப்பட்டார். பின்பே திருசூலநாதர் என அழைக்கப்படுகிறார்.

கோவில் காலை 7:00 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8.30. மணி வரையிலும் திறந்திருக்கும். திரிசூலம் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோவிலுக்கு ஷேர் ஆட்டோ வசதியும் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com